மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக்கலையும் அதன்வரலாற்றுப் பின்னணியும் எனும்நூல் வெளிவருகிறது. இதனை எழுதியுள்ளார் மட்டக்களப்பின்அழகியகிராமங்களில் ஒன்றான முனைக்காட்டை சேர்ந்த அமரசிங்கம் குமணன் அவர்கள்
.
அவர் இலங்கை மொரட்டுவ பல்கலைக்ழகத்தில் சிவில் பொறியல்பட்டதாரி. இதேதுறையில் தனது பட்டப்பின்படிப்பை இங்கிலாந்து வொல்வேஹம்டொன் பல்கலைக்ழகத்தில் முடித்தவர்.
கல்வியினால் ஒருதேர்ச்சி மிக்க சிவில் எஞ்சீனியர் என அறிகிறோம் ஆனால் தன்மீது திணிக்கப்பட்ட இந்த எஞ்சீனியரிங் கல்விக்கும் அப்பால் 14 வருடம் இன்னொரு கல்வியைத் தேடிப் பயின்றிருக்கிறார். அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார்.
தனது 14வயதில் ஆரம்பித்த அக்கல்வியையே தனது உயிர்மூச்சாகக் கொண்டுள்ளார் அதுவே அவரது வாழ்க்கையாகவும் ஆகிவிட்டது போலத் தெரிகிறது அவரது அர்ப்பணமும் இக்கலை மேல் அவர் வைத்திருக்கும் உணக்ச்சிகரமான ஒரு வெறியும் அவர் எழுத்திலும் செயலிலும் தெரிகின்றன.
தமிழ் மக்களில் பலரும், பல ஆய்வாளர்களும் மறந்து போன பழந் தமிழரின் வீரக்கலை ஒன்றினைத் தேடித் திரிந்திருக்கிறார். அலைந்திருக்கிறார்.
குமணன் பல குருநாதர்களைச் சந்தித்து அவர்களிடம் அனுபவ உரைகளையும் போதனைகளையும் பெற்றதுடன் அவர்களின் கீழ்ப் பயிற்சிகளும் பெற்றிருக்கிறார் அக்க்லையில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பதனை அறிய வியப்பே ஏற்படுகிறது
குருவும்சீடனும்
குருநாதர்களைத் தேடித்திரியும் பக்குவம் எல்லோரர்க்கும் சித்திப்பதில்லை. நல்ல குருநாதர்களைத் தேடுதல், அவர்களைக் கண்டடையும் வரை தேடுதல் என்பது மேலும் மேலும் அறிய விரும்பும் ஒரு சீடனுடைய அடையாளம். தேடுதலுக்கான உள்வேகம்முதலில்மாணவனிடம்இருக்கவேண்டும் அவ் ஆசை அணையாத பெருநெருப்பாய் அடிமனதுள் அக்கினிக் குஞ்சாய் அமர்ந்திருக்க வேண்டும் அதுவே மிகசிறந்த சீடனின் அடையாளம்.
குருன்நாதனை சீடன் தேடுவது போல நல்ல சீடனையும் குருநாதர் தேடிக் கொண்டிருப்பார் குரு சீட சங்கமம் சிலருக்கே சித்திக்கும்.
குமணனின் இந்த எழுத்து அவருக்கு அது சித்தித்திருப்பதையே காட்டுகிறது. இந்நூலை அவர் தனது குருநாதர்களுக்கே சமர்ப்பித்துள்ளார்
தமிழ் இனமும் அதன் வரலாறும்.
தமிழ் இனத்திற்கு மிக நீண்ட அறாத் தொடர்சியுடைய வரலாறு உண்டு சிறு சிறு குலங்களாகவும் குடிகளாகவும் பண்டுவாழ்ந்த தமிழினம் வளர்ச்சிப் போக்கில் சிற்றரசுகண்டு பின்னர் அரசுகண்டு அதன் பின்னர் பேரரசுகண்டு பேரரசர்களான பல்லவர் சோழ மன்னர்கள் பிறநாடுகளுடன் பெரும் பெரும் போர்கள் நடத்தி இந்திய தீபகற்பத்தையும் தென்கிழக்காசியாவின் சில பகுதிகளையும் வெற்றிகொண்டு கட்டி ஆண்ட வரலாறும் உண்டு.
அப்பெரும் பேரசர்ககளிடம் யானைப்படை குதிரைப்படை தேர்ப்படை காலாட்படை என நான்கு படைகள் இருந்தன என அறிகிறோம். இதனை நால்வகைச் சேனை எனவும் ரத, கஜதுரகபதாதிகள் எனவும் அழைத்தனர். இத்தோடு தமிழ் மன்னர்களிடம் பெரும் கப்பல் படையும் இருந்துள்ளது சமர்க்களத்திலே பல ஆயுதங்களை அவர்கள் பாவித்துள்ளனர்.
வில், அம்பு, வேல், அரிவாள், ஆண்டலையடுப்பு, ஈர்வாள், உடைவாள், கதிரருவாள், கதை, கவை, கல்லிடு ,கணையம், கழுகுப்பொறி, கவசம், குத்துவாள், கைவாள், கொடுவாள், கோல், சிறுவாள், தகர்ப்பொறி, தொடக்கு, பிண்டிபாலம், ஞாயில், மழுவாள், விளைவிற்பொறி, அரிதூற்பொறி, இருப்புமுள், எரிசிரல், கழு, கருவிலூகம், கல்லமிழ்கவண், கற்றுப்பொறி, கழுமுள், குந்தம், கூன்வாள், கைபெயர், கோடாரி, சதக்கணி, தண்டம், தோமரம், புதை, நாராசம், வச்சிரம் , போன்ற கருவிகளைக் கொல்லர்கள் செய்து கொடுத்தனர் எனஅறிகிறோம்.
இப்படைக் கலங்களை பாவிக்க சிறந்த பயிற்சிகள் கொடுபட்டுள்ளன
ஆயுதம் செய்யும் கொல்லர்களது பேருலைகள் அதிகம் இருந்து முள்ளன இவறைப் பிரயோகிக்கப் பயிற்றுவித்த ஆசிரிய பரம்பரையினர் இருந்துள்ளனர். அதற்கான பயிற்சிநூல்களும் இருந்திருக்க வேண்டும் பின்னால் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இப்போர்க் கலையைப்பயிற்றும் ஆசிரியர்களும் போர்வீரர்களும் குற்றப் பரம்பரையினராக ஆக்கப்பட்டார்கள். ஆயுதம் வைத்திருத்தல் ஆயுதப்பயிற்சி என்பன சட்டத்திற்கு புறம்பானதாயின.
தமிழரின் இந்தப் போரியல் வரலாற்றில் ஆயுதப்பாவிப்பும் வியூக அமைப்பும் நிட்சயம் இடம் பெற்றிருக்கும் தமிழர் வரலாற்றை, பண்பாட்டை கலைகளை இலக்கியங்களைத் தோண்டித் தோண்டி ஆராய்ந்த நம் தமிழறிஞர்கள் இந்த போர்க்கலை பக்கம்தம் கவனத்தைத் திருப்பினார் இல்லை.
தமிழ் ஆய்வாளர் தொடாத துறைகள்!
சமயநூல்கள் மிகப் பெருவாரியாக வந்த அளவு தமிழரிடையே இருந்த விஞ்ஞானம், தொழில்நுட்பம், வைத்தியம், சோதிடமாகிய வானசாஸ்திரம். கட்டிட சிற்பக்கலைகள். அரண்மனை அமைப்பு,
இயற்கை விஞ்ஞானம் ஆகியனபற்றியும் தமிழரின் அறிவியல் சிந்தனைகள் பற்றியும் கூட இதுவரை குறிப்பிடும்படி எந்தநூலும் வரவில்லை.
சிந்தனை வளம் மிக்க ஒரு சமூகம் தன் வாழ்வை ஒற்றைப் போக்கிலேயே தன் வாழ் முறைகளை அமைத்து கொண்டதா?
ஏன் நமது அறிஞர் அறிவியல் சிந்தனைகள் பக்கம் தமது பார்வையைச் செலுத்தவில்லை? ஏன் அந்த நூல்களைத் தேட வில்லை என ஆராய்வது சுவராஸ்யம் தரும் ஓர் ஆய்வு என்பதுடன் தமிழர் சமூகத்தின் ஆழ்மனதை ஆயும் ஆய்வாகவும் அமைந்து விடும் அது ஒருபுறமாக இப்போது எமக்கு தமிழரின் மத்தியில் இருந்த பாரம்பரிய போர்க்கலையின் சில அம்சங்களைக் கூறும் ஒரு ஆரம்பநூல் வந்துள்ளது என்றே நான் நினைக்கிறேன்.
இதனைஒருமுன்னோடிமுயற்சி எனநாம் கூறலாம்
இந்நூல் என்ன கூறுகிறது?
இந்நூல் கூறுவன.
இது சிறப்பாக தமிழர் மத்தியில் பண்டுதொட்டு இன்றுவரை இருந்து வரும் கம்படி என பொது மக்களால் வழங்கப்படும் சிலம்பக்கலை பற்றியும் அதுகாலம் தோறும் வளர்ந்து வந்த முறைபற்றியும் அதன் சரிவுகாலம் பற்றியும் இலக்கியம், புதைபொருள், வாய்மொழி ஆதாரங்களுடன் கூறுவதுடன் குறிப்பாகச் சிலம்பக்கலையுடன் தொடர்புடைய ஏனைய சிலயுத்தக்கலைகள் பற்றியும் கூறுகிறது.
அத்தோடு சிலம்பு எவ்வாறு ஆயுதமாகிறது என்பதையும் சிலம்பின் பிரிவுகளையும் வகைப்பாடுகளையும் கூறி செல்வதுடன் தமிழகத்திலும் இலங்கையிலும் மேலை நாடுகளிலும் சிலம்பக்கலை வழங்கும் முறைகளையும் கூறி போர்க்கலையான அச்சிலம்பாட்டம் எவ்வாறு பொழுது போக்குச் சிலம்பாக, அலங்காரச் சிலம்பாக ஆகியது என்பதையும் விபரிக்கிறது.
வெறுங்கைப் போர் முறை (வெறுங்கைவரிசை) வர்மம் (நிலையடி முறை) என்பன வாசிப்போருக்கு பல புதிய தகவல்களைத் தருவதுடன் ஆச்சரியத்தையும் விளைவிக்கும் அத்தியாயங்களாகும்
சிலம்பத்தில் பயன்படுத்தும் பயிற்சி உபகரணங்கள் சுவைதரும் ஓர் அத்தியாயமாகும்.
அவர்கள் மரம் கல் உலோகம் முதலான மூலப் பொருட்களை இதற்கு பயன்படுத்தியுள்ளனர் என்றதகவலை இதுதருகிறது தொடர்ந்து சிலம்பத்தால் விளையும் பயன்களையும் சிலம்பக்கலை எதிர் கொள்ளும் சிக்கல்களையும் கூறி யோகக்கலையோடு சிலம்பத்தைத் தொடர்புபடுத்தி அதுதிரைப்படம் மூலம் வெகுஜனங்களிடம் சென்றடைந்தமையையும் கூறி முக்கியமாக ஆதிச்சநல்லூர் கீழடியில் கண்டு எடுக்கபட்ட பண்டைத் தமிழர் பாவித்த ஆயுதங்களையும் சான்றுகாட்டி நூலைமுடிக்கிறார் ஆசிரியர்.
அவர்தரும் துணைநூல் பட்டியல் அவரின் தேடலை நமக்குக் காட்டுகிறது. பயிற்சிநூல்போலவும், அறிமுகநூல் போலவும்,
விவரண நூல் போலவும், ஆய்வு நூல் போலவும், அனுபவ நூல் போலவும், தோற்றம் காட்டி நிற்கிறது இந்நூல்.
பொக்ஸிங் போன்ற மேற்கத்தைய போர்க்கலையும் சீனாவின் குங்பூவும் ஜப்பானின் ஜூடோ கராட்டியும் உலகம் முழுவதும் வலம் வரும் இந்நாளில் தமிழரின் சிலம்பக் கலையும் மல்யுத்தமும் பிடி முறைகளும் அவற்றைப் போல பிரபல்யமாவில்லை.
முதலாளித்துவத்தில் பொருள் சேர்க்கும் முறைமை குத்து சண்டையை இன்று பணமீட்டும் விளையாட்டாக்கி சந்தை பொருளாக்கிவிட்டது.
இதேபோல் சீன ஜப்பானிய தற்காப்புக் கலைகளான குங்க்பூ கராத்தே அகியனவும் சினிமாக்களாலும் பணமீட்டலாலும் தமது ஆன்மாவை இழ்ந்து வருகின்றன. நமது சகோதர இனத்தவரான சிங்கள மக்களிடமும் இத்தகைய பாரம்பரிய யுத்த விளையாட்டுக் கலைகள் இருந்துள்ளன. அவற்றை மீளுருவாக்கும் முயற்சிகளும் நடைபெறுவதாக அறிகிறோம். தமிழரும் தமது பாரம்பரிய கலைகளை மீட்கும் முயற்சிலீடுபடுகின்றனர்.
போர்க் கலைப் பயிற்சி.
போர்க்கலைப் பயிறசி இன்றைய காலத்தில்அவசியமா?என்ற ஓர்வினாவும் உண்டு. இங்குதான் யோகக்கலை பற்றியும் தியானம் பற்றியும் நாம் பேச வேண்டியுள்ளது. யோகமும் அதனடியான தியானமும் மனதை ஒருநிலைபடுத்துவதுடன் நிதானமாக எச்சூழலையும் அணுகவும் உடலை சீராக வைத்திருக்க உதவுவனவாகும்.
சிலம்பம், மல்யுத்தம், பிடிமுறை பயிற்சி பெறுவோருக்கு இந்த யோகம் தியான பயிற்சிகள் மிக முக்கியமானவையாகும்
இப் பயிற்சிகள் நிதானம் அமைதி நல்லெண்னம் ஆகிய குணாம்சங்களை ஒருவரில் கொணரும்.
ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தாத மற்றவரை அடிமை கொள்ளாத மக்கள் சமூகத்திற்கு உதவும் எக்கலையும் வரவேற்பிக்குரியதே. இந்நூல் சிலம்பக்கலையை யோகக் கலையுடன் இணைத்து அதனை ஓர் நல்ல மக்கள் மன நலக்கலையாக கூறி இருப்பது வரவேற்பிற்குரியது.
இந்நூலில் விதந்து கூறப்பட வேண்டிய இரண்டு அம்சங்கள் காணப்படுகின்றன. ஒன்று குமணன் தன் குருநாதர்கள் பற்றியும் அவர்களிடம் என்ன என்ன பயின்றார் என்பதனையும் அவர்கள் கற்பித்த சிலம்ப மரபுபற்றியும் கூறுவது அவரது ஆசான்களும் அவர்கள் கற்பித்தமரபும் இவை
குணாளனின் ஆசான்களும் அவர் கற்றவையும்.
ஆசான். திரு. ஆறுமுகம்கணபதிப்பிள்ளை (கர்நாடக வரிசைச் சிலம்பம்) ஆசான். அமரர்.திரு. செபஸ்தியார்மைக்கல் (குறவஞ்சி வரிசைச் சிலம்பம்) ஆசான். திரு.யூசமுத்து அந்தோனிமுத்து (துலுக்காணம ; வரிசைச் சிலம்பம்) ஆசான். திரு. மு.சிதம்பரம் (நாகம் பதினாறு வரிசைச் சிலம்பம்) இந்த சிலம்பமரபு சுவராஸ்ய மானதும்முக்கியமானதாகும் இதனை நாம் சற்று இடம்மாற்றி போட்டால் ஒரு வரலாறும் கிடைக்கக் கூடும்.
பெரும் கற்காலத்தில் நாகரே தமிழகத்தில் ஆட்சியிலிருந்தனர் அவர்களே இரும்பையும் கொணர்ந்தனர் என்ற ஓர்பார்வையும் உண்டு பின்னாளில் தமிழ்நாடு தெலுங்கு அரசர்களின் கீழும் துலுக்கர் எனும் இஸ்லாமிய ஆளுகையின் கீழும் இருந்ததென வரலாறுண்டு
அவ்வண்ணமாயின் நாகம்பதினாறு, கர்நாடக வரிசை குறவஞ்சி வரிசை ( குறவஞ்சி இலக்கியம் தெலுங்கு மொழியிலிருந்து தமிழுக்கு அறிமுகமான இலக்கியவடிவம்) துலுக்காணம் வரிசை ( இஸ்லாமியரை துலுக்கர் என அழைக்கும் மரபு உண்டு மதுரை பலகாலம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்துள்ளது அவர்களிடமும் கம்படி இருந்துள்ளது) இந்ததகவல்கள் மூலம் புராதன தமிழரான நாகரிடம் இருந்த புராதன சிலம்பக்கலை ஏனைய பண்பாடுகளின் சிலம்பக் கலையையையும் உள்வாங்கி வளர்ந்துள்ளது போல் தெரிகிறது
..
வளர்ச்சி என்பது அதுதான். பிறவற்றையும் சேர்த்து வளரும் போதே வளர்ச்சிவருகிறது. இந்நோக்கிலும் தமிழரின் சிலம்புக் கலையை அணுகலாம் இரண்டு இந்நூலில் அவர்தேடி தொகுத்த புகைப்படங்களாகும்.
அருமையான படங்களைத் தேடி தந்துள்ளார் படங்களே கதை பேசுகின்றன கண்களைக் கவருகின்றன. வேலன் கையில் வேலாக வந்தது அன்றையகம்பே அதாவது சிலம்பே என வேலனுடனும் அகத்தியகம்பு சூத்திரம் என அகத்தியருடனும் பின்னர் இராவணனுடனும் கம்பை அவர் இணைக்கையில் ஓர் புராணப் பார்வைதென்படுகிறது.
தொன்மங்களுள் வரலாற்றுச் சான்றுகள் தேடுவதும் ஓர்முறையே எனினும் கறாரான ஆய்வாளர் அவற்றை பெரிதாக ஏற்கார்.
ஆதிச்சநல்லூரும். கீழடியும் சிறந்தவலுவான ஆதாரங்கள். அதேபோல வலுவான அதாரங்களைப் பயன்படுத்தல் ஆய்வைமேலும்வலியுடையதாக்கும் புராணமும் வரலாறும் கலக்கும் இடத்தில் குமணன் கவனமாக இருக்கவேண்டும்.
அல்லாவிடில் கற்பனையாகவே எல்லாம் கருதப்பட்டுவிடும்
குமணன் வெறுஆய்வாளனாக மாத்திரமின்றி இக்கலையில் வல்லவனாக இருப்பதும் அத்தோடு அவர்பொக்சிங், கராத்தேகுங்பூ ஆகியதுறைகள் கற்றிருப்பதும் குமணனிடம் காணப்படும் இன்னோர் சாதகமான அம்சமாகும். கோட்பாடானது நடைமுறையில் இல்லாவிடில் செத்துவிடும் அல்லது மறக்கடிக்கப்பட்டுவிடும்.
இங்கு அந்நிலை இல்லை’ சிலம்பக்கலையை கோட்பாட்டுரீதியிலும் அறிவுபூர்வமாகவும் செயற்பாடுகள் மூலமாகவும் முன்னெடுக்கிறார் குமணன். குமணனுக்கு என்வாழ்த்துக்கள் .முயற்சிகள்தொடர்வதாக
1 comment
மிக்க மகிழ்ச்சி… இந்த புத்தகம் எந்த பதிப்பகத்தில் வந்துள்ளது. எப்படி பெறலாம் எனும் தகவல்களையும் தந்திருந்தால் மிக்க நலமாய் இருந்திருக்கும்…