கொரோனா வைரஸ் தொற்றுடன் உலக நாடுகள் சிலவற்றில் பதிவான கவாசாகி (Kawasaki) என்ற நோய் தற்போது இலங்கையிலும் காணப்படுவதாக லெடி ரிஜ்வே அம்மையார் சிறுவர் Lady Ridgeway வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த நோய் ஏற்கனவே இருந்த போதிலும் தற்போது கொரோனா தொற்றுக்கு மத்தியில் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கத்தேய நாடுகளில் தற்போது காணப்படுவதாக தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்த நோய் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவுவதால், பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
5 முதல் 12 வயது வரையான பிள்ளைகளையே இந்த நோய் பாதிக்கின்றது என்று தெரிவித்த, அவர் 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல், நாக்கு சிவந்து ஸ்ரோபெரி போன்று தோற்றமளித்தல், தோலில் ஏற்படும் சிவப்பு நிறமான பருக்கள், தோல் உரிதல், உதடு மற்றும் கண் ஆகியன சிவப்பு நிறமாகி வீக்கமடைதல் , கழுத்தில் ஒரு வகை சொறி போன்றவையே இந்த நோயின் அறிகுறிகளாகும் என்றார்.
இலங்கையில் பொதுவாக வருடத்தில் கவாசகி நோயினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை 50க்கும 100 க்கும் இடையில் காணப்படுகின்ற போதிலும் கொரோனா வைரஸ் தொற்றையடுத்து உலகில் குழந்தைகள் மத்தியில் இந்நோய் வேகமாக பரவும் தன்மை காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் , இந்தநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதால் பெற்றோர் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாத போதிலும் அவதானமாக இருக்க வேண்டும் என்றார்.
மனித உடலில் குருதியைக்கொண்டு செல்லும் நாடியில் காணப்படும் அழற்சியினால் இந்த நோய் ஏற்படுகின்றது. இந்த நோய் நடுத்தர அளவுள்ள நாடிகளை தாக்குகின்றது. அதனால் இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் நாடிகளில் வீக்கம் ஏற்படும்போது இதயத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் . இதுவொரு தன்னுடல் தாக்கும் நோய் என்பதோடு குழந்தைகளின் இதயத்தை பாதிக்கும் ஆபத்து உள்ளது. எனவே இந்தநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிறுவர் வைத்தியர் நிபுணரை நாட வேண்டும் என்று விசேட வைத்திய நிபுணர் தீபல் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார். #கவாசாகி #எச்சரிக்கை #கொரோனா