Home இலங்கை கோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன?

கோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன?

by admin

இறையாண்மையை அர்ப்பணிக்கத் தயாரில்லை:

சர்வதேச தொடர்புகளின் போது இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டினை அர்ப்பணிப்பதற்கு தாம் எத்தருணத்திலும் தயாரில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவை சந்தித்தபோது கூறியுள்ளார்.

இலங்கையின் சர்வதேச கொள்கைகள் நடுவுநிலைமையை அடிப்படையாகக் கொண்டவை என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு நேற்று காலை பயணம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர், ஜனாதிபதி செயலாளர் கலாநிதி P.B.ஜயசுந்தரவினால் வரவேற்கப்பட்டார்.

அதன் பின்னர் ஜனாதிபதியை சந்தித்த இராஜாங்க செயலாளர் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலங்கையுடன் தொடர்ச்சியாக ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தயார் என இராஜாங்க செயலாளர் இந்தத் தருணத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடல் வலயம் சமாதானமான வலயமாக இருப்பதனை காண்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என சுட்டிக்காட்டியுள்ள இராஜாங்க செயலாளர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நட்புறவு தொடர்பாக தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இந்திய கடல் வலயத்தில் சமாதானத்தைக் காண்பதே இலங்கையின் அபிலாசையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றைய நாடுகளுடன் உறவைப் பேணும் விதத்தில் வரலாறு, கலாசார உறவுகள், பிராந்திய மேம்பாட்டு ஒத்துழைப்பு என்பன முக்கியத்தும் பெறுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிவினைவாத யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டின் அடிப்படை வசதிகளின் அபிவிருத்திக்கு சீனா உதவியதாகவும், அதன் பலனாக, இலங்கை கடன் சுமைக்குள் தள்ளப்படவில்லை என அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் ஜனாதிபதி வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு நாடுகளுக்கிடையில் பாதுகாப்பான ஒத்துழைப்பை தொடர்ந்தும் வலுப்படுத்துவதற்கு, இந்த சந்திப்பின் போது இரண்டு தரப்பும் இணங்கியதுடன், இந்நாட்டு இராணுவ வீரர்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படும் பயிற்சியும் பொருள் உதவியும் அதில் உள்ளடங்குகின்றது.

போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்காக கரையோரப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளதை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளதுடன், அதற்கான ஒத்துழைப்பு வழங்க முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் கூறியுள்ளார்.

இலங்கையில் அமெரிக்க முதலீட்டு ஊக்குவிப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக மைக் பொம்பியோ ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக கடனெடுப்பது இலங்கையின் தேவை அல்லவென்றும் வௌிநாட்டு முதலீட்டை கவர்ந்திழுப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அடைவதே நோக்கம் எனவும் ஜனாதிபதி இந்தத் தருணத்தில் தெரிவித்துள்ளார்.

விவசாயத்துறையின் நவீனமயப்படுத்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது கோரியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவுடன் முகாமைத்துவம் தொடர்பான உதவி இராஜாங்க செயலாளர் பிரயன் புலதாவோ, தென் மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கைகள் தொடர்பான பிரதம பிரதி உதவி இராஜாங்க செயலாளர் டீன் தொம்ஸன், தூதுவர் அலெய்னா பீ டெப்லிட்ஸ் ஆகியோரும் அமெரிக்க தூதுக்குழுவில் அங்கம் வகித்தனர்.

இதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுடனான சந்திப்பு இறுதி நேரத்தில் தவிர்க்கப்பட்டமைக்கான காரணம் பற்றி பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

குறிப்பாக 20 ஆவது திருத்தச் சட்டத்தின் பின் ஜனாதிபதிக்கே அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டு உள்ள நிலையில் அவரை சந்திப்பதோடு தனது பயணத்தை மைக் பொம்பியோ நிறுத்திக்கொண்டார் என ஒரு சாரார் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடனான உரையாடலில் ஏற்பட்ட அதிர்ப்த்தியே பிரதமருடனான சந்திப்பு கைவிடப்பட்டமைக்கு காரணம் என பிறிதொரு சாராரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More