தமிழ்மக்கள் தமது அரசியல் அபிலாசைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளும் பயணத்தில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பல இன்னல்களையும், இழப்புகளையும் சந்தித்த மக்கள் என்ற வகையிலும் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படாது தொடர்ந்து கொண்டிருக்கின்ற இந்த நிலையிலும் நமக்கென்று ஒரு தூய, ஒற்றுமையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றன. தேர்தல் அரசியலில் குதித்து நிற்பவர்களின் பிரிவுகள், முரண்பாடுகள், சுயநலப் போக்குகள், பேச்சுக்கள் தொடர்பில் மக்கள் சலிப்பும் விரக்தியும் அடைந்திருக்கின்றார்கள். இவை மக்களிடையே பகைமை உணர்வை வளர்த்து எமது பயணத்தை திசைமாற்றிவிடுமோ என்ற கவலையும் ஏற்பட்டிருக்கின்றது.
போதிய அளவு அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் உள்ள ஒரு தேசிய இனமாகிய நாம் சில விடயங்கள் சம்பந்தமாக சிந்திக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றோம். அரசியல்வாதிகளை விமர்சிக்கமுன் பொது மக்களாகிய நாம் எம்மை சீர்செய்துகொள்ள முடியுமா? என்று சிந்திப்பது பயனுடையதாக அமையும்.
வருமானத்திற்கும் சலுகைகளுக்குமாக நாம் ஒரு அரசியல்வாதிக்கு வாக்களிப்போமாக இருந்தால் அவரை இலஞ்சம் வாங்க வேண்டாம் என்றோ, சலுகைகளுக்கு விலை போகவேண்டாம் என்றோ கேட்டுக்கொள்ளும் தார்மீக உரிமை நமக்கு இல்லாமல் போய்விடும்.
பொருத்தமற்ற அரசியல் பிரதிநிதிகளை நாமே தெரிவு செய்துவிட்டு அல்லும் பகலும் அவர்களை விமர்சித்துக் கொண்டிருப்பதால் ஆகப்போவது எதுவுமில்லை. புனிதமான, கொள்கை அடிப்படையிலான அரசியல் பாதையை வடிவமைக்க வேண்டிய நொந்து போன ஒரு இனம் சாக்கடை அரசியலை வளர்த்துவிட்டு, பின் அதிலிருந்து தூர விலகி நின்று, இது சாக்கடை அரசியல் என்று கூச்சலிடுவது அர்த்தமற்றது.
பொருத்தமானவர்களை தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தை நழுவவிட்டு, வாக்களிக்காமல் இருந்துவிட்டு பின் தெரிவுசெய்யப்படும் அரசியல் பிரதிநிதிகளை விமர்சிப்பதும் ஒரு பொறுப்பற்ற செயற்பாடாகவே கருத வேண்டியிருக்கின்றது.
எனவே எமது அரசியலை தூய்மைப்படுத்த பொருத்தமானவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்ற பாரிய பொறுப்பு என் முன்னே எழுந்து நிற்கின்றது.
பலவகையான போராட்டங்களினூடும் படிப்பினைகளினூடும் பயணித்த எம் தமிழ் மக்களுக்கு பொருத்தமான பிரதிநிதிகளை நன்கு சிந்தித்து தெரிவு செய்வது கடினமாதொன்றாக இருக்காது. இம்முறை என்றுமில்லாதவாறு எம்முன்னே பல தெரிவுகள் விதைக்கப்பட்டிருக்கின்றன.
தூய அரசியலை வடிவமைக்க பொருத்தமானவர்களை எதனை வைத்து தெரிவு செய்வது? என்று ஒரு கேள்வி எழுகின்றது.
தனிமனித ஒழுக்கம், நேர்மை, லஞ்சத்துக்கும் சலுகைகளுக்கும் விலைபோகாத தைரியம், தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாடுகளை தெளிவாக வலியுறுத்துவதோடு அதை முன்னின்று செய்யும் தற்துணிவு, நேச சக்திகளை அரவணைத்து ஒற்றுமைப்படுத்தும் ஆளுமை, வெளிப்படைத்தன்மை, குற்றச்சாட்டுக்கள் எழும்பொழுது பொறுப்புக்கூறும் பெருந்தன்மை, தவறுகள் இருப்பின் அதனை ஏற்று திருத்திக் கொள்ள முயலும் மனப்பக்குவம், திறமை, எமது இலக்கு நோக்கிய நகர்வுகளை துறைசார் வல்லுநர்களையும் இணைத்து திட்டமிடும் ஆற்றல், சகோதர (சக தமிழ்த் தேசிய) கட்சிகளின் நல்ல முயற்சிகளை பாராட்டி ஊக்கப்படுத்தும் பெருந்தன்மை போன்ற நல்ல இயல்புகளோடு முக்கியமாக தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக கொள்கைப்பற்றுடன் செயற்படக்கூடியவர்களாகவும் உடைய பிரதிநிதிகளை அடையாளப்படுத்தி தெரிவுசெய்ய முயலுவோம்.
இவ்வாறானவர்கள் தேர்தலில் நிற்கின்றார்களா? என்ற சிந்தனை எம்மனதில் எழக்கூடும். ஆனால் அவ்வாறானவர்களை அடையாளப்படுத்தும் முயற்சியை நாம் கைவிட்டுவிட முடியாது. பொருத்தமானவர்களை தெரிவு செய்வதுடன் மட்டும் நின்றுவிடாது, அவர்களை சரியான திசையில் வழிநடத்தும் பொறுப்பும் பொது மக்களாகிய எங்களுக்கு இருக்கின்றது.
எம்மிடையே பல சிந்தனை வேறுபாடுகளும் கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம். ஒருவரின் சிந்தனையும் தீர்மானமும் போன்று இன்னொருவரின் சிந்தனையும் முடிவும் இருக்காது, இது இயற்கை. இன்னொருவரின் சிந்தனையையும், முடிவுகளையும், அதற்கான அவர் சார்ந்த காரணங்களையும் விளங்கிக் கொள்ள முயல்வது பயன்தரும். எமது சிந்தனையை வலுக்கட்டாயமாக இன்னொருவரின் மீது திணிக்க முயல்வதோ, கோபம் கொள்வதோ அர்த்தமற்றது. ஆனால் எமது நீண்டகால அபிலாசைகளை அடைவதற்காக எமது அடிப்படைகளினின்று விலகாது, வேறுபாடுகளை மறந்து கைகோர்க்க வேண்டியதும் அவசியமாகின்றது.
எம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எமது பொது நோக்கங்களுக்காக சகோதர (சக தமிழ்த் தேசிய) கட்சிகளுடன் கைகோர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. எனவே “இனிய உளவாக இன்னாத கூறல், கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க எம்மிடையே பகை வளர்க்கும் வார்த்தைப் பிரயோகங்களையும், கருத்துக்களையும் தவிர்த்து பொருத்தமானவர்களை எமது பிரதிநிதிகள் ஆக்குவதில் எமது கவனத்தை குவிப்போம்.