178
நாடாளுமன்ற தேர்தலின் பின்னரே அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகும் என தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றைய தினம் மதியம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை உயர்த்தி, வறுமையை இல்லாதொழிக்க, வாழ்வாதரங்களை உயர்த்த கிராமிய மட்டத்தில் செயற்திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.
கம்பெரலியா வேலை திட்டத்தில் பல பிரச்சனைகள் இருந்தன அதில் பாகுபாடுகள் காட்டப்பட்டதாக குறைபாடுகள் கூறப்பட்டன. ஆனால் இந்த வேலைத்திட்டங்களில் அந்த பாகுபாடுகள் இருக்க போவதில்லை.
புதிய வேலைத்திட்டங்கள் குறைபாடுகள் அற்ற வேலை திட்டங்களாக முன்னெடுக்கவுள்ளோம். அதிகாரிகள் முன் மொழிந்த வேலைத்திட்டங்களையே முன்னெடுப்போம். அதனூடாக மக்களுக்கு தேவையான வேலை திட்டங்களையே முன்னெடுப்போம்
எதிர்வரும் திங்கட்கிழமை இந்த வருடத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலை திட்டங்கள் எவை ? வெற்றிகரமாக முடிக்கப்பட்டவை எவை ? இடை நிறுத்தப்பட்ட வேலை திட்டங்கள் எவை ? செயற்படுத்த முடியாத வேலை திட்டம் எவை ? என்பது தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்றினை நடத்தவுள்ளோம்.
டெங்கின் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை.
அதேவேளை எமது மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிரித்து செல்கின்றது. இலங்கையில் டெங்கின் தாக்கம் அதிகரித்த மாவட்டங்களில் யாழ்.மாவட்டம் இரண்டாம் இடத்தில் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே டெங்கின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு உள்ளூராட்சி சபைகள் மற்றும் பிரதேச செயலகங்கள் ரீதியில் வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பிலான மீளாய்வு கூட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நடாத்தவுள்ளோம். அதனூடாக அவற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான வளங்களை பெற்றுகொள்வது தொடர்பிலும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாட வுள்ளோம்.
சட்டவிரோத மண் அகழ்வோரை கண்காணிக்க நடவடிக்கை.
சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பிலும் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம் இது தொடர்பில் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.
யாழ்.மாவட்ட செயலாருடன் இணைந்து ஓவ்வொரு பிரதேச செயலக ரீதியாக சட்டவிரோத மண் அகழ்வுகள் இடம்பெறும் இடங்களை அடையாளம் கண்டுள்ளோம்.
அத்துடன் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடும் சந்தேக நபர்களின் விபரம் , சந்தேகத்திற்கு இடமான டிப்பர் வாகன இலக்கங்கள் , என்பவற்றை பொலிசாருக்கு வழங்கியுள்ளோம்.
அவர்கள் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கவுள்ளனர். இது தொடர்பிலும் மீளாய்வு கூட்டம் ஒன்றினை நடத்தவுள்ளோம்.
.ஈழ அகதிகள் நாடு திரும்ப வேண்டும்.
இந்தியாவில் உள்ளவர்கள் யுத்தம் காரணமாக இங்கிருந்து சென்றவர்கள். அவர்கள் மீள நாடு திரும்ப வேண்டும். அவர்கள் மட்டுமல்ல வேறு நாடுகளிலும் உள்ளவர்களும் நாடு திரும்ப வேண்டும் என்பதே எமது விருப்பம். அவ்வாறு நாடு திரும்புபவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து கொடுப்போம்.
தேர்தலின் பின்னரே அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியம்.
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பிரதமருடன் பேசியுள்ளோம். அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் அதற்கு கொள்கை ரீதியில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கான வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்கான கால அவகாசம் சற்று கூடுதலாக வேண்டும் என்பதனால் அது நாடாளுமன்ற தேர்தலின் பின்னரே அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகும் என நம்புகின்றேன். என தெரிவித்தார். #நாடாளுமன்றதேர்தல் #அரசியல் கைதிகள் #விடுதலை #அங்கஜன்
Spread the love