தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து வரும் தேசிய விடுதலை ராணுவம் எனும் போராளிக் குழுவின் தலைவர் வில்வர் வில்லேகாஸ் பலோமினோ குறித்து தகவல் வழங்குபவா்களுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்கள் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ கொலம்பியாவுக்கு பயணம் மேற்கொண்டு இரண்டு நாட்களின் பின்னா் தனது ருவிட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது 38 வயதாகும் வில்வர் வில்லேகாஸ் பலோமினோ 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் கொக்கைன் போதை பொருள் விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது
இ.எல்.என் என்று அறியப்படும் தேசிய விடுதலை ராணுவம் கொலம்பியாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் மார்க்சியப் போராளிக் குழுவாகும்.
கொலம்பியாவில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து, நிலம் மற்றும் வளங்களை சமமாகப் பிரித்து வழங்கும் நோக்கில் 1964ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அமைப்பில் சுமார் 2000 பேர் உறுப்பினர்களாக உள்ளார்கள்.
1959இல் நிகழ்ந்த கியூபப் புரட்சியின் உந்துதலால் இந்த அமைப்பு ஆரம்பமாகியது என்பது குறிப்பிடத்தக்கது #போராளிக்குழு #தலைவா் #சன்மானம் #கொலம்பியா #கியூபப்புரட்சி