யாழ்ப்பாணம் குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேரும் பாசையூர் மேற்கு பகுதியில் உள்ள அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான வளாகத்தில் கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் குருநகரில் தங்கவைக்கப்பட்டிருக்கவில்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் குருநகரையும் மற்றையவர் பருத்தித்துறையையும் வதிவிடமாக உள்ள போதும் பேலியகொடவிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பியதும் கடலுணவு நிறுவனத்துக்குச் சொந்தமான பாசையூர் மேற்கில் உள்ள இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதனால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கூலர் வாகனத்தில் சென்று வந்த இருவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
அவர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இரண்டு பேரும் கோவிட் -19 சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றப்படுவதுடன், அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறினர்.