ஹொங்கொங் சட்டசபையில் இருந்து ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் அனைவரும் பதவிவிலகியுள்ளனா். சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டம் ஹொங்கொங்கில் அமுல்படுத்தப்பட்டதிலிருந்தே ஜனநாயகத்திற்கு ஆதரவான அரசியல் கட்சியினர் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், பல்வேறு சமூக ஆர்வலர்களும், சுதந்திரத்திற்கான ஆதரவாளர்களும் சீன அரசால் கைது செய்யப்பட்டு வருகின்ற அதேவேளை மக்கள் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஹொங்கொங்கின் சட்டசபை உள்விவகாரங்களிலும் சீனா நேரடியாக தலையிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் வகையில் ஹொங்கொங் சுதந்திரத்திற்கு ஆதரவாக செயல்படும் சட்டசபை உறுப்பினர்கள் நீதிமன்றத்திற்கு செல்லாமல் அவர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஹொங்கொங் அரசாங்கத்திற்கு உரிமை வழங்கும் வகையிலான சட்டம் சீன நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட உடனுமே ஹொங்கொங் சட்டசபை உறுப்பினர்கள் 4 பேரை ஹொங்கொங் அரசாங்கம் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமை ஹொங்கொங் ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த 4 சட்டசபை உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து ஜனநாயக ஆதரவு சட்டசபை உறுப்பினர்களான எதிர்க்கட்சியினர் 15 பேரும் நேற்றையதினம் பதவிவிலகியுள்ளனா். இந்த பதவிவிலகலானது ஹொங்கொங்கில் மக்கள் போராட்டத்திற்கு வழிவகுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. #ஹொங்கொங் #ஜனநாயக #சட்டசபைஉறுப்பினர்கள் #பதவிவிலகல் #சீனா