171
பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைக்காக சென்று காணாமல் போனவரின் வீட்டிற்கு புலனாய்வாளர்கள் சிலர் வந்து தேடுதல் நடத்தி சென்றிருந்தனர் என அவரது மனைவி தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்கு சென்ற கெருடாவில் தெற்கை சேர்ந்த பரமு விஜயகுமார் (வயது 38) என்பவரே காணாமல் போயுள்ளதாக நேற்றைய தினம் வியாழக்கிழமை அவரது மனைவியால் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது கணவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கடந்த 06ஆம் திகதி விசாரணைக்கு அழைத்திருந்தனர். அதற்காக அவர் கொழும்புக்கு சென்று இருந்தார். அன்றைய தினத்தில் இருந்து அவருடனான தொடர்பு கிடைக்கவில்லை என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறையினர் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது , குறித்த நபர் விசாரணைக்கு அன்றைய தினம் சமூகமளிக்க வில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போனவரின் மனைவியிடம் அது தொடர்பில் கேட்ட போது , தனது கணவரை 2019. 10. 23 ஆம் திகதியிடப்பட்ட அழைப்பாணை கிடைக்க பெற்றது. அதில் 2019.10.29 ஆம் திகதி வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுகொள்வதற்காக காலை 09 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் 2ஆம் மாடியில் பிரிவு இல 01இன் நிலைய பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
அழைக்கப்பட்ட தினத்தன்று எனது கணவரால் விசாரணைக்கு செல்ல முடியவில்லை. அந்நிலையில் நவம்பர் எங்கள் வீட்டிற்கு வந்த எட்டு புலனாய்வாளர்கள் வீட்டில் சோதனைகளை முன்னெடுத்ததுடன், என்னை , எனது கணவர் மற்றும் எமது மூன்று பிள்ளைகளையும் தனித்தனியாகவும் எல்லோரையும் ஒன்றாக வைத்தும் புகைப்படம் எடுத்தனர்.
பின்னர் டிசம்பர் மாத ஆரம்பத்தில் 06 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு மீண்டும் அழைப்பாணை கிடைக்கப்பெற்றது. அதனை தரும் போது , இம்முறை கட்டாயம் விசாரணைக்கு செல்ல வேண்டும் இல்லை எனில் கைது செய்யப்படுவீர் என கூறப்பட்டது.
அதனால் எனது கணவர் 5ஆம் திகதி கொழும்பு சென்றார்.மறுநாள் 6ஆம் திகதி எனக்கு தொலைபேசி அழைப்பெடுத்து தான் கொழும்பு வந்து விட்டதாகவும் , விசாரணைக்கு செல்கிறேன் என கூறினார். அதன் பிறகு அவரது தொலைபேசி செயலிழந்துள்ளது.
அதன் பிறகு கணவரை பல வழிகளில் தேடினேன். அவர் தொடர்பில் தொடர்புகள் எதுவும் கிடைக்க வில்லை 14ஆம் திகதி யாழில்.உள்ள மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்தேன்.
பின்னர் நேற்றைய தினம் 19ஆம் திகதி வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன். என தெரிவித்தார். #பயங்கரவாததடுப்புபிரிவின் #விசாரணை #காணாமல்போனவரின் #புலனாய்வாளர்கள் #தேடுதல் #புகைப்படம்
Spread the love