யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவுடன் விரைவில் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாவை வழங்க உடன்பட்டுள்ளது. இதன்மூலம் சிறிய பொதிகளை கையாளும் கட்டமைப்பு, வெளியேறும் நிர்வாக கட்டமைப்பு, நீர் விநியோகம், கழிவு நீர் அகற்றும் கட்டமைப்பு மற்றும் திண்ம கழிவு வெளியேற்றுவதற்கான கட்டமைப்பு ஆகியன அதன் கீழ் அமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தற்பொழுது பலாலி விமான நிலையத்தில் தற்காலிக விமான பயண கட்டுப்பட்டு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.