இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். 55 வயதான ஆறுமகன் தொண்டமானுக்கு கொழும்பிலுள்ள அவரது வீட்டில் சுகவீனமேற்பட்ட நிலையில், தலங்கம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
1964ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான், கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவரான அமரர் செளமிய மூர்த்தி தொண்டமானின் பேரனாகிய ஆறுமுகன் தொண்டமான் 1990ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்து 1993ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராக கடமையாற்றினார்.
பின்னர் 1994ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்ட அவர் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபடியான வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.
தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தல்களின் வெற்றியீட்டியிருந்த அவர், பல அமைச்சு பதவிகளை வகித்ததுடன் தற்போதைய அரசாங்கத்திலும் அமைச்சு பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #ஆறுமுகன்தொண்டமான் #காலமானார் #இலங்கைதொழிலாளர்காங்கிரஸ்