(க.கிஷாந்தன்)
‘கொரோனா’ வைரஸ் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். திட்டமிட்ட அடிப்படையில் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
தலவாக்கலை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்குள் கொரோனா வைரஸ் சாதகமான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், துரதிஷ்டவசமாக இடம்பெற்ற ஒரு சம்பவத்தால் மீண்டும் சர்ச்சை நிலை ஏற்பட்டது. இந்நிலைமையையும் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பலம் எமது சுகாதார பிரிவினர், முப்படையினர், காவல்துறையினர் மற்றும் அரசாங்கத்துக்கு இருக்கின்றது.
தற்போதைய நிலையால் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் சிற் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பங்கேற்கும் கூட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பாரியளவு கூட்டங்களை நடத்தாமல் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சிறு அளவிலான கூட்டங்களை நடத்துமாறு எமக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நிலைமை விரைவில் சீராகிவிடும். எனவே, திட்டமிட்டுள்ளவாறு தேர்தல் நடைபெறும். பொதுத்தேர்தலில் நிச்சயம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவோம். – என்றார். #கொரோனா #இலங்கை #தேர்தல்