கட்டுப்பாடுகளும் முடக்கங்களும் இப்படியே நீடித்தால் மக்கள் சட்ட மீறல்களில் (civil disobedience) இறங்கக் கூடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதை நிரூபிக்கின்ற சம்பவங்களும் தொடங்கி விட்டன.
பிரான்ஸின் நீஸ்(Nice) நகரின் மத்தியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றை திடீரெனத் திறந்த அதன் உரிமையாளர் நூற்றுக் கணக்கான தனது வாடிக்கை யாளர்களை அழைத்து உணவு பரிமாறியுள்ளார்.
நாடெங்கும் உணவகங்களின் உரிமையாளர்கள் தனது செயலைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
புதன்கிழமை மதியம் திடீரென உணவகம் வாடிக்கையாளர்களுக்குத் திறக்கப்பட்டது. பிற்பகல் இரண்டு மணிக்கு இடையில் நூற்றுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் விழுந்தடித்துவந்து உணவு உண்டனர். பொலீஸார் வரும்வரை அங்கு பெரும் மகிழ்ச்சிக் கலகலப்பு நீடித்தது. வாடிக்கையாளர்கள் உள் இருக்கைகளில் உணவு உண்டு களித்துவிட்டு உரிமையாளருக்கு நிதி உதவிகளையும் வழங்கிச் சென்றனர்.
நீஸ் நகரில் மிகவும் பிரபலமான அந்த உணவகத்துக்குள் உடனே பாய்ந்த பொலீஸார் முகாமையாளரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். உணவகத்தில் சோதனை நடத்திய பொலீஸார் அங்கு வெளிநாட்டவரான சமையலாளர்(cuisinier) சரியான வதிவிட ஆவணங்கள் இன்றிப் பணிபுரிந்ததைக் கண்டுபிடித்தனர் என்று நீஸ் (Alpes-Maritimes) பொலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சுகாதாரக் கட்டுப்பாடுகளை மீறி அங்கு உணவு அருந்துவதற்காகக் கூடியோர் அடையாளம் காணப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் பொலீஸ் தலைமையகம் கூறியுள்ளது. .
“நாங்கள் எங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்க வேண்டும். பல மாதங்களாக எங்கள் வாடிக்கையாளர்கள் உணவகத்தைத் திறக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனது ஊழியர்களுக்காகவும் குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக் காகவும் இளைஞர்களுக்காகவும் இதனைச் செய்தேன்….”
“Le Poppies” என்ற அந்த உணவகத்தின் முகாமையாளர் இவ்வாறு தனது செயலை நியாயப்படுத்தி ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
குமாரதாஸன். பாரிஸ்.
28-01-2021