Home இலங்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – கஜேந்திரகுமார் காணும் வகையில் நோட்டீஸ் ஓட்ட உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – கஜேந்திரகுமார் காணும் வகையில் நோட்டீஸ் ஓட்ட உத்தரவு!

by admin

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வரும் பெப்ரவரி 17ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றினால் ஒத்திவைக்கட்டது.

பிரதிவாதிகள் இருவர் தொடர்பிலும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நீதிமன்ற அறிவித்தலை சேர்ப்பிப்பதற்கு சென்ற போதும் அவர்கள் அங்கு இல்லை என நீதிமன்ற கட்டளைச் சேவகரால் அறிக்கையிட்டதை ஆராய்ந்த மன்று, அந்த முகவரியில் பிரதிவாதிகள் காணும் வகையில்
அறிவித்தலை ஒட்டுமாறு உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் இந்த வழக்கை தன் சார்பில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்ட போதே யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம், இந்த உத்தரவை வழங்கியது.

பின்னணி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை நீக்கியதற்கு தடை விதித்து உத்தரவிடக் கோரி,
 சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம்,
அவரை உறுப்புரிமையில் நீக்கியதற்கு இடைக்காலத் தடை கட்டளையை வழங்கி அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கு உத்தரவிட்டது.

அதனால் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீடிக்க வழிசமைக்கப்பட்டது.

எனினும் இந்த உத்தரவை மதிக்காது அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தம்மை அந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநகர சபை நடவடிக்கைகளில் செயற்பட முடியாது என்று மாநகர சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் என்று மனுதாரர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ள ஒருவரான வி.மணிவண்ணன் எமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநகர சபையின் நடவடிக்கைகளில் பங்கேற்பதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே எமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த வி.மணிவண்ணனை அனுமதித்தமை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பிரதிவாதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்மனுதாரர் இந்தக் கடிதத்தை யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு அனுப்பியதன் மூலம் நீதிமன்று 29.10.2020ஆம் திகதி வழங்கிய கட்டாணையை மீறியுள்ளார். அவ்வாறு மீறியதன் மூலம் குற்றவியல் நடவடிக்கையின் 663ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் நீதித்துறை சட்டத்தின் 55(பி) பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய நீதிமன்ற அவமதிப்பு எனும் குற்றத்தினைப் புரிந்துள்ளார்.

mullai pokkal (முல்லைப்பூக்கள்) என இரண்டாம் எதிராளியால் அல்லது அவரது நெருங்கிய ஒருவரால் இயக்கப்படும் போலி முகநூலிலிருந்து இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்வது தொடர்பில் என்னை அச்சுறுத்தும் பாணியில் என்னை ரக் (Tag) செய்து முகநூல் பதிவுகள் இடப்படுவதுடன், எனது முகநூல் உள்பெட்டிக்கும் (Inbox) தகவல்கள் அனுப்பப்படுகின்றன. (அவற்றின் அச்சுப்பிரதிகளும் மனுவில் இணைக்கப்பட்டுள்ளன.)

அந்தப் போலி முகநூல் இரண்டாம் எதிராளியால் அல்லது அவரது நெருங்கிய சகவால் இயக்கப்படுவதாக நான் சந்தேகிப்பதற்கான காரணம், இந்த வழக்குத் தொடர்பில் மன்றின் பிஸ்கால் ஊடாக 29.10.2020ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்குப் பின் அழைப்புக் கட்டளை சேபிக்கப்பட்ட மறுநாளான 30.10.2020ஆம் திகதி முற்பகல் 9.10 மணிக்கு வழக்கின் பிராதில் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்த முகநூலில் குறிப்பிடப்பட்டிருந்ததாகும் என்றும் மனுதாரரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். #நீதிமன்றஅவமதிப்பு #கஜேந்திரகுமார் #நோட்டீஸ் #உத்தரவு  #மணிவண்ணன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More