ஔவையாரின் மூதுரையையே நான் முகநூலில் பதிவிட்டேன். அதனை யாரேனும் தவறாக பொருள்கோடல் செய்து மனம் வருத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்புக்கோருகிறேன் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானாந்த் தெரிவித்தார்.
யாழ்.மாநகரசபையின் மாதாந்த அமர்வு கடந்த 09ஆம் திகதி நடைபெற்ற போது , சாதி தொடர்பில் சபையில் பேசி முரண்பட்டுக்கொண்டார்கள் எனும் குற்றசாட்டு தொடர்பில் விளக்கமளிக்குமுகமாக யாழ்.ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எனது முகநூலில் எனது தனிப்பட்ட கருத்தையே பகிர்ந்தேன். அதுவும் ஔவையாரின் மூதுரையையே பகிர்ந்தேன். அதில் சாதி , இனம் , மதம் என எதனையும் குறிப்பிட்டவில்லை. நான் பகிர்ந்த ஔவையாரின் மூதுரையை யாரேனும் தவறாக பொருள் கோடல் செய்து மனம் வருந்தி இருந்தாலோ அல்லது அதனால் மனவுளைச்சலுக்கு ஆளாகி இருந்தாலோ அவர்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.
சபை அமர்வுகளில் தனிப்பட்ட விடயங்களோ அல்லது முகநூலில் எழும் விமர்சனங்கள் , முகநூல் பதிவுகள் தொடர்பில் பேச வேண்டாம் என யாழ்.மாநகர சபை முதல்வர் கடந்த அமர்வுகளிலையே பல தடவைகள் அறிவுறுத்தி இருந்தார். அதனையும் மீறி அன்றைய தினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் முகநூல் பதிவு தொடர்பில் பிரஸ்தாபித்தனர். அதே பின்னர் கருத்து முரண்பாடாக மாறியது.
கருத்து முரண்பாட்டை அடுத்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் என் மீது தண்ணீர் போத்தலால் தாக்க முற்பட்டார். அது சபை மாண்மை அவமதிக்கும் செயலாகும். குறித்த உறுப்பினர் கடந்த ஆட்சி காலத்தின் போதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்த அ. பரம்சோதி மீதும் இவ்வாறு அநாகரிகமாக தண்ணீர் போத்தலை வீசி உள்ளார்.
சபையில் குறித்த உறுப்பினர் சபை மாண்பை கெடுக்கும் முகமாக நடந்து கொண்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் முதல்வரிடம் கோரியுள்ளேன். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கிறேன்.
இதேவேளை அன்றைய தினம் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் மாநகர சபையால் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விளக்கமும் கோரப்படவில்லை.
ஆனாலும் எனது கட்சியான புளெட்டின் தலைமை ஊடாக சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரப்பட்டு உள்ளது. அது தொடர்பில் எழுத்து மூலமான விளக்கத்தை எனது கட்சி தலைமையிடம் மிக விரைவில் கையளிப்பேன். என தெரிவித்தார்.