Home இலங்கை உழைக்கும் மக்களும், பெட்டிக் கடைகளும், கொரோனா அனர்த்தமும் து.கௌரீஸ்வரன்..

உழைக்கும் மக்களும், பெட்டிக் கடைகளும், கொரோனா அனர்த்தமும் து.கௌரீஸ்வரன்..

by admin

உலக முதலாளியம் தனது ஏகபோக வணிக ஆதிக்கத்தை கொரொனா அனர்த்தத்தில் இழந்து விடக்கூடாது அல்லது வேறொரு தரப்பிடம் விட்டுவிடக்கூடாது என்ற பேராசையில் அதனுடைய கோரமுகத்தை வெளிக்காட்டும் துயரமும் அச்சமும் மிகுந்த காலத்தில் நாம் வாழுகின்றோம். மனித உயிர்கள் முக்கியமல்ல ஏகபோக வணிகந்தான் மிக மிக முக்கியம் எனக்கருதி நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மனிதர்களை கொரொனாவிற்கு இரையாகக் கொடுத்து வரும் நவீன தாராளவாத பொருளாதார சித்தாந்த அரசியலின் எதார்த்த நடைமுறையினை நாம் நேரடியாகக் கண்டு வருகின்றோம். கண்ணுக்குத் தெரியாத கொரொனாவை விடவும் கொடிய பயங்கரவாதமாக இந்த வணிக மனோநிலை காட்சியளிக்கின்றது. தாராளவாத பொருளாதார பொறிமுறைக்குள் பரிபூரணமாகத் தம்மை உட்செலுத்தாமல் பொதுச் சேவைகளை அரசின் உடமையாகவும், (கல்வி, சுகாதாரம், போக்குவரத்து) தேசிய பொருளாதார முறைமைகளை குறைந்த பட்சமேனும் அரசாங்கத்தின் பிடிக்குள்ளும் பேணிவந்த நாடுகளும் அரசுகளும் கொரொனாவை எதிர்த்துத் தாக்குப்பிடிக்குந் துணிவுடனும் வல்லமையுடனும் இயக்கம்பெற்று வருவதையும் காண முடிகின்றது. அதாவது எல்லாவற்றையும் பல்தேசிய வணிக நிறுவனங்களிடம் கையளித்து விட்டு அந்நிறுவனங்களின் வணிக நலன்களுக்கு முன்னுரிமை வழங்கிக்கொண்டு இயங்கும் அரசாங்கங்களால் வைரஸ் தமது நாட்டிற்குள் உட்புகுந்துள்ளதை அறிந்தவுடனேயே தங்களது விமான நிலையங்களை மூடி நாட்டிற்குள் வைரஸ் மேலும் வருவதையும் அது சமூகத்திற்குள் ஆழ ஊடுருவுவதையுந் தடுக்க முடியாதிருந்துள்ளது என்றும், ஆனால் தேசிய உடமையாக்கத்திலும், பொதுத்துறைகளை அரச ஆதிக்கத்தின் கீழும் வைத்திருந்த நாடுகளின் தலைவர்களாலும், அரசாங்கங்களாலும் தங்களது துணிகரமான நடவடிக்கைகள் ஊடாக விமான நிலையங்களை மூடுவதற்கான இயலுமை வாய்க்கப்பெற்றிருந்தது எனவும் இதனால் இத்தகைய நாடுகளில்

2
அவை வளர்முக நாடுகளாக இருந்தபோதிலும் வைரசின் பரவலைக் கட்டுப்படுத்த வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வறிவாளர்கள் கூறுகின்றனர். இப்பின்புலத்தில் நாம் நமது நாட்டில் வாழும் உழைக்கும் மக்களின் பொருளாதாரப் பொறிமுறையில் மிகப்பெருஞ் செல்வாக்குச் செலுத்தி வருகின்ற பெட்டிக்கடைகள் பற்றி கவனத்தைக் குவித்து உரையாட வேண்டியது அவசியமாகியுள்ளது. துரித நகரமயமாக்கமும் நுகர்வுப்பண்பாட்டின் மையமான மத்தியதர வர்க்கத்தின் அதிகரிப்பும் நமது நகரங்கள் எங்கிலும் பல்பொருள் அங்காடிகளின் பெருக்கத்தை அதிகரித்துள்ளது. இப்பல்பொருள் அங்காடிகளை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில் மத்தியதர வர்க்கத்தினரை இலக்காகக் கொண்டு விரிவாக்கம் பெற்று வரும் கடனட்டை பிரயோக முறையியலும் நமது உள்ளூர்ப் பெட்டிக்கடைகளுக்கு மூடு விழாச்செய்து வருகின்றன. இத்தகைய பெட்டிக்கடை மூடுவிழாக் காலத்தில் ஏற்பட்டுள்ள கொரொனா பேரனர்த்தம் பெட்டிக்கடைகளின் பெறுமதியை நம்மிடம் இடித்துரைத்து நிற்கின்றது. நாளாந்தம் உழைக்கும் மக்களின் வருமானத்திற்கு ஏற்ப அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் இடங்களாக பெரும்பாலும் பெட்டிக்கடைகள் விளங்கியிருந்தன. சில நூறு ரூபாய்களை உழைக்கும் ஒருவர் தனது ஒருநாளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொள்வதுடன் அதில் சிறு தொகையினைச் சேமித்தும் (நாள் சீட்டு முறையில் சேமித்தல்) வாழ்வதற்கான நுண்ணிய பொருளாதாரப் பொறிமுறைகளைக் கொண்டதாக பெட்டிக்கடை வணிகம் நம்மிடையே இயக்கம் பெற்று வந்துள்ளது.

அதாவது அரிசி இரண்டு சுண்டு, சீனி காறாத்தல், தேயிலை 25 கிராம், மஞ்சள்தூள் ஒரு பை, சீரகம் இரண்டு பை, செத்தல் மிளகாய் 25 கிராம், சின்ன வெங்காயம் 50 கிராம், வெள்ளப்பூடு 25 கிராம், கொச்சிக்காய்த்தூள் 25 கிராம், தேங்காய் எண்ணை அரைகா போத்தல், மண்ணெண்ணை காபோத்தல், விறகு இரண்டு கட்டு, சவர்க்காரம் அரைக்கட்டி, நெத்தலிக்கருவாடு நூறு கிராம் என்று சின்னஞ்சிறு அளவில் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை இப்பெட்டிக்கடைகள் கொண்டிருந்தன.

3
பெட்டிக்கடைகள் உள்ளூரில் வாழ்ந்த சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு நிறையவே வாய்ப்புக்களை வழங்கியிருந்தன நிலக்கடலை, முறுக்கு, கடலை, சோகி முதலிய சிற்றுண்டிகளை, பால்அலுவா, இறுங்குவோளை, றவைலட்டு, கச்சான்அலுவா, முதலிய இனிப்பு வகைகளை, பல்பொடி, சாம்பிராணி, தேயிலை, நீலம், திருநீற்று உருண்டை முதலிய பயன்பாட்டு பொருட்களை, தேன்,நெய்,தயிர்,வேப்பெண்ணை,ஆமணக்குஎண்ணை,பன்னீர்,ஓமத்திரவம் முதலிய உள்ளூர் மருத்துவப் பொருட்களை, பனையோலைப்பெட்டிகள், பிரம்புக்கூடை, மீன்கூடைகள், சுளகு, மட்பாண்டப் பொருட்கள் முதலிய உள்ளூர்க் கைவிளைப் படைப்புக்களை உற்பத்தி செய்து தமது வாழ்விற்கான ஆதாரங்களைப் பெற்று வந்த உள்ளூரில் வாழ்ந்த சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கான தேவைகளைப் பல்கிப் பெருக்கியிருந்தன. இத்துடன் ஊரில் உற்பத்தியாகும் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்புக்களையும் இப்பெட்டிக்கடைகள் வழங்கி வந்தன. உதாரணமாக ஊரில் கீரை நாற்றுக்களையோ, மரக்கறிகளையோ, பழவகைகளையோ, கிழங்கு வகைகளையோ சிறு அளவில் உற்பத்தி செய்பவர்கள் அவற்றை விற்பதற்கு இக்கடைகள் களமாக அமைந்திருந்தன. பெட்டிக்கடைகளில் பருவகாலங்களில் கிடைக்கும் உள்ளூர் உற்பத்திகளைப் பெற்றுக் கொள்வது இலகுவானதாக இருந்தது. தசாப்தங்களுக்கு முன்னர் நடைபெற்ற போர்க்காலத்தில் நமது ஊர்களில் இந்த பெட்டிக்கடைகளின் நுண்ணிய வணிகப்பண்பாடே வலிமையாக இருந்தது. அன்றாட உழைப்பில் இத்தகைய பெட்டிக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுடன் ஒரு பேனை, ஒரு பென்சில், ஒரு ஒற்றைறூள் கொப்பி என கற்றலுக்கான கருவிகளையும் வாங்கிச் சேமித்து கல்வியில் உயர்ந்தவர்கள் பலர் நம்மிடையே வாழ்கின்றனர். பெட்டிக்கடைகள் பெரிய மூலதனமற்றது, அதேவேளை பெரியளவில் கடன்பட்டோரையும் உற்பத்தியாக்காத பண்பு கொண்டது. பெட்டிக்கடைகள் நமது பணப்பரிமாற்றத்தில் சதத்திற்குப் பெறுமதியையும் மதிப்பையும் வழங்கி வந்தது. உதாரணமாக ஒரு பால் அலுவா 25 சதத்திற்கு வாங்கும் நிலையைப் பேணியது,

4
பெட்டிக்கடைப் பண்பாடு அனர்த்த காலத்தில் பொருட்களைப் பதுக்கிச் செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி கொள்ளை இலாபம் அடிப்பதற்கு மாறாக உள்ள பொருட்களை நுண்ணிய அளவில் தனது வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் வணிக அறத்தைப் பேணும் தன்மை வாய்க்கப் பெற்றது. அண்மைய தசாப்தத்திலிருந்து அதிகமாக உள்வரும் பெரிய வணிக நிறுவனங்களின் உற்பத்திகளும் அந்நிறுவனங்களுடைய முகவர்களின் தரகு வணிகப்பரவலாக்கலும் சிறிய மூலதனத்துடன் நமது ஊர்களின் தெருக்கள், ஓழுங்கைகள் எனப்பல இடங்கள் எங்கிலும் இயங்கிய பல பெட்டிக்கடைகளை தாக்குப்பிடிக்க முடியாதவைகளாக்கி பெருமூலதனமுடைய பணக்காரர்களின் ஆதிக்கத்துள் நமது கிராமங்களின் வணிகத்தை நிலைமாற்றி வருகின்றது. இத்தகைய கடைகள் பெட்டிக்கடைகளின் பொறிமுறையிலிருந்து மாறுபட்டவையாக அமைந்துள்ளன. மிகச்சிறிய அளவில் பொருட்களை வாங்கும் வசதிகள் இக்கடைகளில் இல்லாமலாகியது. உதாரணமாக சவர்க்காரம் அரைக்கட்டி இங்கு வாங்க முடியாது, சீனி நூறு கிராம் கிடையாது. அதாவது பெட்டிக்கடைகளில் பேணப்பட்டு வந்த சதப்புழக்கம் இக்கடைகளில் செயலற்றதாக மாற்றப்பட்டது. இது உழைக்கும் மக்களின் வாழ்வியலில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. உதாரணமாக ஐந்து ரூபாய்க்கு 50 கிராம் சீனியை வாங்கும் இயலுமையுள்ள ஒருவர் குறைந்தபட்சம் 250 கிராம் சீனியையே வாங்க வேண்டிய இயலாத நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டார். இதனால் தினமும் உழைத்து வரும் சில நூறு ரூபாய்களுடன் வாழ்ந்த குடும்பங்களின் நாளாந்தப் பாதீட்டில் துண்டு விழுந் தொகை மெல்ல மெல்ல அதிகரிக்கும் நிலைமைகள் வலுப்பெற்றன துண்டு விழுந்தொகையினை ஈடு செய்ய நுண்கடன்காரர் ஓடி ஓடி வந்தனர் ஈற்றில் இப்பொருளியல் பொறிமுறையின் மாற்றம் பெரும்பாலான உழைக்கும் மக்கள் மீளமுடியாத கடன்காரர்களாக மாறித் தமது வளவு காணியை விற்றுவிட்டு குடிபெயரும் நிலைமைகளுக்கு இட்டுச் சென்றது. இதனால் கிராமங்கள் நகரங்களாயின. சமூகங்கள் சிதறிச் சீர்குலைந்தன, மனித வாழ்வியலுக்குச்சாதகமற்ற நிலப்பகுதிகள் நவீன பொருளாதாரத்தில் தாக்குப்பிடிக்க முடியாது இடம்பெயர்ந்த உழைக்கும் மக்களின் வாழ்விடங்களாயின. இது பல்வேறு

5
சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தோற்றுவித்தது. பண்பாட்டு நெருக்கடிகள் உருவாகின. இவ்வாறாக, நாளாந்த உழைப்பை மூலதனமாகக் கொண்டு உழைக்கும் மக்களின் வாழ்வியலுடன் சம்பந்தப்பட்டு நமது உள்ளூர் பொருளாதாரப் பண்பாட்டில் பெருஞ்செல்வாக்குச் செலுத்திய பெட்டிக்கடை வணிகம் குறித்தும் அதன் பொறிமுறைமைகள் மற்றும் பயன்பாடுகள் சம்பந்தமாகவும் அது சீர்குலைந்தமைக்கான காரணங்கள் பற்றியும் நாம் ஆழமாக ஆராய்ந்து உரையாட வேண்டிய அவசியத்தை கொரொனா பேரனர்த்தம் நம்மிடையே உருவாக்கியுள்ளது எனலாம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More