இயற்கை எழில் கொஞ்சும் வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டமானது பச்சைப் பசேலென வயல் வெளிகளையும், கண்ணனின் கார்மேக வண்ணத்தையுடைய கடலையும், ஆலயங்களையும் கொண்டமைந்துள்ளது. எவ்வித பிரச்சினைகளுமற்ற வகையில் எமது வாழ்க்கையும் மிகவும் அழகாக நகர்ந்து கொணடிருந்தது. காலசூழ்நிலையினால் 2004ம் ஆண்டு ஆழிப்பேரலையின் தாக்கம். அதை நேரில் எதிர்கொள்ளவில்லையெனினும் ஒவ்வொருத்தரும் சொல்லுபவற்றை எண்ணிப் பார்க்கையில் மனதில் பயகெடுதியானது அலைமோதியது.
இதுவும் கடந்து போகும் என்பது போல காலப்போக்கில் வழமையான நிலைக்கு திரும்பிய மக்கள் அனைவரும் சந்தோசமாக தமது வாழ்க்கையை வாழத் தொடங்கினார்கள். மாலையானதும் எமது கிராமத்திலுள்ள சிறுவர்கள் அனைவரும் ஒன்று கூடி சங்கிலி புங்கிலி, டொக் டொக், சிரட்டைப்பந்து, குளம்கரை போன்ற பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி மகிழ்வடைவதும், சிலசமயம் விளையாடும் போது சண்டை வருவதும், அம்மாவிடம் அடி வாங்குவதும், அழுவதும் பின்பு கோபத்தில் விளையாடப் போகாமல் இருப்பதும் சில தினங்களில் மீண்டும் விளையாடப் போவதும் மகிழ்வையேயூட்டும்.
கள்ளம் கபடமற்ற மனதில் வஞ்சகமில்லா எண்ணம் கொண்டு விளையாடுவதும் ஒருகாலம்தான். இவ்வாறான அனுபவம் எல்லோர் வாழ்க்கையிலும் உண்டென்பதை மறுக்க முடியாது. அப்பருவத்தை மீண்டும் நாம் ஆசைப்பட்டாலும் எம்மால் அனுபவிக்கவும் இயலாது.
குறிப்பிட்ட சில வருடங்களின் பின் யுத்தம் நடைபெறப் போவதாகவும் நாட்டின் சூழ்நிலை மிக மோசமான நிலைக்கு வந்து விடும் என்று வீட்டில் பெரியவர்கள் அடிக்கடி பேசிக் கொள்வார்கள்.
இயற்கையின் சீற்றம் வந்து சரியாக 5 வருடங்கள் கடந்ததும் 2009ம் ஆண்டு விதிவசத்தால் நாட்டில் போர் உச்ச நிலைக்கு வந்தது. அசாதாரண சூழ்நிலையும் ஏற்பட்டது. எனக்கு அப்போது சரியாக பதினான்கு வயது. யுத்தத்தின் போது ஹெலி வரும் சப்தம் கேட்டாலே பதுங்கு குழியினுள் பதுங்கி மறைவதும், ஒவ்வொரு நிமிடமும் பயந்து பயந்து வாழ்ந்ததையும் என்னால் மறக்கவே இயலாது.
யுத்தத்தினால் கிளிநொச்சி மற்றும் ஏனைய இடங்களில் உள்ளவர்கள் அனைவரும் தமது உடமைகள் சிலவற்றை எடுத்தும், விடுத்தும் எமது இடங்களை நோக்கி புறப்பட்டு வந்தனர். பாதைகள் எல்லாம் வாகன நெரிசல்கள். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டத்தினர் அலைமோதினார்கள். யுத்தத்தினால் பாடசாலைகள் உட்பட அனைத்து கல்வி நடவடிக்கைகளும் முடங்கிப் போயின. ஒவ்வொரு பாடசாலைகளிலும் மக்கள் இருப்பதற்கு இடமின்றி குடியேறினார்கள். எமது கிராமங்களிலுள்ள ஒவ்வொரு வளவினுள்ளும் நான்கு, ஐந்து குடும்பங்கள் என சிறு சிறு குடிசைகளை அமைத்து வாழ்வில் இக்கட்டான ஒவ்வொரு நாளையும் நகர்த்திச் சென்றார்கள். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அதிக விலையில் விற்கப்பட்டன. மிகவும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் அதிக பணம் கொடுத்து பொருட்களை வாங்க முடியாமல் பசியாலும் வாடினார்கள். இருந்தும் மனிதாபிமான அடிப்படையில் இருந்தவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்தும் உதவி செய்தனர்.
காலப்போக்கில் விதிவசத்தால் நாமும் எம் இடங்களை விட்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மோசமாக மாறியது. அனைத்து மக்களும் அத்தியாவசியப் பொருட்களான ‘உணவு, உடை, உறையுள்’ என்பவற்றையெல்லாம் இழந்து எங்கு செல்வது, என்ன செய்வது என்று அறியாத நிலைக்கு தள்ளப்பட்டோம். அனைவரும் எப்படியாவது உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு முடிவை நோக்கியே ஓட ஆரம்பித்தோம்.
எவ்விடங்களிற்குச் சென்றாலும் பதுங்குழியை அமைத்து அதனுள்ளே ஒவ்வெருவரும் இருந்தோம். பச்சிளங் குழந்தை முதல் வயது முதிர்ந்த வயோதிபர்கள் உட்பட அனைவருமே குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமலும், உணவில்லாமலும் தமது வலிமையை இழந்தனர். எப்போதும் அனைவரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருப்பது போல இந்த நிமிடம் இருக்கும் நாம் அடுத்த நிமிடம் வரையும் இருப்போமா? எனும் பயத்தினாலேயே பயந்து, ஒடுங்கி, பதுங்கி ஒவ்வொரு நாளையும் கடந்து சென்றோம். ஆரம்பத்தில் இருப்பதற்கு சிறு குடிசையையாவது அமைத்து இருந்தோம். தற்போது யுத்தம் கடுமையானதால் எமது எல்லா உடமைகளையும் விடுத்து முக்கிய ஆவணம் உள்ளடங்களாக ஒரு சிறிய கைப்பையை மாத்திரமே கைவசம் வைத்துக் கொண்டு பாதுகாப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.
பசியாலும், தண்ணீர் இல்லாமலும் நாம் பட்ட கஷ;டத்தை ஒருபோதும் என்னால் மறந்து விட முடியாது. சாப்பாடு மற்றும் தண்ணீரின் அருமை அப்போதுதான் புரிந்தது. ஒன்று இருக்கும் போது அதன் அருமை தெரியாது. அது இல்லாமல் போகும் போதுதான் அதனுடைய அருமை தெரியும் என்பார்கள். அது உண்மையான விடயமே. முதலில் சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்றெல்லாம் அகம்பாவம் காட்டியவர்கள் எல்லோரும் ஒருவேளை கூட உணவின்றி அனைவரும் உயிர் பிழைத்துப் போனால் மாத்திரமே போதுமெனும் மனோநிலையில் அடங்கி ஒடுங்கிப் போயிருந்தனர்.
காதுகளில் எந்நேரமும் குண்டுவெடிப்புச் சப்தமும், பீரங்கித் தாக்குதலும், உறவுகளைப் பிரிந்த மக்களின் அழுகைக் குரலும் கேட்டுக் கொண்டேயிருக்கும். யுத்தத்தில் காயப்பட்ட பலரும் தகுந்த மருத்துவ சிகிச்சை இன்றியும் உயிரிழந்தனர். அவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அழித்திருந்தால் காப்பாற்றி இருக்க இயலும். ஆனால் இச்சூழ்நிலையில் மருத்துவமனைகள் எல்லாம் காயப்பட்டவர்கள் உட்பட இறந்தவர்களும் நிரம்பி வழிந்தனர். உயிர்களைத் துச்சமாக மதிக்கும் அளவிற்கு நிலமை மிக மோசமானது. யார் யாரைக் காப்பாற்றுவது எனும் நிலைக்கு வந்து விட்டோம்.
யுத்த காலத்தில் பணம், நகை, சொத்து என்று எதற்குமே மதிப்பு இல்லாத நிலை. ‘பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்’ என்பார்கள். யுத்தநிலையில் இது உண்மையில்லை என்றே கூற வேண்டும். உயிருக்கே மதிப்பில்லாமல் போன காலமிது. அவ்வாறிருக்க பணத்தையெல்லாம் ஒரு பொருட்டாகவே யாரும் பார்க்கவில்லை. சில்லறை நாணயக்குற்றிகளின் பாவனையும் தடைப்பட்டது.
மலை போல ஒவ்வொரு இடங்களிலும் பெறுமதியை இழந்து நாணயக்குற்றிகள் குவிந்து கிடந்தன. ஒரு முச்சக்கரவண்டியைக் கொடுத்து 5 தேங்காய் வாங்கியவர்களும் உண்டு என்கையில் சிந்தித்து பாருங்கள்.
மீண்டும் கடற்கரை வழியாக அனைவரும் இறுதிக்கட்டத்தை நோக்கிப் பயணித்தோம். போகும் போது குண்டு சப்தம் கேட்டதும் உடனே கீழே வீழ்ந்து கிடப்பதும் பின்னர் எழுந்து செல்வதுமாக இருந்தோம். பதுங்குழி அமைப்பதற்கு கூட இயலாத நிலை. பெரிய வாகனங்களுக்குக் கீழ் அனைவரும் பதுங்கி கிடப்பதுமாக உயிரை பாதுகாத்து இருந்தோம். எங்கும் குண்டு வெடிப்பும், புகை எழும்புவதுமாக இருக்கும். நம்மவர்கள் அனுபவித்த துன்பத்திற்கு அளவே கிடையாது.
இறுதியாகப் போவதற்கு இடமின்றி அனைவரும் முடங்கிப் போயிருந்தோம். எங்கு பார்த்தாலும் இறந்தவர்களின் உடல்கள் அங்காங்கே கிடக்கும். தடையை தாண்டுவது போல இறந்தவர்களையும், அதிக காயப்பட்டவர்களையும் தாண்டி வரும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. அத்தோடு எழுந்து நடக்க முடியாத வயோதிப நிலையிலுள்ளவர்களைக் கூட ஒருசிலர் அவ்விடத்திலே கைவிட்டுச் சென்றனர்.
யுத்தத்தில் நானும் எனது குடும்பத்தில் நான்கு உறவுகளை இழந்துள்ளேன். ஒவ்வொருவரும் தமது உறவுகளை அநியாயமான முறையில் காவு கொடுத்தனர். இதை இப்போது நினைக்கையிலும் மனமானது குமுறுகிறது. இவ்வாறான சூழ்நிலையிலும் கூட ஒருசிலர் இறந்தவர்களின் உறவினர்கள் என்று அவர்களினுடைய நகைகளை கழற்றியவர்களும் உண்டு.
இறுதியாக மே 18 முள்ளிவாய்காலினுள், கட்டுப்பாட்டுக்குள் வந்து மூன்று தினங்களின் பின் முகாம்களில் குடியேறினோம். குடியேறும் போது கோயில் திருவிழாக்களில் எவ்வாறு உறவுகளைத் தவற விடுவேமோ அதைப் போன்றே சிலர் உறவுகளைப் தவற விட்டனர். பின்னர் சில மாதங்களில் சேர்ந்தும் கொண்டனர். ஆனால் இறந்த உறவுகளை எப்படி சேர்த்துக் கொள்வது. குடும்பங்களில் அம்மாவை இழந்து பிள்ளைகளும், பிள்ளைகளை இழந்து பெற்றோர்களும், தந்தையை இழந்து பிள்ளைகளும் என உறவுகளை இழந்துள்ளனர்.
முகாம்களில் அனைவரும் ஆரம்பத்தில் தகுந்த முறையில் சாப்பாடின்றி பசியால் வாடினோம். அத்தோடு குறுகிய இடத்தில் சனத்தொகை அதிகமாக இருந்ததினாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித வருத்தமும் வந்தது. பின்னர் இந்நிலைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் ஏற்பட்டது.
காலப்போக்கில் அனைவரும் முகாம்களில் முகந்தெரியாத நபர்களுடன் நல்ல நட்புறவை வளர்த்துக் கொண்டோம். சந்தோசமாக வாழ ஆரம்பித்தோம். கல்வி நடவடிக்கைகள் மரத்தடியின் கீழ் ஆரம்பித்து படிப்படியாக முன்னேற ஆரம்பித்தோம். முகாம்களில் சிறுவர்கள் அனைவரும் சேர்ந்து கல்வி கற்பது, விளையாடுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டனர். நடைபெற்று முடிந்த யுத்தத்தை மறக்கும் முகமாக பல்வேறு கலை நிகழ்வுகள் எல்லாம் நடாத்தப்பட்டது. அத்தோடு முகாம்களில் கூத்துக்களில் புலமை உள்ளவர்களை உள்வாங்கி காத்தவராயன் கூத்து உட்பட பல்வேறு கூத்துக்கள் அனைவரையும் கூட்டி இரவில் நிகழ்த்திக் காட்டப்பட்டது. இச் செயற்பாடுகளினால் அவ்வப்போது யுத்த சம்பவங்களை மறந்தோமே தவிர என்றும் எம்மவர்கள் மத்தியில் அது அழியாத நினைவலைகளாகத்தான் உள்ளது.
பிற இடங்களிலுள்ள எம் உறவுகள் முகாம்களில் வருகை தந்து எம்மைப் பார்வையிட்டனர். ஆறு மாத காலம் முகாம்களிலிருந்து விட்டு மீண்டும் குடியேற்றத்தினால் அப்பாவின் பிறப்பிடமான மட்டக்களப்பிற்கு சென்று குடியேறினோம். இவ்வாறு ஒவ்வொருவரும் அவர்களுடைய விருப்பினால் ஒவ்வொரு இடங்களிற்குச் சென்றனர். ஒரு சிலர் முகாம்களிலேயும் இருந்தனர். பின்பு 2011ம் ஆண்டு மீண்டும் மீள்குடியேற்றத்தினால் முல்லைத்தீவிலுள்ள எமது ஊரிற்கு வருகை தந்தோம். அயலவர்களையெல்லாம் மீளவும் சந்தித்து எம் மனங்களையெல்லாம் தேற்றிக் கொண்டோம். எமது வீடுகள் எல்லாம் இடிந்து, உடைந்து போன நிலையில் காடுகள் போல மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருந்தது. எல்லாவற்றையும் துப்பரவு செய்து மீளவும் வீடு கட்டி புதிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வருடங்கள் நகர்ந்து சென்றதே தவிர நடந்ததை எம்மால் ஒருபோதும் மறந்து விட முடியாது. இன்று வரையும் நடைபெற்று முடிந்த யுத்தமும், யுத்தத்தில் நடந்தவையும் அழியாத வடுக்களாக என் மனதுள் குடிகொண்டுள்ளது. #வாழ்வில் #மறக்க_முடியாத #நினைவலைகள் #பதுங்கு_குழி #ரதிகலா_புவனேந்தின்
ரதிகலா புவனேந்திரன்
நுண்கலைத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்