மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழாமானது எதிர்வரும் மார்ச் 8 மற்றும் 9 ஆந் திகதிகளில், மட்டக்களப்பு பாடும் மீன் புத்தகத் திருவிழாவில் தனது பதிப்புகளை காட்சிக்கும், பகிர்விற்கும், விற்பனைக்கும் கொண்டு வருகிறது.
மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழாம், நவீனமயமாக்கம் என்னும் காலனியமயமாக்கம் காரணமாக அறிவுபூர்வமற்றது எனவும,; காலத்திற்குப் பொருத்தமற்றது எனவும் புறந்தள்ளப்பட்ட உள்ளுர் அறிவு திறன்களின் சமகாலத் தேவையையும், பயன்பாட்;டையும் காரண காரிய ரீதியாகச் சிந்தித்து நிலைத்துநிற்றலை முன்னெடுப்பதற்கான உரையாடல்களிலும், செயற்பாடுகளிலும் 2000 ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது.
மூன்றாவதுகண் நண்பர்களின் செயற்பாடுகள், நண்பர்களின் பங்குபற்றலிலும், பங்களிப்புகளிலும் முற்றுமுழுதாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிறிய அளவிலும், தொடர்ச்சியாகவும், செயற்பாட்டுக்கு எடுக்கப்படும் விடயங்கள், உரியவர்களுடனும் இணைந்ததாக மேற்படி முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சந்தர்ப்பம் வரும் பொழுதுகளில் அரச திணைக்களங்களுடன் இணைந்து கலை வழி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக உள்ளுர் அமைப்புகளுடன் இணைந்தும் கலைவழிச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிராமங்கள், பாடசாலைகளை மையப்படுத்தியதாகவும் இவை அமைகின்றன.
இந்தவகையில் கலைவழிச் செயற்பாடுகளுக்கான கையேடுகளாகவும், கலை இலக்கிய ஆக்கங்களாகவும் எண்ணக்கரு விளக்கங்களாகவும், ஆற்றுகைகளாகவும், மூன்றாவதுகண் நண்பர்களது ஆக்கங்களும், கலைச் செயற்பாடுகளில் பங்குபற்றுபவரது குறிப்பாகச் சிறுவர்கள் மற்றும் இளையோர்களது ஆக்கங்களும் பதிப்பாக்கம் பெறுகின்றன. இவை துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், கையேடுகள், நூல்கள், இறுவெட்டுகள் என அமைகின்றன.
இவற்றுடன் கலைவழிச் செயற்பாடுகளில் பங்குபற்றுகின்றவர்கள்; உருவாக்குகின்ற வாழ்த்து அட்டைகள் என்பனவும் முக்கியத்துவம் பெறுகின்றன. உள்ளுர் அறிவு திறன் சார்ந்த அறிதலுக்கும், புரிதலுக்கும், பகிர்தலுக்குமான மூன்றாவதுகண் செய்தி மடலின் 08 இதழ்கள் வெளிவந்துள்ளன.
மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவின் பதிப்புக்கள் மேற்படி கலைச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்களுடன் பகிர்வதற்கும், கலந்துரையாடுவதற்கும் உரியவையாவதுடன், கலைச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு பரிசுப் பொருட்களாகவும், அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டும் வருகின்றன.உள்ளுர் அறிவு திறன் சார்ந்த அறிவுருவாக்கங்களுக்கான வளங்களாகவும் இப்பதிப்புகள் காணப்படுகின்றன.
இந்த வகையில் மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழாமின் பதிப்புகள் உள்ளுர் அறிவு திறன் சார்ந்தும், சமூக விழிப்புணர்வு சார்ந்தும் காணப்படுகின்றன. இந்தப் பதிப்புகளின் வடிவமைப்பு சுசிமன் நிர்மலவாசனாலும், அச்சாக்கம் மட்டக்களப்பு வணசிங்கா அச்சகத்திலும் நிகழ்ந்திருக்கிறது. நூலுருவாக்கத்தில் இ.கிறிஸ்ரி, பூ.மதிவதனன் (வதனா), ரி.சங்கர், சுசிமன்நிரோசன் ஆகியோரது தொழில்நுட்ப ஆதரவு அடிப்படையானது.
இத்தகையதொரு உள்ளுர் கூட்டிணைப்பிலும் உழைப்பிலும் 20 இற்கும் மேற்பட்ட நூல்களுடன், வாழ்த்து அட்டைகள், சுவரொட்டிகள் என்பன கடந்த 20 வருட காலச் செயற்பாடுகளில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுடன் மூன்றாவதுகண் ஆங்கில மன்றத்தின் சஞ்சிகையுடன் ஏனைய பதிப்புகளும் காட்சிக்கும், பகிர்விக்கும் உரியதாகின்றன.
இலங்கையில் ஆங்கிலத்தில் எழுதப்படும் இலக்கிய நூல்கள், தொகுப்புக்கள், அவை பற்றிய மதிப்பீடுகள் என்பவற்றில் ஆங்கிலத்தில் எழுதும் இலங்கைத் தமிழர்;தம் ஆக்கங்கள் விளிம்பு நிலைக்கும் உரியனவாகக் கொள்ளப்படுவதில்லை. இலங்கையில் ஆங்கிலத்தில் எழுதப்படும் இலக்கியங்களின் தொகுப்புக்கள் இதற்குச் சான்று பகிர்கின்றன.
இதனைக் கருத்திற் கொண்டு மூன்றாவதுகண் ஆங்கில மன்றம் 1990 இல் உருவாக்கப்பட்டு, மூன்றாவது கண் ஆங்கில சிறுசஞ்சிகையும் வெளியிடப்பட்டது. கடதாசிக்குத் தட்டுப்பாடான பொருளாதாரத் தடை, இராணுவ முற்றுகைக் காலத்தில் ஏ.ஜே.கனகரெட்ணா, சுரேஷ் கனகராஜா, எஸ்.எம்.இராஜசிங்கம் ஆகியோரது ஆற்றுப்படுத்தலில் மூன்றாவதுகண் ஆங்கில சிறு சஞ்சிகை 1991இல் வெளியிடப்படத்தொடங்கியது. பின்பு தெ.கிருபாகரன், எஸ்.எம்.பீலிக்ஸ், எல்.ஏ.லியோன் ஆகியோருடைய ஆற்றுப்படுத்தலில் மட்டக்களப்பில் இருந்து தொடர்ந்து வெளிவந்தது.
இச்சஞ்சிகை ஆங்கிலத்தில் எழுதும் இலங்கைத்தமிழர், புலம்பெயர் எழுத்தாளர்களின் ஆக்கங்களிற்கான களமாக வடிவமைக்கப்பட்டதுடன், மூத்த எழுத்தாளரின் படைப்புகளின் மீள்பிரசுரங்கள், தமிழில் வெளியாகும் படைப்புகளது மொழிபெயர்ப்புகள் கலைப்பண்பாட்டு நிகழ்ச்சிகள், ஆற்றுகைகள் பற்றிய மதிப்பீடுகள் என்பவற்றைத் தாங்கி வந்தன. இவற்றுடன் ஆங்கிலத்தில் அமைந்த கவிதை, கட்டுரைத் தொகுப்புக்களும் வெளிவந்திருக்கின்றன. இவை பற்றிய விடயங்களை அறியவும், உரையாடவும், பகிரவுமென மூன்றாவதுகண் பதிப்புகளது காட்சிக்கூடம் அமைகிறது.
கலாநிதி சி.ஜெயசங்கர்,
இணைப்பாளர்,
மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழு.