இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

சமூக நல்வாழ்விலும், ஒருமைப்பாட்டிலும், சமூக, தனிமனித ஆற்றுப்படுத்தலிலும் சடங்குகள்- ஜோ. கருணேந்திரா.

மட்டக்களப்பின் சடங்குக் காலம். அது பொதுவாக வருடத்தின் வைகாசி தொடக்கம் புரட்டாதி வரையான காலப்பகுதி. ஊருக்கு ஊர் கோயில்களில் தெய்வமாடுதலும், சிலம்புச் சத்தமும், பறைச்சத்தமும், குழல் சத்தமும் நிரம்பி வழியும் காலம். சமூக மக்கள் ஒன்றுகூடி மகிழ்ந்து தங்களுடைய குல தெய்வத்திற்கு விழா எடுக்கும் காலம். இக்காலப்பகுதியில் மக்களிடையே சந்தோசம், புரிந்துணர்வு, ஒற்றுமை என்பன மேலோங்கிக் காணப்படும். சிறுவர்களின் விளையாட்டுக் களமாகவும், பெரியவர்களின் கதைக் களமாகவும் அதேநேரம் பக்திக் களமாகவும் இச் சடங்குக் கோயில்கள் ஊருக்கு ஊர் காணப்படுகின்றன. தவிர தமது பழைய வரலாறுகளைக் கதை கதையாகச் சொல்லி மகிழும் களமாகவும் இச் சடங்குக் களம் காணப்படுவது எமது தலைமுறையினரை எமது வரலாறு சார்ந்து சிந்திக்கத் தூண்டுவதாகவும் அமைகிறது.

உலகமயமாக்கச் சூழலில் அன்றாட வாழ்க்கைத் தேவைக்கான போராட்டத்தில் ஒருவரை ஒருவர் தள்ளி வீழ்த்திக்கொண்டு தங்கிவாழ் மனிதர்களாக வாழுகின்ற சராசரி மனிதர்களை அணைத்து இணைத்து ஒற்றுமையின் தனித்துவத்தை விளம்பும் வண்ணமாக சடங்குகள் கட்டமைக்கப்பட்டுள்ளன எனக் கூறுவது சாலத்தகும். ஒரு சடங்குசார் சமூகத்தைச் சேர்ந்தவனாக சடங்கு ஒரு சமூகத்தின் ஒற்றுமையில், சமூக ஆற்றுப்படுத்தலில், அதனது இயக்கத்தில் எந்தளவிற்குப் பங்களிக்கின்றது என்பதை விளங்கப்படுத்துவதற்று என்னிடம் பல்வேறு அநுபவக் கதைகள் உள்ளன.

“ஒரு சடங்கெண்டா அதில சின்னப்பிள்ளைகள் தொடக்கம் வயசு போனவர்கள் வரக்கும் எல்லாருக்குமே ஏதாவது சின்ன வேலையாவது இருக்கும். அப்பதான் அது அவங்கட சடங்கு” என தாமரைக்கேணி மகமாரியம்மன் கோவில் பிரதான பூசகரான திரு. கே. குமாரதாசன் அவர்கள் அடிக்கடி கூறுவார். இக்கூற்று முற்றிலும் உண்மை. திருவிழாக் கோவில்களில் நன்றாக உடுத்திக்கொண்டு வெறுமனே பலிபீடத்திற்கு அப்பால் நின்று சுவாமி தரிசனம் செய்வதைப் போலல்லாது சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும் ஈடுபடும் களத்தைச் சடங்குக் கோவில்கள் ஏற்படுத்துகின்றன. சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோருடைய வாயிலும் “எங்கட ஊரில சடங்கு நடக்குது” என்கின்ற வார்த்தை பரவலாக அடிபடும். அதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும் ஒரு சமூகம் தங்களது சடங்கிற்கு, தங்களது சடங்குத் தெய்வத்திற்கு விழா எடுத்தலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றதென்பது.

பல பக்கங்களுக்கும் வேலைக்குச் சென்றவர்களும், வேறு இடங்களில் வசிப்பவர்களும் தமது குலக்கோவில் சடங்கிற்காக ஒன்றுசேருவர். ஒரு வருடமாகக் காணக்கிடைக்காத பல முகங்களை சடங்கு காலங்களில் காண்பதன் மூலம் உறவுகளும் நட்புக்களும் பலமடைகின்றன. எல்லேரும் இணைந்து தமது கோவில் சடங்கைத் திருப்திகரமான முறையில் நிறைவேற்றுவதற்குப் பாடுபடுவர். இங்கு சமூகத்தின் ஒருங்கிணைவைக் காணமுடியும். பகைமை கொண்டவர்களும் கூட ஒன்று சேர்ந்து செயற்படுவதன் மூலம் பகைமைகளைக் களைவதற்கான வாய்ப்புகளையும் சடங்குகள் வழங்குகின்றன என்பது எனது வாழ்வின் அநுபவம். இவ்வாறு சமூக ஒருங்கிசைவு மற்றும் ஒற்றுமை என்பவற்றில் சடங்கு விழாக்கள் பெரும் பங்களிப்பை அளிக்கின்றதோடு மனித மனங்கள் மற்றும் உறவுகளுக்கிடையேயான சுவர்களையும் தகர்த்தெறிகின்றன.

ஒரு சிறு உதாரணத்தை இங்கு குறிப்பிடுதல் சாலத் தகுமென நான் நினைக்கிறேன். அதாவது ஒரு ஊரில் ஒரு ஆகம முறை சார் கோவிலின் சொத்துக்கள் சார்ந்து ஏற்பட்ட பிணக்கினடிப்படையில் ஊரானது கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இரு பகுதிகளாகப் பிரிந்து காணப்பட்டது. ஆயினும் அதில் ஒரு பகுதியினரே அவ் ஊரின் சடங்குக் கோவிலை நிர்வகித்தும் சடங்கை நடைமுறைப்படுத்தியும் வந்தனர். மற்றப்பகுதியினர் சடங்கில் ஆர்வம் கொண்டிருந்த போதும் வழிபாட்டுடன் மட்டும் சடங்குக் கோயிலுடனான தொடர்பைக் கொண்டிருந்தனர். நாளடைவில் அவர்களது ஈடுபாடு சடங்கில் சிறிது சிறிதாக வளர்ந்து இன்று இரு பகுதிகளும் ஒன்றாகி சடங்கு விழாவை முன்னெடுக்கும் அதிசயத்தைச் சடங்கு ஏற்படுத்தியருக்கின்றது. மேலும் அவ்வூரின் ஆகமம் சார் கோவிலும் தற்போது பினக்குகளின்றி நடைபெறுகிறது. 15 வருடங்களாகப் பிரிந்து கிடந்த சமூகத்தை, மனங்களை ஒன்றினைத்த சடங்கு விழாவானது ஒரு தனித்துவமிக்கது என்பது மிகவும் உண்மை.

மற்றும் சடங்கு வழிபாடானது ஊரின் குறிப்பிட்ட ஒரு சாராரையோ அல்லது குறிப்பிட்ட சடங்கை நடாத்தும் குடும்பம் அல்லது தரப்பையோ குறித்து அருள் வேண்டி நடாத்தப்படுவதில்லை. மாறாக எவரது சடங்காயினும் யார் செலவளித்து சடங்கு நடத்தினும் சடங்கினது நோக்கம் ஊர் நன்மை மற்றும் ஊரிலுள்ள சகலரதும் நன்மை குறித்தேயிருக்கும். இங்கு பாகுபாடுகள் காணப்படுவதில்லை. இதைப் பத்ததியின் (சடங்குகள் நடைமுறைப்படுத்தப்படும் முறை) கீழ்வரும் வசனங்கள் தெளிவுபடத் தெரிவிக்கின்றன. “தாயே இந்த மண்டியில இந்த பூக்களைக் காய்களைப் பழங்களைப் போட்டு உங்களைக் கூப்பிட்டது இந்த ஊரில இருக்கிற குஞ்சு குழந்தைகள், பேதையானவர்கள், கப்புவன்மார், பூமரம் ஒருவருக்கும் ஒரு முள்ளுக்கொப்பும் முறியாம நல்வாக்கு கேட்டுத்தான் தாயே” என பிரதான பூசகரால் மண்டாடப்படும். இதனர்த்தம் உரிலுள்ள எவருக்கும் எந்தக் கெடுதியும் நேராமல் பாதுகாக்க வேண்டும் எனக் கோட்டுக்கொள்வதாகும். எனவே இக் கூற்றானது சடங்கானது அதனது வழிபாட்டு முறையில் எந்தவித பாரபட்சங்களையும் கொண்டிருக்கவில்லை என்பதனைச் சான்றுபகர்கிறது.

இவ்வாறு சமூக ஆற்றுப்படுத்தலில் மட்டுமல்லாது தனிமனித ஆற்றுப்படுத்தலிலும் சடங்குகள் பெரும் பங்குகளை வகிக்கின்றன. கடந்த கால யுத்த வடுக்களிலிருந்தும், தற்கால பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் வீட்டு வன்முறைகளின் துன்பத்திலுருந்தும் மக்களை மீட்டெடுத்ததில், மீட்டெடுப்பதில் சடங்குகள் தனித்துவமிக்க ஒத்துழைப்பை வழங்கிவருகின்றன. மக்கள் தங்களது துன்பங்களைப் பிரச்சினைகளை தெய்வத்திடம் ஒப்படைத்து பரிகாரம் தேடுகின்றனர். அதனால் சடங்கு காலத்தில் மக்களிடையே ஒரு நிம்மதியை உணரமுடியும். குறிப்பாக சடங்குகள் ஒரு போதும் சொர்க்கம் நரகம் பற்றிப் பேசுவதில்லை. தவிர துன்பங்களுக்கான பரிகாரங்களை இவ்வுலகிலேயே இப்பிறப்பிலேயே அடைவதற்கு வழிகாட்டுகின்றன.
சடங்குக் கோவில்களில் தெய்வமாடுதல் என்பது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த விடயமாகும். இத் தெய்வமடுதல் என்பது அம்மன் அல்லது ஏனைய தெய்வங்களின் கலை வந்தாடுதல் எனப்படும். இவ்வாறு கலை வந்தாடும் தெய்வக்காரர்கள் சடங்கிற்கு வழிபடவரும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும் பொருட்டு அவர்களுக்குக் கட்டுக் கூறுதல் என்பது சடங்கின் சிறப்பம்சமாகும். மனக் கவலைகளுடன், கஸ்டங்களுடன் வந்து வழிபடும் பக்தர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான பரிகாரங்களை இவ்வாறு கலையாடும் தெய்வங்கள் கூறுகின்றபோது அவ்வாறு மனக்கவலைகளுடன் வருபவர்களது கவலைகள் ஆற்றுப்படுத்தப்படுகின்றன. தெய்வமாடி கட்டுச்சொல்லுதலின் உண்மை பொய்களுக்கப்பால் நிவாரணம் தேடிவரும் பக்தர்களது குறைகள் தீரும்பொருட்டு யதார்த்தமான தீர்வுகளை தெய்வங்கள் முன்வைத்தலென்பது ஒரு முக்கிய விடயமாகும். எனது அனுபவத்தினடிப்படையில் எந்தத் தெய்வமும் யதார்த்தமற்ற நிவாரணங்களையோ பரிகாரங்களையோ பக்கதர்களுக்கு முன்வைத்ததில்லை. இதனடிப்படையிலேயே இன்றுவரை சடங்கின் முக்கியத்துவம் எமது பிரதேசங்களில் கவனத்திற்குரியதாகின்றது.

மேலும் சடங்கில் பங்குகொள்பவர்கள் தங்களுக்கும் தெய்வங்களிற்குமான உறவு மிகவும் நெருங்கியதான உணர்வைப் பெறுகின்றனர். தெய்வங்களோடு நேரடியாகக் கதைக்கின்றனர். தமது குறைகளை நேரடியாகத் தெய்வத்திடம் ஒப்புவிக்கின்றனர். அதனால் ஆறுதலடைகின்றனர். தமது குறைகள் விரைவில் தீர்ந்துவிடும் எனும் நம்பிக்கை கொள்கின்றனர். யுத்தத்திற்குப் பின்னரான மற்றும் பொருளாதாரமயச் சூழலில் நம்பிக்கையற்று, தனித்தனியாக பிளவுபட்டு வாழுகின்ற மனிதர்களுக்கு நம்பிக்கையையும், நிம்மதியையூம் வழங்குவதாக இச் சடங்குகள் அமைந்துள்ளன எனக் கூறுவது மிகையில்லை.

தவிர மேலே குறிப்படப்பட்டது போல் சடங்கானது ஒரு சமூகத்தின் வரலாற்றை, அச் சமூகத்தினது வாழ்வியலைப் பிரதிபலிப்பதனூடாக சமூகவியலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சில சடங்குக் கோவில்களில் பாடப்படுகிள்ற காவியம் மற்றும் கும்மிப்பாடல்கள் சமூகங்களின் வரலாற்றைப் பிரதிபலிப்பனவாகவுள்ளன. உதாரணத்திற்கு மட்டக்களப்பு எல்லை வீதியல் அமைந்துள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தில் ஏடு படித்தல் எனும் நிகழ்வில் பாடப்படுகின்ற சடங்குப் பாடல்கள் சில; குறிப்பாகக் காவியம் அவ் ஆலயத்தின் மூலவர் அச் சமூகத்தினிடையே வந்து சேர்ந்த விதத்தைக் கூறுவதாக அமைந்துள்ளதைக் காணமுடியும். மேலும் காவியமெனப்படுவது தமது சடங்குத்தெய்வத்தை குறைதீர்க்கவேண்டிப் பாடப்படுவதாகும். இதை இன்னார்தான் பாடவேண்டும் என வரையறுக்கப்படவில்லை. சடங்கு வழிபாட்டில் ஈடுபட்டுள்ள எவருமே இதைப்பாடலாம். அதனால் சடங்குப் பாடல்களை அனைவரும் விரும்பிப் பாடுவதனூடாக ஒரு சமூகத்தின் வரலாறும் சமூக அங்கத்தவர்களிடையே சென்றடைவது மேலதிகமான ஒரு விடயமாகக் காணப்படுகிறது.

மிகப்பெரும்பாலான சடங்குக் கோவில்களன் பிரதான பூசகர் அச் சமூகத்தைச் சேர்ந்தவராகவே காணப்படுவார். இவர் பெருமபாலும் உள்ளூர் வைத்தியராகவும், ஊரின் முக்கியத்தராகவும் கணப்படுவார். ஒரு மாமாவாக, பெரியப்பாவாக, சிற்றப்பாவாக, அண்ணனாக சமூகத்தில் வாழும் ஒருவரே சடங்குக் கோவிலின் பிரதான பூசகராகவும் காணப்படுதலென்பது சடங்குக் கோவில்களுக்கே உரித்தான தனித்துவமாகும். இது ஒரு சமூகத்திற்கும் தெய்வங்களிற்கும் இடையிலான நெருக்கத்தை இன்னும் வலுப்படுத்தும் ஒரு தனித்துவமாகும்.

சடங்குகால உணவுப்பழக்க வழக்கங்களும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. சடங்கு காலத்தில் இலகுவான அதாவது எண்ணைத் தன்மையற்ற, சூட்டுத் தன்மை குறைந்த உணவுகளே புழக்கத்திலிருக்கும். இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பத்ததியினடிப்படையில் சடங்கு காலத்தில் மந்திர உச்சாடனங்கள் அதிகமாகப் பாவிக்கப்படுவதால் பூசகர்களது உடலநிலை மிகவும் வெப்பமானதாகக் காணப்படும். அதனால் சூட்டுணவுகள் தவிர்க்கப்படவேண்டும் எனக் கூறப்படுகிறது. சமூகவியலடிப்படையில் எடுத்துக்கொண்டால் சடங்கில் சமூகத்தவர் அனைவரும் பங்குகொள்ள வேண்டியிருப்பதால் அஜீரணம் சம்பத்தப்பட்ட நோய்களிலிருந்தும் எண்ணையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துக் காயங்களிலிருந்தும் விடுபடுவதற்காகவே இவ்வகையான உணவுப் பழக்கவழக்கங்கள் பாரம்பரியமாகக் கைக்கொள்ளப்பட்டு வந்துள்ளன. தவிர சடங்குக் காலம் வெப்பக் காலமாகும். அதனாலேயே சடங்குக் காலத்தில் மஞ்சள், வேப்பிலை போன்றவை அதிகளவில் பயன்படுத்தப்படுவதோடு உணவுப்பழக்கவழக்கமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு பக்கங்களிலும் பல்வேறு தனித்துவங்களைக் கொண்டியங்கும் சடங்கின் மூலத் தத்துவமானது சமூக நல்வாழ்விலும், ஒருமைப்பாட்டிலும் தங்கியிருப்பதோடு மிகச்சிறந்த சமூக மற்றும் தனிமனித ஆற்றுப்படுத்தல் களமாகவும் விளங்குகிறது. அத்தோடு சடங்கு ஒரு தனித்துவமான மக்கள்மைய வழிபாடாக மக்களாலேயே முன்னெடுக்கப்படும் வழிபாடாக ஒற்றுமைக்கும், நம்பிக்கைக்கும் உறுதியளிக்கும் வழிபாடாகக் காணப்படுவது எமது சமூகங்களின் நிலைப்பிற்கு உறுதுணையாக இருக்கும் என்பது தெளிவு.

ஜோ. கருணேந்திரா.
19.07.2014

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.