மன்னார் நகர சபையின் கீழ் உள்ள புதிய பேருந்து தரிப்பிடத்தில் மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து சேவை மற்றும் இலங்கை அரச போக்குவரத்துச் சேவைகள் இணைந்த சேவையாக மேற்கொள்ளுவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு இன்றைய தினம் புதன் கிழமை(16) மாலை தீர்வு எட்டப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் போக்குவரத்துக்கள் இணைந்த சேவையை மேற்கொள்ளுவது தொடர்பாக தொடர்ச்சியான முரண்பாடுகள் நிலவி வந்தஇந்த நிலையில் வடமாகாண ஆளுனாின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் விசேட கூட்டம் இன்றைய தினம் புதன் கிழமை(16) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பிரத்தியேக செயலாளர் வசந்தன்,மன்னார் நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன், மன்னார் நகர சபையின் செயலாளர்,மாவட்டச் செயலக அதிகாரிகள் , பிரதேசச் செயலாளர் , அரச , தனியார் போக்கு வரத்து சங்க அதிகாரிகள்,மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கம், இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை அதிகாரிகள் ,பிரதி நிதிகள்,தொழிற்சங்க பிரதி நிதிகள் , மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன்,என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது தொடர்சியான முரண்பாடுகள் காரணமாகவும் மனக்கசப்புக்கள் காரணமாகவும் இணைந்த நேர அட்டவணைக்கு அமைவாக புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபட இலங்கை அரச போக்குவரத்துச் சேவை பிரதி நிதிகள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
புதிய பேரூந்து தரிப்பிடம் ஒன்று அமைக்கப்பட்ட போதும்,மன்னாரில் அரச தனியார் போக்குவரத்து சேவைகள் தொடர்ந்தும் தனித்தனியாக இடம் பெற்று வருகின்றது.
எனினும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் ஒரே பேரூந்து தரிப்பிடத்தில் அரச தனியார் பேரூந்துகள் இணைந்த சேவையை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்து வந்தனர்.
-இன்றைய தினம் மாலை இடம் பெற்ற கூட்டத்தில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் கூறித்த கூட்டத்தில் ஏற்பட்டது.
எனினும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இணைந்த சேவையை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை முன் வைத்தனர்.
இதன் போது எதிர் வரும் இரண்டு வாரங்களுக்கு சுமூகமான முறையில் ஒன்றிணைந்த நேர அட்டவணைக்கு அமைவாக போக்குவரத்து சேவையை மேற்கொள்ள கோரிக்கை முன் வைக்கப்படடது.
அதற்கு அமைவாக எதிர் வரும் இரண்டு வராங்களுக்கு அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஒன்றிணைந்த நேர அட்டவணைக்கு அமைவாக இணைந்த போக்குவரத்து சேவையை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.
-எதிர் வரும் இரண்டு வராங்களுக்குள் ஏற்படுகின்ற பிரச்சினைகள், குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு புதிய நேர அட்டவணையை தாயரித்து போக்கு வரத்துச் சேவையை தொடர்ந்து மேற்கொள்ளுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துச் சபையின் தலைவரின் தலைமையில் எதிர் வரும் இரண்டு வாரங்களுக்குள் புதிய நேர அட்டவணை தயாரிக்கப்பட்டு நடை முறைப்படுத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.அது வரைக்கும் பழைய நேர அட்டவணைக்கு அமைவாக அரச தனியார் போக்கு வரத்து சேவைகள் ஒன்றிணைந்த சேவையாக முன்னெடுக்கப்படும் என சுமூகமான முடிவு எடுக்கப்பட்டது. #நேரஅட்டவணை #போக்குவரத்துசேவை #மன்னார் #நகரசபை