ராஜா பரமேஸ்வரி…
யுத்தம், கொலைகள், காணாமல் போதல்கள், வெள்ளைவான் கடத்தல்கள் போர் குற்றம் என பல நூறு குற்றச்சாட்டுக்களை தாண்டி தனிச் சிங்கள வாக்கில் இலங்கையின் முதலாவது ஆட்சியாளராக ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ தெரிவாகி உள்ளார்.
அரசியல்வாதியாக, கட்சிப் பிரமுகராக அல்லாத முன்னாள் இராணுவ அதிகாரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற இலங்கையின் அரச அதிகாரி ஒருவர் வரலாற்றில் முதலாவது தேர்தலிலேயே பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
ராஜபக்ஸ குடும்ப அரசியலின் வாரிசு, யுத்தத்தை வெற்றிகொண்ட ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸவின் தம்பி என்ற கோதாவில் தேர்தலில் போட்டியிட்டாலும், யுத்த வெற்றியின் மூலகர்த்தா ஆளுமை மிக்கவர், தற்துணிவுடன் முடிவுகளை மேற்கொள்பவர், ஒழுக்கசீலர் என்ற அவரின் தனிப்பட்ட ஆளுமைகளும், ஈஸ்டர் தாக்குதல்களால் மீண்டும் நொருங்கிப்போன சிங்கள மக்களின் மனங்களில் (ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியில் 8 சதவீதத்தை கொண்டு இருந்த படித்த உயர்வக்க கீறீஸ்த்தவர்கள் உள்ட்ட சிங்கள மக்கள்) தம்மை காக்கக் கூடிய மீட்பர் கோத்தாபயவே என்ற நம்பிக்கையும், பெரும்பான்மை சிங்களவர் மத்தியில் அவரை முன்னிறுத்தியது. அவையே வெற்றியின் முக்கிய காரணங்களாகவும் அமைந்தன.
விசேடமாக யுத்தத்தின் பின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்திலும், பின் நல்லாட்சிக் காலத்திலும் குழம்பிக் கிடந்த சிங்கள தேசத்தை அதன் குழறுபடிகளை சீர்செய்வதற்கும், தூக்கி நிறுத்துவதற்கும் ஒரு டிசிப்பிளீன் மாஸ்ரர், கட்டுக்கோப்பானவர் உத்தரவுகளை பிறப்பித்து நடைமுறைப்படுத்தக் கூடிய கராரானவர் தேவை என பெரும்பான்மை மக்கள் விரும்பியிருந்தார்கள். அந்த விருப்பத்தின் வெளிப்பாடுகளும் கோத்தாபயவின் வெற்றியை தீர்மானித்தன. அவற்றின் அடிப்படையிலேயே ஜனாதிபதியானபின் அவர் மேற்கொள்ளும் தீர்மானங்களும் நடைமுறைகளும் தொடர்கின்றன. மக்களை இலகுவில் ஈர்க்கக்கூடிய, சென்றடையக் கூடிய விடயங்களில் முதலில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.
அதில் முக்கியமானது இலங்கை நிர்வாகக் கட்டமைப்பு. மக்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்த இந்த பீரோகிரசியை ஆட்டிப்படைக்கும் அரசியல்வாதிகளளாலும், அதிகாரிகளாலும், சோம்பேறிகளாலும், ஊழல்வாதிகளாலும், துறைசாராத பொருத்தமற்ற ஊழியர்களாலும் 3 தசாப்த்தத்திற்கு மேலான யுத்த தேசத்தின் நிர்வாம், சின்னபின்னமாகி சீரழிந்து கிடக்கின்றது. இவற்றை சீர்செய்வதற்கும், மக்களின் அன்றாட வாழிவியலில் எதிர்கொள்ளும் சிக்கல்களை நிவர்த்திப்பதிலும் கோத்தாபய தன்கவனத்தை தக்கவைத்துள்ளார்.
அரச திணக்களங்களுக்கும் அலுவலகங்களுக்கும் திடிரென செல்லும் கோத்தாபய அங்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அவ்விடங்களிலேயே தீர்வுகளையும் முன்வைக்கிறார். இந்த நடைமுறை 1990களில் ஆட்சிக்கு வந்த அடிநிலை மக்களின் நாயகன் பிரேமதாஸவிடம் இருந்தது. அதுவே பிரேமதாஸவை மக்கள் தலைவனாக்கியது.
அரச கூட்டுத்தாபனங்கள், அரச திணைக்களங்கள், மத்திய வங்கி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட வங்கிச் சேவைகள், வெளிநாட்டு ராஜதந்திர சேவை உள்ளிட்ட நாட்டின் உயர்பதிகளை ஆக்கிரமித்திருந்த அரசியல் நியமனங்களில் முழுக்க முழுக்க துறைசார் நிர்வாக சேவை அதிகாரிகளையும், கல்விமான்களையும் நிமிக்கும் தீர்மானகரமான முடிவை எடுத்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறார். இராஜதந்திர சேவையில் உள்ள துறைசாராத பணியாளர்களை பணிகளை முடிவுறுத்தி நாடு திரும்புமாறு பணித்துள்ளார். ஆளுநர் நியமனங்களிலும் வயது, அனுபவம், திறமை மென்போக்கு, இனத்துவ முதன்மை ஓரளவு கடைப்பிடிக்கப்பட்டதை காண முடிகிறது. வடக்கிற்கு முன்னாள் ஆளுநர் சந்திரசிறியை நியமிக்குமாறு வடக்கின் முக்கிய அரசியல்வாதி ஒருவர் சிபாரிசு செய்த போதும் அதனை நிராகரித்து தமிழர் ஒருவரை ஆளுநராக நியமிக்கும் முடிவில் கோத்தாபய உள்ளதாக அறிய முடிகிறது. கூடவே அரச நிர்வாக கட்டமைப்புகளுக்கு எதிர்பார்த்ததை விடவும் ஒரு சில படை அதிகாரிகளையே நியமித்திருப்பதையும் காணமுடிகிறது.
அமைச்சர்கள் பிரதி, ராஜாங்க அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள், உள்ளிட்ட தனிப்பட்ட நியமனங்கள் உறவினர்களுக்கு வழங்கக் கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அரச நியமனங்களில் திறமைக்கு முன்னுரிமை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களில் இருந்து 1 லட்சம் பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்பை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. அவ்வாறே தற்போது வெளியாகி உள்ள தகவல்களின் அடிப்படையில் வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் நிர்வாகசேவையில் உள்ள தமிழர்களே அரச அதிபர்களாக தொடர்வார்கள் என ஊகிக்க முடிகிறது. கிழக்கில் மட்டக்களப்பில் தமிழ் அரச அதிபரே கடமையில் உள்ளார்.
அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச உயர் அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்கள், ஆடம்பர செலவுகள், வாகணத்தொடரணி பந்தாக்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளதாகக் கூறப்படுக்கிறது.
இவை பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு வாக்குகளை சேர்க்கும் நடவடிக்கைகளாக அமையும் என்றாலும், வெறுமனே பொதுத்தேர்தலை மட்டும் இலக்காக வைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போல் தெரியவில்லை. காரணம் கடந்த பல தசாப்த்தங்களாக நிர்வாகத்துறையில் நிலவிய அரசியல் ஆதிக்க கட்டமைப்பை தகர்க்கும் நடவடிக்கைகளில் கோத்தாபய ராஜபக்ஸ முனைவதாக தென்படுகிறது. இந்த நடைமுறை குடும்ப அரசியல் ஆதிகத்தையும், தனது மதிப்பிற்குரிய அண்ணனின் அரசியல் ஆதிக்கத்தினையும் மீறி தொடருமா? வெற்றிபெறுமா என்பதனை பொதுத்தேர்தலின் பின்பே கூற மடியும். காரணம் 2015ன் பின் அதிகாரத்தை இழந்து தவித்த பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்கள், நெருங்கியவர்கள் பொதுஜன பெரமுனவை ஆட்சிப்பீடம் ஏற்றி அதிகாரத்தையும், அடம்பரத்தையும், அனுபவிக்க காத்திருந்தார்கள்.
எனினும் கோத்தாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின் உருவாக்கப்பட்ட அமைச்சரவையில் 2015ற்கு முன்னான ஒரு தசாப்த்தத்தில் முன்னணியில் இருந்த பலர் பின்தள்ளப்பட்டு முன்னையவர்களில் தெரிவு அடிப்படையில் சிலர் மேலுயர்த்தப்பட்டு உள்ளார்கள். அதுபோல் தேர்தலில் தோல்வி கண்டவர்கள், அரசியல்வாதிகள், ஆதரவாளர்களை அரச நிறுவனங்களுக்கு தலைவர்களாக நியமித்து அவர்களை திருப்த்திப்படுத்தவும் கோத்தாபய முனையவில்லை. அதனால் பொதுத்தேர்தலின் பின் இந்த நிலையை கோத்தாபய தொடர்ந்து தக்கவைப்பாரா முடியுமா என்பதனையும் பொறுத்திருந்து பார்க்க வெண்டும்.
மறுபுறம் 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தை தொடர்ந்தாலும் சிக்கல் துறந்தாலும் சிக்கல் என்ற திரிசங்கு நிலைக்கும் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தள்ளப்பட்டு உள்ளார்.
குறிப்பாக பொதுஜன பெரமுன பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் அண்ணன் மகிந்த ராஜபக்ஸ பிரதமராக தேர்வுசெய்யப்படுவார். 19ஆவது திருத்தச் சட்டம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் வரையறை அற்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தி நாடாளுமன்றினதும் பிரதமரதும் அதிகாரத்தை அதிகரித்திருக்கிறது.
பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட அமைச்சர் பொறுப்புக்களையோ வரையறுக்கப்பட்ட திணைக்களங்களைத் தவிர்ந்த மேலதிக திணைக்களங்களையோ தனது கட்டுப்பாட்டுள் வைத்திருக்க முடியாத 19ஆவது திருத்தச் சட்டம் ஜனாதிபதி கோத்தாபயவுக்கு சற்று அசௌகரியமாகவே இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. தவிரவும் பொதுச்சேவை ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, அரசியல் அமைப்புச் சபை என்பனவும் சற்று தலையிடியை உண்டுபண்ணுபவையே. இதனால் 19அவது திருத்தச் சட்டத்தின் பல அம்சங்களை நீக்கவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ முயற்சிகளை மேற்கொள்வார்.
எனினும் தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல், ஜனாதிபதி தேர்தலின் அடிப்படையிலான கணக்குச் சூத்திரத்தை போன்றதல்ல. ஜனாதிபதி தேர்தல் கட்சிகளின் செல்வாக்கு என்பதற்கு அப்பால் தனிப்பட்ட ஆளுமையும் செல்வாக்கு செலுத்தி தனி நபர்களை நோக்கிய வாக்களிப்பாக அமைகிறது.
ஆனால் பொதுத்தேர்தல் என்பது கிராமம், நகரம், மநாகரம், மாகாணங்கள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு கட்சிகளினதும், அக்கட்சிகளில் போட்டியிடும் நபர்களினதும் வாக்குகளின் ஊடாக நிரிணயிக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் பார்த்ததால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் 14 லட்சம் வரையிலான வாக்குகளையே ஜனாதிபதியை ஆதரித்த பொதுஜன பெரமுன அதிகமாகப் பெற்றுள்ளது.
இந்த வாக்கு வித்தியாசம் நாடாளுமன்ற ஆசனங்களில் பாரிய வேறுபாடுகளை ஏற்படுத்தாது. ஏற்படுத்த வேண்டுமாயின் மேலும் வாக்குகளை பொதுஜனபெரமுன பெறவேண்டியிருக்கும். அதற்கு விரும்பியோ விரும்பாமலோ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ மேற்கொண்டுவரும் எதிர்மறையான விடயங்கள் தாக்கங்களை உண்டுபண்ணும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பொதுஜன பெரமுனவுக்கு கிடைக்கப்பெறாவிடின் அதனைப் பெற ஏனைய கட்சிகளிடம் இருந்து ஆதரவைப் பெறவேண்டும். அல்லது அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஆனால் தற்போது அதிகரித்துவரும் சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகள் சிறுபான்மைக் கட்சிகளிடம் இருந்து ஆதரவை பெறமுடியுமா? என்ற கேள்வியை ஏற்படுத்தி இருக்கிறது. தவிரவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுக்கு செக் வைக்கக்கூடிய பாராளுமன்றின் அதிகாரம் வீழ்த்தப்படுவதை எதிர்கட்சிகள், சிறுபான்மைக் கட்சிகள் விரும்புமா? என்ற கேள்வியும் எழுகின்றது.
இவற்றுக்கு அப்பால் அண்ணன் மகிந்த ராஜபக்ஸவும், அவருடன் நெருக்கமாக இருப்பவர்களும், புதிய ஆட்சியில் பாதிக்கப்பட்ட சிறீலங்காசுதந்திரக் கட்சியினரும், பொதுஜனபெரமுனவினரும் வெளிப்படையாக கூறாவிடினும் உள்ளார்ந்த வாரியாக 19ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக மாற்ற விரும்புவார்களா? என்ற சந்தேகம் பலரிடம் எழுந்துள்ளது. காரணம் ரணில் விக்கிரமசிங்கவின் 19ஆவது திருத்தச் சட்டம் தனிச் சிங்கள வாக்குகளால் ஜனாதிபதியாகி உள்ள கோத்தாபயராஜபக்ஸவிற்கு செக் வைத்திருப்பதோடு பல தலையிடிகளை உருவாக்கி இருக்கிறது என்பதனை எவரும் மறுக்க முடியாது.
அந்த வகையில் பொது எதிரியை வீழ்த்த தனது சகோதரர் கோத்தாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற தேர்வைத் தவிர மாற்று வழியில்லை என்ற நிலையில் குடும்பமாகவும் கட்சியாகவும் கோத்தாபய ராஜபக்ஸ முன்னிறுத்தப்பட்டார்.
எனினும் தற்போது அண்ணனின் ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்பட்டாலும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் பல தற்துணிவான முடிவுகள் கராரான செயற்பாடுகள் குறித்து அவர்கள் அதிர்ப்த்தி அடைந்திருப்பதாக உள்ளகதகவல்கள் கூறுகின்றன.
அதனால் தமது அரசியல் பற்றியும், தமது எதிர்கால நலன்கள் பற்றியும், வாரிசுகளின் தொடர்ச்சி பற்றியும் சிந்திக்கும் ஒரு தரப்பினருக்கும், கட்டுக்கோப்பான நாடு, ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாகம், தேசத்தின் அபிவிருத்தி பற்றி சிந்திக்கும் நிர்வாகத் திறன் கொண்ட ஜனாதிபதிக்கும் இடையிலான முரண்பாடு தொடரத்தான் போகிறது.
இதனால் தற்போதைய அரசியல் சூழலில் 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி நாடாளுமன்றின் அதிகாரத்தை வீழ்த்தி இன்னும் 5 வருடத்திற்கு அசைக்க முடியாத ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவிற்கு வரையறை அற்ற அதிகாரத்தை வழங்க பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஆளும் தரப்பு கட்சிகளின் உறுப்பினர்களே ஆதரவளிப்பார்களா? என்ற நிலை உருவாகி வருகிறது.
இவ்வாறானதொரு அரசியல் சூழலில், சிங்களதேசத்தை வெற்றிகொண்ட, வெற்றியை தக்க வைக்க முயன்றுகொண்டு இருக்கின்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தான் நினைக்கும் பிளவுபடாத தேசத்தை உருவாக்க, மனங்களால் பிளவுண்டு கிடக்கும் தமிழ்த் தேசத்தை வெல்ல முனைவாரா? வெல்வாரா?
ராஜா பரமேஸ்வரி…
தொடரும்….