யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்தழிக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பராமரிப்பு பகுதியே இந்த இடித்து அழிக்கும் பணியை இரவோடு இரவாக முன்னெடுத்தது.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது. இந்நிலையில் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நள்ளிரவை தாண்டியும் பல்கலை மாணவர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பல்கலை முன்றலில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்நிலையில் பெருமளவான காவல்துறை விசேட அதிரடி படையினர் , காவல்துறையினர் , இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் அகற்றப்பட்டது தொடர்பில் பல்கலைக்கழ துணைவேந்தர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
எழுத்துமூலமாக தமக்கு அனுப்பப்பட்ட உத்தரவில், சட்டபூர்வமற்று எது கட்டப்பட்டாலும் அகற்றப்படவேண்டும். அகற்றப்பட்டபின் அதனை தமக்கு அறிவிக்கவேண்டும். தமக்கு இது கட்டப்பட்டது தொடர்பில் புலனாய்வு மூலம் தகவல் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது .
அதனால் இந்த விடயத்தை பராமரிப்பு பகுதி உரியதரப்பினருக்கு அனுப்பியிருந்தேன். எனவே அதனை வைத்துக்கொண்டிருக்க முடியாது. அகற்றப்படவேண்டிய விடயம்.
சின்ன அத்திவாரக்கல்லு வைப்பதென்றாலும் உரிய அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும் இவ்வாறு உள்ளது.
சிலர் இங்கு தமக்கு அரசியல் இலாபம் தேடுகின்றனர்.
ஆர்வக்கோளாறில் வந்திருக்கினம், மிரட்டல்களை தான் கையாளுவேன் அவர்கள் தாங்களாக போகாது விடின் கையாளுவோம் என துணைவேந்தர் தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. #யாழ்ப்பாண_பல்கலைக்கழகம் #முள்ளிவாய்க்கால்_நினைவிடம் #ஜேசிபிஇயந்திரம் #துணைவேந்தர்