“தென்னாபிரிக்கா, பிறேசில் ஆகிய நாடுகளில் இருந்து பரவிவரும் திரிபடைந்த வைரஸ் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு இலக்காகிக் குணமடைந்தவர்களில் மறுபடியும் தொற்றுகின்றது.
” ஒருமுறை வைரஸ் தொற்றிய ஒருவரது உடலில் உருவாகி இருக்கக் கூடிய நோய் எதிர்ப்புச் சக்திடம் (antibodies) இருந்து தப்பிவிடும் திறனை அவை கொண்டுள்ளன.”
இந்த நிலைவரம் மிகவும் கவலைக்குரியது என்று பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இன்று தெரிவித்திருக்கிறார்.
பிரான்ஸின் வடகிழக்கே ஜேர்மனிய எல்லையோரம் அமைந்திருக்கின்ற Moselle மாவட்டத்தில் புதிய வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகின்றது.
மாற்றமடைந்த வைரஸ் திரிபுகளின் பரவலால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக Moselle உள்ளது. அங்கு சமீப நாட்களில் கவலையளிக்கும் விதமாக 300 பேர் புதிய தென்னாபிரிக்க மற்றும் பிறேசில் வைரஸ் திரிபுகளின் தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
Moselle இல் கண்டறியப்பட்ட தொற்றாளர் களில் எவருமே வெளிநாட்டுப் பயணங் கள் எதனையும் மேற்கொள்ளாதவர்கள் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. இது குறித்து எச்சரித்த அமைச்சர், “தொற்று நோயைக் கட்டுப்படுத்த போதுமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நாங்கள் ஒன்று திரண்டு கடைப்பிடித்தால் பொது முடக்கம் ஒன்றைத் தவிர்ப்பதற்கான காலத்தை நீடிக்க முடியும்” – என்று குறிப்பிட்டார்.
Moselle மாவட்ட நிலைவரத்தை மதிப்பிடுவதற்காக அமைச்சர் வெள்ளிக்கிழமை அங்கு விஜயம் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப் படுகிறது.
பிரான்ஸில் தொற்று நிலைவரம் ஒரு சீரான அளவில் உள்ள போதிலும் தொற்று நோயியல் நிபுணர்களிடையே புதிய வைரஸ் தொடர்பான அச்சம் நீடித்து வருகிறது.
இதேவேளை – தற்போது நடைமுறையில் இருக்கின்ற கட்டுப்பாடுகளை விட மேலும் தீவிரமான ஒரு பொது முடக்க நிலைமை வருமா என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது. ஆனால் நாடளாவிய ரீதியிலான அத்தகைய ஒரு மூன்றாவது முடக்கத்தை இயலுமான வரை தவிர்ப்பதற்கே அரசுத் தலைமை விரும்புகிறது எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரசுத் தலைவர் மக்ரோன், பொது முடக்கம் ஒன்றைத் தவிர்ப்பதற்காக அவசியமான எல்லா நடவடிக்கைக ளையும் எடுப்பது என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார் என ‘Le Canard enchaîné’ வாரப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டாலும் இதனையே உறுதிப்படுத்தி யுள்ளார்.
குமாரதாஸன். பாரிஸ்.
11-02-2021