இன்று தமிழர்கள் மத்தியில் பெரும்பான்மையாக முனுமுனுக்கப்படும் ஒரு சொற்பிரயோகம் தமிழ்த்தேசியம். பெரும்பான்மையான மக்கள் இச்சொல்லின் பொருள் என்ன என்ற புரிதலற்று, தமது உரையாடல்களில் பயன்படுத்துகின்றனர் . சிலர் இதனை ஒரு குறித்த குழு என்ற ஓர் வரையறைக்குள் உட்படுத்த முயல்கின்றனர். வேறுசிலர் இது பிரிவினைவாத சிந்தனையின் வெளிப்பாடு எனக்கூறி தமிழ்த்தேசிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். உண்மையில் தமிழ்த்தேசிய சிந்தனையின் அர்த்தம் பொருள் என்ன என்பது பற்றி ஆராய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்த்தேசியம் பற்றிய பரிபூரண விளக்கத்தை பெற்றுக்கொள்ள தேசியம் பற்றிய புரிதல் அவசியமானது.
தேசம், தேசியவாதம் பற்றிய சிந்தனைகள் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இறைமை, ஜனநாயகம் பற்றிய கருத்தியல்களின் தோற்றத்துடன் தீவிரமாக வளர்ச்சியடைந்த சிந்தனைகளாக காணப்படுகின்றன. இவற்றின் முக்கிய இலக்கு மன்னராட்சி, காலனித்துவ, ஏகாதிபத்திய, குடியேற்றவாதத்திற்கு எதிரான மக்கள் புரட்சியாக வெளிப்பட்டிருப்பதை பழைய வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. அந்தவகையில் தேசியம் பற்றிய அறிஞர்களது கருத்துக்களை நோக்குவோமாயின்,
ஜே. கால்ரன்- தேசியவாதம் என்பது தேசிய உணர்வுடன் ஒன்றிணைந்த தேசபக்தி எனக் குறிப்பிடுகின்றார். ஜே.ஹாசின்சன் என்பவர் தேசியவாதம் பிரதானமாக மக்களின் சுதந்திரம் அவர்களின் அரசாட்சி பற்றிய ஒரு கோட்பாடு என்கின்றார். எச். கோன் என்ற அறிஞர் தேசியங்கள் என்பவை வரலாற்றில் உயிர்ச்சக்தி வாய்ந்த விளைச்சல்கள் எனவே அவை மாறுதன்மை கொண்டவையாக காணப்படுவதானால் தேசியவாதம் என்பதை உறுதியாக வரைவிலக்கணப்படுத்த முடியாது எனக்குறிப்பிடுகின்றார். ஆகவே மேற்குறிப்பிட்ட அறிஞர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஒன்றிணைந்த மக்களின் தேசிய உணர்வின் வெளிப்பாடு தேசியம் என அடையாளப்படுத்த முடியும்.
இன்றைய நவீன காலத்தில் தேசியம் என்பது இரு வேறுபட்ட வடிவங்களில் வெளிப்படுவதை அவதானிக்க முடிகின்றது. அடக்குமுறைக்கு எதிராக தன்னை ஒடுக்குகின்ற சக்திகளை எதிர்த்துப்போராடும் விடுதலை வேட்கை உடையதாகவும் மறுபுறம் அடக்குமுறைக்கான கருவியாகப் பிறதேசங்ககளின், இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்திச் சிறுபான்மை இனப்பிரிவுகளின் உரிமைகளை மறுக்கும் ஆதிக்கவாத சிந்தனை கொண்ட ஜனநாயக விரோத தேசியவாதமாகவும் வெளிப்படுவதை அவதானிக்க முடிகின்றது. உலகில் பெரும்பான்மையான நாடுகள் இனவாதம், மதவாதம், ஆதிக்கவாத சிந்தனைகளின் வெளிப்பாட்டால் கட்டமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அதிலும் குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இனம், மதம் என்பன அரசியல் அதிகார மையத்தை கட்டுப்படுத்த கூடிய அளவு வலிமை பெற்றுக்காணப்படுகின்றன.
தெற்காசியாவில் தனித்துவமான பாரம்பரிய வரலாற்றை கொண்ட தமிழர்கள் பெரும்பான்மை இன மக்களின் அடக்குமுறையில் இருந்து விடுபட்டு தமது அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காவும் இனத்தின் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள காலச்சார பாரம்பரியங்களை மீள் கட்டமைப்பு செய்து கொள்வதற்காகவும் தமிழ் மக்கள் மத்தியில் இயல்பாக உருவான தேசிய உணர்வே தமிழ்த்தேசிய சிந்தனையாகும்.
தமிழ்த்தேசியம் என்பது தனிநாடு என்ற மறைமுக பதத்தை தாங்கி நிற்பதாக பெரும்பான்மை இன மக்களால் விமர்சிக்கப்படுவதை அவதானிக்கக்கூடியதாக காணப்படுகின்றது. எனினும் யதார்த்தத்தில் தமிழ்த்தேசியம் வலியுறுத்துவது தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக கலாச்சார உரிமைகளை பரிபூரணமான முறையில் தமிழர்கள் அனுபவிப்பதற்கான உரிமையுடன் தமது தனித்துவமான கலாச்சாரத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு ஊடுகடத்துவதை நோக்காக கொண்டுள்ளது. எனினும் இவ்உயரிய நோக்கத்தை அடைந்து கொள்ள தமிழ்த்தேசிய சிந்தனையாளர்கள் பலவிதமான சவால்களை எதிர் கொள்கின்றனர்.
தமிழ்த்தேசிய சிந்தனையை பலவீனப்படுத்தும் காரணிகளில் முதன்மையானதாக 4 காரணிகளை இக்கட்டுரை விபரிக்க முயலுகிறது.
முதலாவது, தமிழ்த்தேசியத்தின் பங்காளர்களை அடையாளப்படுத்துவதில் முரண்பாடு காணப்படுகிறது. தமிழ்த்தேசிய தத்துவத்தை வெளிப்படுத்தி அக்கருத்தியலை வலுப்படுத்த போராடுபவர்கள் மாத்திரமே தமிழ்த்தேசியவாதிகள் என்ற முத்திரை குத்த பலர் முயல்கின்றனர். உண்மையில் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் யதார்த்தத்தை தெளிவாக புரிந்து கொள்ள தவறுகின்ற புள்ளி இங்கே ஆரம்பமாகின்றது. தமிழ்த்தேசியம் என்பது தமிழ் இனத்தின் நலனை முதன்மையாக கொண்டு செயற்படுகின்ற தமிழரின் உணர்வு வெளிப்பாடாகும் அந்தவகையில் தமிழ்த்தேசியவாதிகள் பெற்றுக்கொள்ளும் வெற்றி என்பது ஒரு குழுவின் வெற்றியாக நாம் அடையாளப்படுத்த முடியாது என்ற புரிதலை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களை தமிழ்த்தேசிய சிந்தனையின் அடிப்படையில் அரசியல் விமர்சகர்கள் இரண்டாக வகைப்படுவத்துவதை அவதானிக்க முடிகின்றது.
- தமிழ்த்தேசியவாதி
- தமிழ்த்தேசியதுரோகி
என்பன அவையாகும். எனினும் இங்கு மூன்றாம் தரப்பினர் மறைந்து காணப்படுகின்றனர் என்பதை பலர் சுட்டிக்காட்ட தவறுகின்றனர். மூன்றாம் தரப்பினராக தமிழ் இனத்தில் பிறந்த தமிழர்களை குறிப்பிடலாம். இவர்களை அணிசேரா கொள்கை கொண்ட தமிழர்களென அழைக்க முடியும். அணிசேரா கொள்கை கொண்ட தமிழர்களை, தமிழ்த்தேசிய துரோகிகள் மற்றும் தமிழ்த்தேசியவாதிகள் என்ற இரு பிரிவுக்குள்ளும் வகைப்படுத்தல் என்பது சாத்தியமற்றது. இவ்அணிசேரா தமிழர்கள் தமிழ்த்தேசிய பார்வையாளர்களாக காணப்படுகின்ற போதிலும் தமிழ்த்தேசிய சிந்தனையில் நேரடியாக பங்குபற்றாது மறைமுகமாக தமிழ்த்தேசிய சிந்தனையின் பங்குதாரர்களாக காணப்படுகின்றனர். அணிசேரா தமிழர்களுக்கு இத்தகுதியை பிறப்பால் தமிழன் என்ற இன அடையாளம் பெற்றுக் கொடுகின்றது. இதன் மூலம் தமிழ்த்தேசியத்தின் வெற்றி, தோல்வி இரண்டுமே தமிழ் மக்களின் வாழ்வியலில் நேர்மறையான அல்லது எதிர்மறையான மாற்றத்தை உருவாக்க கூடியது. இதன் அடிப்படையில் தமிழ்த்தேசியத்தின் பங்காளியாக இருப்பதற்கு தமிழன் என்ற இன அடையாளம் போதுமானது என்ற அடிப்படை புரிதலை நாம் உணர்தல் வேண்டும்.
இரண்டாவது, தமிழ்த்தேசியம் என்பது தமிழ் இனத்தின் உணர்வு வெளிப்பாடாக காணப்படுகின்ற போதிலும் சில தமிழ்த்தேசிய விரோதிகள் மற்றும் தமிழ்த்தேசிய கொள்கையை பயன்படுத்தி இலாபம் ஈட்ட முயற்சிக்கும் கயவர்கள் தமிழ் மக்கள் மனதில் நாடு, பிரதேச, மத, சாதி பிரிவினைகளை தமிழ்த்தேசிய உணர்வுடன் முரண்பட செய்வதன் மூலம் தமிழ்த்தேசியத்தை பலவீனப்படுத்த முயல்கின்றனர்.
அதேசமயம், தமிழ்த்தேசியம் பற்றிய தெளிவான புரிதல் அற்ற சில தமிழர்கள் தனிப்பட்ட ரீதியில் பெற்றுக்கொண்ட நாடு, சாதி, மத, பிரதேச பிரிவினைவாத வெறுப்புகளை தமிழ்த்தேசிய உணர்வுடன் ஒப்பீடு செய்வதன் மூலமாக தமிழ் இன உணர்வினை தமது தனிப்பட்ட சமூக பிரச்சனைகளின் அடிப்படையில் பலவீனப்படுத்த முயல்கின்றனர்.
குறிப்பாக, தெற்காசியாவில் அதிகளவான தமிழர்கள் வாழும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், அண்மைக்காலமாக திட்டமிட்டு நாட்டுப்பற்றை தமிழ்த்தேசிய சிந்தனையுடன் முரண்பட செய்வதன் மூலம் தமிழர் எனும் இன அடையாளத்தை, நாடு எனும் அடிப்படையில் ஓர் குறித்த எல்லைக்குள் மட்டுப்படுத்த முயலும் பிரிவினைவாதிகள் இதனை மேலும் வலுப்படுத்த இலங்கைவாழ் இந்திய தமிழர்களின் பிரச்சனையை இந்திய, இலங்கை தமிழர் பிரச்சனை போல் சித்தரிக்க முயல்கின்றனர். இவ்வாறான பிரிவினைவாத சிந்தனையை ஓர் இனத்தில் இருந்து அகற்ற வேண்டுமாயின் மத, சாதி, நாடு பற்றை கடந்து தமிழன் என்ற இன உணர்வை உருவாக்க வேண்டும். உலகெங்குமுள்ள தமிழர்கள் இவ்வாறான பிரிவினைவாத உணர்வுகளில் இருந்து விடுபட ஒவ்வொரு தமிழன் மத்தியிலும் ஓர் அடிப்படை புரிதல் உருவாக வேண்டும். தமிழ்த்தேசியம் என்பது தமிழ் இனத்தின் பாதுகாப்பை நோக்காக கொண்ட ஓர் உணர்வு வெளிப்பாடு இதில் தனிப்பட்ட சாதி, மத, பிரதேச, நாடு என்ற பேதம் கிடையாது.
“பிறப்பால் நீ தமிழன் எனின் தமிழ்த்தேசியத்திற்கு நீ உரித்துடையவன்” என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர்தல் வேண்டும். தமிழன் என்ற இன அடையாளமே தமிழ்த்தேசியம் என்ற சிந்தனையை உருவாகியுள்ளது என ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து கொள்வதன் மூலமாக, தமிழ்த்தேசியம் என்பது உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் உள்ளடக்கிய ஓர் வலுவான சிந்தனையாக தன்னை வடிவமைத்து கொள்வதுடன் இதன் மூலம் உலகெங்குமுள்ள தமிழர்களின் கருத்துக்களை ஒரு புள்ளியில் ஒன்றிணைக்க கூடிய ஒர் களத்தையும் உருவாக்க வாய்ப்பளிக்கின்றது. இவ்வாறான உலக தமிழர் ஒன்றினைவு தமிழர்களின் உரிமை, பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடியதாகவும் உலக அரங்கில் ஓர் இனத்தின் உரிமை குரல் ஓங்கி ஒலிக்கவும் வழிவகுக்கும்.
மூன்றாவது, பல தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் தமிழ்த்தேசியத்தில் உள்ள குறைகளை மட்டுமே சுட்டி காட்டுவதில் அதிக அக்கறையுடன் செயற்படுகின்றார்களே தவிர்த்து அக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஆக்கபூர்வமான சிந்தனைகளை முன்வைக்க தவறுகின்றனர். இப்போக்கை மாற்றி தமிழ்த்தேசிய குறைபாடுகளுடன் அதனை நிவர்த்தி செய்யக்கூடிய வழிமுறைகளையும் சுட்டிக்காட்டுதல் தமிழ்த்தேசிய உணர்வினை பலவீனப்படுத்தாது வலுவான நிலையை பெற்றுக்கொள்ள உதவும்.
நான்காவது, இன்று பல தமிழ் அரசியல்வாதிகள், அரசியல் விமர்சகர்கள் யூத தேசியவாதத்துடன் தமிழ்த்தேசியத்தை ஒப்பிட்டு பேச முயல்கின்றனர். இது முற்றிலும் தவறான போக்கு அரசியல் என்பது காலம், புறச்சூழல், மக்களின் மனநிலை என்பவற்று ஏற்ப நாளாந்தம் மாற்றமடையக் கூடியது அந்தவகையில் தமிழ்த்தேசியம் என்பது, தனித்துமான வரலாற்று, கலாச்சார பின்புலம் கொண்ட மக்களின், உணர்வு வெளிப்பாடாக காணப்படுகின்றது. இதனை ஏனைய இன தேசியவாத எழுச்சிகளுடன் ஒப்பிடுவது தமிழ்த்தேசிய கருத்திலை பலவீனப்படுத்தி பல குழப்பங்கள் உருவாக வழிவகுக்கும். உதாரணமாக இன்றைய தமிழ்த்தேசிய தலைவர் யார்? யூதர்கள் அளவிற்கு பொருளாதார பலம் எமக்கு உண்டா? யூதர்களை போல் தமிழர் ஒற்றுமையானவரா? இக்காலத்திற்கு இது உகர்ந்ததா? என்ற பல குழப்பங்கள் காணப்படுகின்றன. யூத இனத்திற்கு எவ்வாறு ஓர் பாரம்பரியமான தனி சிறப்பான வரலாறு காணப்படுகின்றதோ அதற்கு சற்றும் தரம்தாழாத வகையில் தமிழர்களுக்கு தனிச்சிறப்பான வரலாற்று பின்புலம் காணப்படுகின்றது. தமிழர்களின் தமிழ்த்தேசிய பாதை என்பதை தனித்துவமானதாகவும் தற்காலத்திற்கு ஏற்ற வகையிலும் வடிவமைப்பதே சிறந்தது. யூத தேசியவாத சிந்தனைகளின் அணுகுமுறைகள், யூதர்கள் தமது தேசியவாத சிந்தனைகளை அடைவதற்காக மேற்கொண்ட உத்திகளை நாம் கற்றுக் கொள்வதற்கப்பால் தமிழ்த்தேசிய சிந்தனையுடன் யூததேசியவாதத்தை ஒப்பிடுவதை நிறுத்தி கொள்ளல் வேண்டும்.
ஒட்டுமொத்தமாக தொகுத்து நோக்குவோமாயின், உலகில் காணப்படுகின்ற தொன்மையான இனங்களில் தமிழ் இனமும் ஒன்றாகும், எனினும் இன்றுவரை தெற்காசிய மண்ணில் தமிழ் மக்களின் உரிமை தொடர்ச்சியாக பல்வேறு விதமான அடக்குமுறைகளின் கீழ் திட்டமிட்ட வகையில் இன அடையாளத்தை இழப்பதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டு வருவதை பழைய வரலாறுகளில் இருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறான இன அடையாள அழிப்பில் இருந்து தமிழர்கள் தம்மை பாதுகாத்து கொள்ளவும் அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும் தமிழ்த்தேசிய உணர்வின் அடிப்படையில் ஒவ்வொரு தமிழரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது. உலகில் ஏதோ ஒரு மூலையில் ஓர் தமிழன் பெற்றுக்கொள்ளும் வெற்றியை எம் இனத்தின் வெற்றியாக கொண்டாடும் அதே சமயம் ஒரு தமிழனின் உரிமை மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழ் இனமும் குரல் கொடுக்க கூடிய தூய தமிழ்த்தேசிய உணர்வினை உருவாக்க ஒவ்வொரு தமிழரும் சாதி, மத, பிரதேச, நாடு என்ற பிரிவினைவாத சிந்தனையிலிருந்து விடுபட்டு தமிழ் இன உணர்வின் அடிப்படையில் தமிழ்தேசிய பாதையில் பயணிப்பதன் மூலமாக மட்டுமே தமிழ் இன இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
-சு. பிரஜீவன்ராம்-