Home இலங்கை இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்!

இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்!

by admin


இராமாயணத்தில் பொதுவாக இராவணனைக் கொடியவன் என்றே எல்லோரும் சிந்திக்கின்றார்கள். ஆனால் அது உண்மையா? இராமாயணத்தில் உள்ள இராவணன் சீதையை சிறை பிடித்தானே தவிர வேறு ஏதும் தவறு புரியவில்லையே. இன்றைய உலகில்இராவணனை விட சிலர் கொடியவர்களாகத் திகழ்கின்றனரே. இதை எண்ணும் போது எனது மனமானது குமுறுகின்றது.


அன்று இராவணனிடம் உபதேசம் கேட்க இராமன் இலட்சுமணனை அனுப்பி வைத்தான். இலட்சுமணன் இராவணனின் காலடியில் நின்று கை கூப்பி உபதேசிக்குமாறு வேண்டினான். அப்போது மரண அவஸ்தையிலிருந்த இராவணன் ‘ஒன்றே செய் நன்றே செய்
அதை இன்றே செய்’ எனசிறு உபதேசம் செய்தான். இதன் அர்த்தம் எம் எல்லோர்க்கும் புரியாமலுமில்லை. சீதையை விட்டு விடச் சொன்ன போது இராவணன் ‘நான் நல்லதைச் செய்ய தவறி விட்டேன். எனவே நல்லதை உறுதியாக உடனடியாகச் செய்ய வேண்டும் என்றான்.’ இப்படிக் கூறிய இராவணன் கொடியவனா? சிந்தித்துப் பாருங்கள். இன்று சில இடங்களில் இராவணனின் உருவச்சிலை எரிக்கப்படுகின்றது. எம்மவர்களில் சிலரே பொய்யாக இராமர் வேடம் போட்டுத் திரிகின்றனர். இராமாயணத்தில் இராவணனைக் கெட்டவனாகவும், இராமனை நல்லவனாகச் சித்தரித்துள்ளமையே இதற்குக் காரணமாகும்.

எம்மில் பலர் நல்ல பெயரை எப்படி வேண்டுமானாலும் பெற வேண்டும் எனும் அவாவினால் சில தவறான செயல்களைச் செய்கின்றனர். அச் செயல்களைச் செய்யும் போது கூட சிறிதேனும் மனம் இரங்காமல் தீயவற்றை தம்மை அறியாமலும் செய்கின்றனர். சிலர் தவறான செயல்களையே செய்கின்றோம் என அறிந்தும் அச் செயல்களையே செய்கின்றனர். அதிகார வர்க்கத்தில் உள்ள பலர் அவர்களின் கீழுள்ளவர்களை அதிகாரத்தினால் தவறிழைக்கச் செய்கின்றனர். அவர்களும் அச் செயல்களை செய்ய மறுக்க முடியாத நிலையிலே அவற்றைச் செய்கின்றனர். இதனால் இவர்களும் சமூகத்தில் தவறிழைக்கின்றனர். இராமாயணத்தில் இராவணன் தம் கீழுள்ளவர்களைக் கொண்டு இவ்வாறான காரியங்களைச் செய்யவில்லையே. இவர்களைக் காட்டிலும் இராவணன் கெட்டவனல்ல.


இராமாயணத்தில் இராவணனை அசுரன், அசுர குணம் கொண்டவன் என்கின்றனர். ஆனால் இராவணனை விட எம்மில் சிலரே அசுர குணம் கொண்டு அசுரர்களாகத் திகழ்வதோடு, மனிதாபிமானமற்று நடக்கின்றனர். எம்முடைய மனிதாபிமானம் எல்லாம் என்றோ காணாமல் போய் விட்டது. மனிதாபிமானம் என்றால் என்ன? எனும் நிலைக்கு வந்து விட்டோம். பேரூந்தில் பயணம் செய்யும் போது வயோதிபர், கர்பிணிப் பெண்கள், குழந்தைப் பிள்ளையை கையில் கொண்டுவரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களைக் கண்டவுடன் எழுந்து இருக்கையை (ஆசனம்) கொடுப்பவர்கள் எம்மில் எத்தனை பேர் உள்ளனர். சிறிதேனும் மனிதாபிமானமற்று நித்திரை போல் நடிப்பது அல்லது கண்டும் காணாதது போல் இருப்பது. சிலவேளைகளில் பெண்கள் எழுந்து ஆசனம் கொடுத்தாலும் சில ஆண்கள் எழுந்து ஆசனம் கொடுப்பதில்லை. இந்நிலை எப்போது மாறும். நாம் இவ்வாறு இருக்க இராவணனை ஏன் நம் மனம் கொடியவனாக எண்ண வேண்டும். கொடியவன் இராவணன் அல்ல மனிதாபிமானம் அற்ற செயல்களைப் புரியும் எம்மில் பலரே கொடியவர்கள் ஆவோம். இந்நிலையானது மாற வேண்டும்.


இராவணன் தன் நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்ததும் கிடையாது. அவன் குடிமக்களின் வயிற்றிலடித்துச் செல்வம் சேர்த்ததும் கிடையாது. அவர்களின் உழைப்பெற அவர்களைப் பயன்படுத்தவும் இல்லை. பணத்தைப் பதுக்கி வைத்ததும் இல்லையே. ஆனால் இன்று நாட்டு நலனை விடுத்து சுயநலனே பெரிது என்று திரியும் தீயவர்களையும், தன் அதிகாரத்தை நிலைநாட்ட பல உயிர்களைக் காவு கொள்பவர்களையும் நாம் இப்படியே விடுத்து இராவணனை மட்டும் தீயவன், கயவன், வஞ்சகன் என்று சொல்லி ஏன் இராவணனின் உருவச்சிலையை மாத்திரம் எரிக்க வேண்டும்? இராவணன் சில இருக்கைகளுக்காக ஆசைப்பட்டதும் கிடையாது. சிந்தித்துப் பாருங்கள்.


இராமாயணத்தில் இராவணன் சீதா தேவியை இலங்கையில் சிறை வைத்தானே தவிர சீதா தேவியை தீண்டி எப்பாவமும் செய்யவில்லையே. இன்று எத்தனை பெண்களை பலாத்காரம் செய்கின்றனர். பெண்களே நாட்டினுடைய கண்கள் என்கின்றனர். இருப்பினும் பெண்களை ஏன் நாசம் செய்கின்றனர். யாழில் 2014ம் ஆண்டு இடம்பெற்ற வித்தியாவினுடைய இழப்பை எம்மால் ஒருபோதும் மறக்கவே முடியாது. ஒரு பெண்ணை எத்தனை கயவர்கள் பலாத்காரம் செய்தனர். இது போன்று ஒரு வித்தியா அல்ல இன்னும் எத்தனை வித்தியாக்கள் மடிந்தனர். இப்போதும் மடிந்து கொண்டு இருக்கின்றனர். ஒரு பெண்ணை மிருகத் தனமாக பலாத்காரம் செய்யும் போது கயவர்கள் தம்முடன் கூடப் பிறந்தவர்களையோ, தனது தாயையோ எண்ணிப் பார்த்தால் நாட்டில் இக் கொடிய செயல்கள் இடம்பெறாது.


சில அலுவலகங்களிலும், பெண்கள் வேலை பார்க்கும் இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாகவுள்ளது. பெண்ணானவள் ஒரு தெய்வமாக மதிக்கப்பட வேண்டியவள். ஆனால் இன்று பெண்ணானவள் சில கொடியவர்களால் மிதிக்கப்படுகின்றாள். பேரூந்தில் தனிமையில் ஒரு பெண் பயணம் செய்ய முடிவதில்லை. காரணம் சில கொடியவர்களின் கொடூரமான செயற்பாடுகளினாலேயே ஆகும்.


அதுமட்டுமல்ல சில நாடுகளில், சில இடங்களில் பெண்களின் அழகையும், உடலையும் வைத்து வியாபாரம் செய்கின்றார்கள். பெண்களுக்கே தெரியாமல் அவர்களுடைய ஆபாசப்படங்களைக் காட்டி மிரட்டி மனித ஒழுக்கத்தை நாசம் செய்வதுடன் மட்டுமல்லாமல் அப்பெண்ணின் உயிரையே காவு கொள்கின்றனர். காதல் எனும் பெயர் கொண்டு காமவெறியில் பெண்களினுடைய வாழ்க்கையையே நாசம் செய்பவர்கள் எம்மில் பலர் உள்ளனர். நாம் செய்யும் தவறுகள் அனைத்திற்கும் தண்டனை கிடைக்காவிட்டாலும் இறந்த பின்பு நரகம் சென்று தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதை ஏன் இவர்கள் மறக்கின்றனர். இதை எம்மவர்கள் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். இராமாயணத்தில் இதுபோன்ற தவறுகளை இராவணன் செய்யவில்லையே.


அன்று இராவணனிடம் இருந்து மீண்டு வந்த சீதை மீது இராமன் நம்பிக்கை கொள்ளவில்லை. மாறாக மறவர்களின் கதை கேட்டு சந்தேகமே கொண்டான். தன் மனைவியின் மனதை இராமன் புரிந்து கொள்ளவில்லையே. சீதை எக்குற்றமும் புரியவில்லையெனினும் தன்னுடைய துணைவரின் சந்தேகத்தைப் போக்கவும் ஏனையவர்களின் தவறான எண்ணத்தைத் தகர்த்தெறியவும் தான் கற்புக்கரசி என்பதை நிரூபித்துக்காட்ட எல்லோர் முன்னிலையிலும் அவையிலே அக்னிப் பிரவேசம் செய்தாள்.இராமன் இவ்வாறு செயல் புரிந்தது சரியானதா? இவ்வாறு இராவணன் தன் மனைவி மீது எக்குற்றமும் புரியவில்லையே. இப்படி இருக்கும் போது ஏன் நாம் இராவணனைக் கயவன் என்று கூற வேண்டும். இவர்களை விட இராவணன் என்றும் கொடியவன் அல்ல என்பதே நிதர்சனமான உண்மை. எம்மவர்களில் இந்நிலை மாற வேண்டும்.

                            ரதிகலா புவனேந்திரன் 
                            நுண்கலைத்துறை
                    கிழக்குப் பல்கலைக்கழகம்

Spread the love
 
 
      

Related News

1 comment

பழம் February 8, 2021 - 12:27 am

உங்கள் புரிதல் மிகவும் தாமதமானது…. நான் ஆண்டு பத்தில் இலக்கியம் படிக்கத்தொடங்கும் போதே தேடி உணர்ந்துகொண்டேன் இராவணன்தான் எங்கள் கதாநாயன் Hero என்று….
தன் தங்கையை பலாத்காரம் செய்ய முற்பட்ட இலட்சுமணனை தண்டிக்காத அரசை போருக்கழைப்பதற்கான ஒரு மரபே பெண்ணை கவர்தல்.
சீதைக்கு இராவணிடத்தில் உண்டான மிகப்பெரிய மரியாதையும், மதிப்பும்தான் இராமன் சந்தேகம்கொள்ளக் காரணம், அதனாலேயே இராமன் அற்பபதர் ஆகிறான். எங்கடையள் என்னெண்டா ஒரு அற்பபயலுக்கு கோயிலும் சிலையும்… நினைவில் கொள்ள வேண்டியது எதிரிகளால் மட்டுமே விபூசனன் போன்ற துரோகிகள் போற்றப்படுவார்கள் வரலாற்றிலும், நியத்திலும்…

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More