(1876- ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நாடக கலைநிகழ்ச்சிகள் சட்டம் என்பது இந்தியாவை பொறுத்தமட்டில், அரசுக்கெதிரான நாடகங்களை தடைவிதித்தல் என்ற அடிப்படை சிந்தனாவாதக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டமையை, சுதந்திர இந்தியாவிலும், குறித்த சட்ட நடைமுறை பிரயோகிக்கப்பட்டிருந்த சம்பநிகழ்ச்சிகளை அறிந்துக் கொள்ளுமிடத்து உறுதியுடையதாக்குகிறது. அந்த அடிப்படையில், எம்.ஆர். ராதாவும், நாடகத்தடை சட்டமும் என்ற தலைப்பில், முனைவர், பேராசிரியர், இராமசாமி அவர்களின் கருத்துரை மற்றும், வினவு, கீற்று மற்றும் இன்னப்பிற வலைத்தளங்களில் வெளிவந்த கட்டுரைகளை ஆதாரமாகக் கொண்டு, குறித்த கட்டுரை ‘ தடையை தகர்த்தெறிந்த எம். ஆர்.ராதா’ என்ற தலைப்பில் அவரின் தடைசெய்யப்பட்ட நாடகங்களும், அவை மீண்டும் அரங்கேறிய விதமும் குறித்து இயலுகிறது.)
நடிகவேள் என்று நாடகவுலகும், திரையுலகும் கொண்டாடும் எம். ஆர். ராதா அவர்கள் சமூக சீர்த்திருத்த கருத்துக்களையும், பகுத்தறிவு சிந்தனை கருத்துக்களையும் தமது நாடகங்களின் ஊடாக பேசியவர். இவரின் நடிப்பை பாராட்டியே நடிகவேள் என்ற பட்டத்தை பட்டுக்கோட்டை அழகிரி வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
தனது 72 ஆண்டு கால வாழ்க்கைப் பயணத்தில், நாடகங்களுக்கூடாக அவர் பேசிய சமூக சீர்த்திருத்த கருத்துக்கள் ஏராளமானவை. தன்னுடைய சிறுபராயத்திலிருந்தே ( பன்னிரெண்டு வயதிலிருந்து) நாடகவுலகில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர், 1924 ஆம் ஆண்டு ஜெகந்நாத ஐயரின் நாடகக் கம்பனி நடாத்திய, ‘ கதரின் வெற்றி’ எனும் நாடகத்தில், பாயாசம் எனும் நகைச்சுவை பாத்திரம் ஏற்று நடித்து, பலரது பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார். சிறுவயது பழக்கத்தின் காரணமாக, 1932 இல், பொன்னுசாமி பிள்ளையின் – மதுரை ஸ்ரீ பாலகான சபாவில், சேர்ந்து நடித்துவந்தார்.
பெரியாரின் சுய மரியாதை இயக்கக் கருத்துக்களாலும், பகுத்தறிவு சிந்தனை கருத்துக்களாலும் கவரப்பட்ட இவர், 1943 இல் திராவிட மறுமலர்ச்சி நாடக மன்றம் என்ற மன்றினையும், நிறுவினார்.
விமலா அல்லது விதவையின் கண்ணீர், இழந்த காதல், ரத்தக் கண்ணீர், தூக்கு மேடை, போர்வாள், இராமாயணம், தசாவதாரம், பம்பாய் மெயில் போன்ற நாடகங்களை நடித்திருந்தார். இவற்றுள், ரத்தக் கண்ணீர் நாடகம் 3,500 முறை மேடையேற்றப்பட்டதுடன், பின்னாளில், ( 1954) திரைப்படமாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
1876 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, நாடக நிகழ்த்துகை சட்டம் சுதந்திர இந்தியாவிலும், அதன் சட்டவாக்கச் செயன்முறைகளில், சில திருத்தங்களோடு நடைமுறையில் இருந்ததன் காரணமாக, எம். ஆர். ராதாவின் நாடகங்களும் அச்சட்ட நடைமுறைக்கமைய, தடைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சட்ட ஏற்பாடுகள், வரையறுத்திருந்த விதி முறைகளுக்கமைய, எம். ஆர் ராதாவின் நாடகங்கள், தடைசெய்யப்படுவதும், கைது செய்யப்படுவதும் வாடிக்கையான ஒன்றாக நிகழ்ந்துக் கொண்டிருந்த காலப்பகுதியில், ( காமராஜர் ஆட்சி காலத்தில் மாத்திரம் 52 தடவைகள் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.) தடை செய்யப்பட்ட நாடகங்களை பெயர் மாற்றி மேடையேற்றவும் செய்தார்.
இதனடிப்படையில், ரத்தக் கண்ணீர் நாடகம் – மேல்நாட்டு படிப்பு என்ற பெயரிலும், தூக்கு மேடை நாடகம் – பேப்பர் நியூஸ், காதல் பலி, நல்ல முடிவு போன்ற பெயர்களிலும், போர்வாள் என்ற நாடகம் சர்வதிகாரி, நண்பன், சுந்தர்லீலா, மகாத்மா தொண்டன், மலையாள கணபதி போன்ற பெயர்களிலும் இராமாயணம் – இலட்சுமி காந்தன் என்ற பெயரிலும் பெயர் மாற்றஞ் செய்யப்பட்டு, மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவரின் இழந்த காதல் நாடகம், நிலவுடைமை ஆணாதிக்கத்திற்கெதிரான காதலை ஆதரிப்பதாகவும், 1940 முதல் நடிக்கப்பட்டு வந்த, போர்வாள் நாடகம், மன்னராட்சியின் கொடுங்கோன்மை, பொருந்தாத் திருமணம், புராண ஆபாசம், கோயிலில் நடைபெறும் ஊழல் என அனைத்து விதமான சமூக சீர்க்கேடுகளை சாடுவதாகவும், தூக்கு மேடை நாடகம், பார்ப்பனர்களின் சூழ்ச்சி, நேர்மையானவர்களின் காதலை தோற்கடிக்கும் பொய் சாட்சிகள் முதலிய இன்னோரன்ன சமூகத்தில் புரையோடிப்போயிருந்த கரைகளை வெளுப்பதாகவும் அமைந்திருந்தது.
‘இராமர் நேபாளி’ என்ற சர்ச்சைக்குரிய கருத்தை நேபாள் பிரதமர் அண்மை காலங்களில் வெளியிட்டிருந்தமையும், சமுக வலைத்தளங்கள் அதனை வெளிக்கொண்டு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில் நோக்கின், இன்றுவரை பல்வேறு சர்ச்சைகளுக்கும், கேள்விகளுக்கும் காரணமாக விளங்கும் இராமாயணத்தை 1954 இல் கும்பகோணத்தில், எம். ஆர். ராதா நாடகமாக மேடையேற்றிய போது, ராமர் வேடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
ராதாவின் ராமாயணம், கீமாயாணம் என பலராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு, தடைசெய்யப்பட்டக் காலத்தில், அவரின் இராமாயணம், இராமனை, சீதை, லவ,குசன் ஆகியோரின் பார்வையில் கேள்விக்குள்ளாக்குவதாகப் படைக்கப்பட்டிருந்தது.
( ‘எங்கே எங்கே நீதி
இராமன் வாழ்விலே
இராமராஜ்யம் தன்னிலே
அது அன்றும் இல்லை
இன்றும் இல்லை
என்றே சொல்வீர்
தெய்வம் ஆவானோ இராமன்’ )
அநீதியிதே – என்று இலவ குசன் பாடுவதான பாடலுடன் முடிவடையும் வகையில் படைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, இவரின் இராமாயணத்திற்கெதிராக, சென்னை மாகாண சட்டசபை ஒரு புதிய நாடகத்தடைச் சட்டத்தையே கொண்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக இராமாயண நாடகத்திற்கெதிரான எதிர்ப்புகள் வலுப் பெற்றிருந்தமையின் பயனாக, திருவாரூர், தங்கராசு அவர்களை எழுத வைத்து பத்து அவதாரங்களையும் தோலுரிக்கும், தசாவதாரம் நாடகத்தை மேடையேற்றினார்.
இவரின், விமலா அல்லது விதவையின் கண்ணீர் என்ற நாடகம், மேடையேற்றம் செய்யப்பட்டக் காலத்தில், சாஸ்த்திர சம்பிரதாயங்களுக்கு முரணானது: சமுகத்தின் அமைதியை அந் நாடகம் கெடுத்துவிடும் எனும் அடிப்படையில் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில், வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும், குறித்த நாடகம் எவ்வித தங்கு தடையுமின்றி மேடையேற்றப்பட்டதுடன், பலரின் பாராட்டையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. நீதிபதி கணேசய்யரே குறித்த நாடகத்தை, இங்கு மட்டும் இந்த நாடகம் நடந்தால் போதாது: இந்தியா முழுதும் நடைபெற வேண்டும் என்று கூறி, ராதாவை பாராட்டி உத்வேகப்படுத்தியதாக, ‘ உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள் என்ற சா.இலாகுபாரதியின் கட்டுரையில்’ எடுத்துக்காட்டப்பட்டமை கூர்ந்து நோக்குதற்குரியது.
இவரின், இராமாயணத்திற்கெதிராக பல்வேறு கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு, நீதிமன்றுகளில் வழக்குத் தொடரப்பட்ட காலப்பகுதியில், ‘ என்னுடைய நாடகங்கள், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களையாவது புண்படுத்துகிறது என்பதாக கருதுகிறவர்கள், என்னுடைய நாடகங்களைப் பார்ப்பதற்கு வரத்தேவையில்லை: அவர்களின் பணமும் எனக்கு தேவையில்லை.’ என பகிரங்கமாகக் கூறியே நாடகங்களை நடத்தினார்.
இப்படியாக, 5,641 நாடக நிகழ்வுகளை சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை முன்மொழிந்தும், பகுத்தறிவு சிந்தனாவாதக் கருத்துக்களை வெளிப்படுத்தியும், சட்டம் பல்வேறு தடைகளை விதித்த போதும், அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து, ‘கலை, வாழ்க்கைக்காக’ என்ற அடிப்படையில், நாடகங்களுக்கூடாக, வாழ்ந்து காட்டியவர் எம். ஆர் ராதா.
இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைகழகம்.