காவல்துறை சிறப்பு அதிரடிப் படையின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டும் யுத்தகாலத்தில் அதிரடிப் படையிலிருந்து உயிரிழந்த வீரர்களை நினைவு கூர்ந்தும் காயமடைந்து தற்பொழுதும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆசி வேண்டியும் நாடுமுழுவதும் மத வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்றைய தினம் வழிபாடு இடம்பெற்றது.
1983ஆம் ஆண்டு காவல்துறை சிறப்பு அதிரடிப் படை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கடமையின் போது 467 பேர் உயிரிழந்துள்ளனர். 1986ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் திகதி யாழ்ப்பாணம் திக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு சிறப்பு அதிரடிப் படையினர் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் நினைவுகூரும் தினம் செப்ரெம்பர் முதலாம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நல்லூர் ஆலயத்தில் இன்று வழிபாடுகள் இடம்பெற்றன. அதில் யாழ்ப்பாணம் மூத்த காவல்துறை அத்தியட்சகர் கெட்டியாராட்சி, மூத்த காவல்துறை அத்தியட்சகர் அபயகோன் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதேவேளை, முல்லைதீவு வற்றாப்பளை அம்மன் ஆலயம், மடு தேவாலயம், மன்னார் திருக்கேதீஸ்வரம், திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆகிய ஆலயங்களிலும் வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
பூசை வழிபாடுகளின் நிறைவில் தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது . இந்த நினைவு தினத்தின் பிரதான நிகழ்வு செப்ரெம்பர் முதலாம் திகதி களுத்துறையில் இடம்பெறவுள்ளது. #அதிரடிப்படை # நல்லூர்கந்தசுவாமிஆலயம் #வழிபாடு