கொடிகாமம் மிருசுவிலில் ஆண் ஒருவர் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர் தன்னை வன்புணர்வதற்கு வந்ததாகவும் தன்னைப் பாதுகாக்கப்பதற்காக அவரை தாக்கியதாகவும் அந்தப் பெண் வாக்குமூலம் வழங்கினார் என்று காவற்துறையினர் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கட்சி ஒன்றினை சேர்ந்தவர் என்றும் காவற்துறைத் தகவல்கள் தெரிவித்தன.
மிருசுவில் படித்தமகளிர் திட்டம் பகுதியில் கோவில்களில் தொண்டு செய்து கொண்டு தனிமையில் வசித்து வந்த நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார். அப்பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ரத்தினம் குகேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் அவரது சடலத்தில் காணப்பட்டன. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர், மோப் நாயின் உதவியுடன் எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள வீடொன்றை கண்டறிந்தனர். அந்த வீட்டில் வசித்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
அதன் போது, அவர் “என்னை வன்புணர்வதற்கு அவர் முயற்சித்தார். அதனால் என்னைப் பாதுகாக்கப்பதற்காக அவரை இரும்புக் கம்பிகளால் தாக்கினேன். அவர் உயிரிழந்துவிட்டார். அதன்பின்னர் அவரது சடலத்தை எடுத்துச் சென்று வீதியில் போட்டேன்” என்று அந்தப் பெண் வாக்குமூலம் வழங்கினார் என காவற்துறையினர் தெரிவித்தனர். அந்த நபரைத் தாக்கிய கம்பியை தண்ணீரால் கழுவி வைத்ததுடன், வீட்டையும் கழுவி சந்தேகநபர் சுத்தப்படுத்தியுள்ளார் என காவற்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி நீதிவான் விசாரணைகளை முன்னெடுத்தார். கொடிகாமம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்