166
யாழில். இராணுவ முகாமுக்கு அருகாமையில் இருந்த ஊடக நிறுவனம் மீது ஊரடங்கு நேரத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த பணியாளர் மீதும் வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அது ஊடக நிறுவனத்தின் இணைப்பாளர் தை. தமிழ்வாணன் யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடக சந்திப்பினை நடத்தி சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில்,
வெளிநாட்டை தளமாக கொண்டு இயங்கும் ஊடக நிறுவனம் ஒன்றின் இணைப்பாளராக உள்ளேன். எமது அலுவலகம் கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ளது.
எமது அலுவலகத்திற்கு சுமார் 200 மீற்றர் தூரத்தில் கொடிகாமம் இராணுவ முகாம் அமைந்துள்ளது. அலுவலகத்தில் இருந்து சற்று தொலைவில் தான் கொடிகாம காவல் நிலையமும் அமைந்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை இரவு 11.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 08 பேர் கொண்டு கும்பல் ஒன்று வாள் , இரும்பு கம்பி , உள்ளிட்ட ஆயுதங்களுடன் எமது அலுவலகத்தினுள் அத்துமீறி நுழைந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களை அடித்து நொறுக்கி அலுவலகத்தில் இருந்த பணியாளர் மீதும் தாக்குதல் நடாத்தினர்.
பின்னர் அங்கிருந்த பெறுமதி மிக்க பொருட்களாக கமரா உள்ளிட்டவற்றையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உடனடியாகவே இராணுவம் , மற்றும் காவல்துறையினருக்கு தகவல் வழங்கினோம். காவல்துறையினர் அதிகாலை மூன்று மணிக்கு பின்னரே எமது அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அங்கு வந்த காவல்துறையினரில் ஒருசிலர் மது போதையில் இருந்தனர் ஏனையவர்கள் நித்திரை கலக்கத்தில் இருந்தனர்.
அவர்கள் எந்த விசாரணைகளையும் மேற்கொள்ளாது, தடய பொருட்களை அப்புறப்படுத்த எம்மை பணித்தனர். பின்னர் சம்பவம் தொடர்பில் நேரில் வந்து காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு கூறி சென்றனர்.
அதேவேளை இராணுவத்தினருக்கு உடனே அறிவித்த போதிலும் , அவர்கள் காலை 10 மணிக்கே வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு சென்றுள்ளனர்.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தமிழரசு கட்சியின் தலைவரும் , பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான மாவை சேனாதிராஜாவுடான அரசியல் நிகழ்ச்சி ஒன்றினை நடாத்த ஏற்பாடு செய்திருந்த நிலையிலையே எமது அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிருசுவில் படுகொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பில் விமர்சித்தமைக்காக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அது தொடர்பில் கொடிகாம காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தேன். காவல்துறையினர் அச்சுறுத்தல் விடுத்தவர்களை அழைத்து என்னையும் மத்தியஸ்த சபைக்கு அனுப்பி பிரச்சனைகளை மூடி மறைத்தனர். எனக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்கள் காவல்துறையினரை ” அண்ணா அண்ணா ” என்றே அழைத்தனர். அதன் மூலம் காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதை உணர்ந்து அந்த பிரச்சனையை நானும் அப்படியே கைவிட்டேன்.
தற்போது வடக்கில் காவல்துறையினரின் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் ஆவண படம் ஒன்றினை எடுத்து வருகிறேன். காவல்துறையினர் குற்றவாளிகளுடன் எவ்வாறு சேர்ந்து இயங்குகின்றார்கள் என்பது தொடர்பில் பல தகவல்கள் எனக்கு கிடைக்கப்பெற்று வருகின்றன. அவற்றை தொகுத்து ஆவண படத்தினை இயக்கி வருகிறேன். இந்நிலையிலையே எமது அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது.
இதனை ஊடக அடக்குமுறையாகவும் , கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயலாகவே பார்க்கிறேன் என தெரிவித்தார். #ஊடகநிறுவனம் #தாக்குதல் #பணியாளர் #வாள்வெட்டு#கொடிகாமம்
Spread the love