11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகளை நேரில் கண்ட சாட்சிகளை சித்திரவதை செய்வதாகவும், அவர்களை சிறைக்குள் வலுக்கட்டாயமாக தடுத்து வைத்துள்ளதாகவும் சிறை நிர்வாகம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு சாட்சியாக இருந்த கைதிகளை விடுவிப்பதைத் தடுப்பதன் மூலம் மஹர படுகொலைக்கான சாட்சிகளை மறைக்க அதிகாரிகள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளின் போதும் கைதிகளை அச்சுறுத்துவதன் மூலமும் சித்திரவதை செய்வதன் மூலமும் கட்டாய வாக்குமூலங்களைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட போதிலும் தனது புதல்வன் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, ‘கைதிகளை உடனடியாக சித்திரவதை செய்வதை நிறுத்துங்கள்’ என்ற தலைப்பில் கம்பஹா மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தில் பங்கேற்ற தந்தை ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
“இப்போது இரண்டு மாதங்கள் ஆகின்றன. இன்னமும் வெளியில் விடவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றார்கள்” என அந்தனி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
சிறை அதிகாரிகளால் தனது புதல்வர் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய தந்தை அந்தனி சில்வா, கைதிகளுக்கு குறைந்தபட்ச அடிப்படை சுகாதார வசதிகளை கூட சிறை அதிகாரிகள் வழங்குவதில்லை எனவும் கூறியுள்ளார்.
“அவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை. அவர்கள் கழிப்பறைக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. ஐந்து பேருக்கு கழிப்பறைக்குச் செல்ல பொலிதீன் பையை வழங்குகின்றார்கள். குடிக்க தண்ணீர் கொடுப்பதில்லை. ஒவ்வொரு முறையும் நினைவுவரும்போதும், சிறை அதிகாரிகள் ஒவ்வொருவராக வந்து அவர்களை வெளியே அழைத்து தாக்குதல் நடத்துகின்றார்கள். பின்னர் சிறையில் அடைக்கின்றார்கள்”
தொற்றுநோய்களின் போது கைதிகளுக்கு போசாக்கான உணவு தேவைப்படும்போது சரியான உணவு கிடைப்பதில்லை என சுட்டிக்காட்டிய தந்தை அந்தனி சில்வா, பிள்ளைகளின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் சிறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கைகால்கள் உடைக்கப்பட்ட கைதிகள் தொடர்பில் விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படாமல் அந்த விடயங்கள் புறந்தள்ளப்பட்டுள்ளதாக அந்தனி சில்வா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட போதிலும் விடுதலை செய்யப்படாத பல கைதிகளின் உறவினர்கள் இந்தப்
போராட்டத்தில் பங்கேற்றனர்.
மஹர சிறைச்சாலையில் நடந்த மனிதாபிமானமற்ற கொலைகளை நியாயப்படுத்த பிணை வழங்கப்பட்ட கைதிகள் மீது வழக்குத் தாக்கல் செய்ய சிறை அதிகாரிகள் ஒரு திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக, சிறைச்சாலைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமல் சில்வா தெரிவிக்கின்றார்.
“கொலையாளிகளைப் பாதுகாப்பதற்காக இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்படுமோ என்ற வலுவான சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கைதிகள் இப்போது விடுவிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது இது ஆதாரங்களை அழிக்கும் முயற்சி என்பதைக் காட்டுகிறது.”
சிறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது எனவும் இது கைதிகளின் உரிமை மீறல் எனவும் சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் சார்பில் சுதேஷ் நந்திமல் மற்றும் சட்டத்தரணி சேனக பெரேரா ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத் தடுப்பதற் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கைதிகளின் உறவினர்களின் கையெழுத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலை படுகொலையில் 11 பேர் கொல்லப்பட்டதோடு, 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததோடு, அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. #மஹர_படுகொலை #சித்திரவதை #குற்றச்சாட்டு