இலங்கையில் ‘பர்தா’ அணிய உடனடி தடை விதிக்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற குழு சிபாரிசு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்தஞாயிறு தினத்தன்று, கிறிஸ்தவ தேவாலயங்கள், விடுதிகளில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து, பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு நியமிக்கப்பட்ட தேச பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு , தனது ஆய்வை முடித்துள்ளநிலையில், நாடாளுமன்றத்தில், அக்குழுவின் அறிக்கை குழுவின் தலைவர் மாலித் ஜெயதிலக்கவினால் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், முக்கியமான பல சிபாரிசுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் ‘பர்தா’ உடை அணிய உடனடியாக தடை விதிக்க வேண்டும். முகத்தை மறைக்கும்வகையில் யார் உடை அணிந்து இருந்தாலும், அவரது அடையாளம் தெரிவதற்காக, முக மறைப்பை நீக்குமாறு கேட்க காவல்துறையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். முக மறைப்பை நீக்க சம்மதிக்காவிட்டால், அந்த நபரை கைதாணை இல்லாமல் கைது செய்ய காவல்துறையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.
இன, மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையகம் ரத்து செய்வதற்காக புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். மத, இன மோதல்களை உண்டாக்கும் பெயருடன் கூடிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும். அத்தகைய அமைப்புகள், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அரசியல் கட்சியாகவோ, மதம் சாராத அரசியல் கட்சியாகவோ மாற்றப்பட வேண்டும்.
மதரசாக்களில் படிக்கும் மாணவர்கள், கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாடசாலைகளுக்கு 3 ஆண்டுகளுக்குள் மாற்றப்பட வேண்டும் என்பதுடன் மதரசாக்களை ஒழுங்குபடுத்த சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது #பர்தா #தடை #நாடாளுமன்றகுழு #சிபாரிசு #உயிர்த்தஞாயிறு