ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சென்றார்…
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரொவ் (Serjev Lavrov) இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு இன்று (14.01.20) காலைஇலங்கை சென்றடைந்தார். அவருடன் 42 பேர் அடங்கிய தூதுகுழு அதிகாரிகளும் நாட்டை சென்றடைந்துள்ளனர். இவர்கள் இன்று காலை 6.35 அளவில் ரஷ்யாவுக்கு சொந்தமான விமானம் மூலம் நாட்டை சென்றடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவராலய அதிகாரிகள் வரவேற்றனர்.
அமெரிக்க, சீன உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கை சென்றனர்….
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான உதவிச் செயலாளர் எலிஸ் வெல்ஸ் இலங்கைக்கு சென்றுள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு அவர் இன்று (14.01.20) அதிகாலை இலங்கையை சென்றடைந்தார். அவருடன் மூவர் அடங்கிய தூதுகுழு அதிகாரிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்களை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகளும் வரவேற்றுள்ளனர்.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் உள்ளிட்டவர்களை எலிஸ் வெல்ஸ் இன்று சந்தித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளார்.
இவர்களின் பயணங்களிடையே சீன வெளிவிவகார அமைச்சர் வென் யீ இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக நேற்று (13) இலங்கையை சென்றடைந்தார். அவருடன் 16 பேர் அடங்கிய தூதுகுழு அதிகாரிகளும் நாட்டை சென்றடைந்துள்ளனர். அவர்களை இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த வரவேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.