இலங்கை பிரதான செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மோகனுக்கு விளக்க மறியல்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவரும் செங்கலடி செல்லம் சினிமா குழுமத்தின் உரிமையாளருமான கணபதிப்பிள்ளை மோகனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மோகன், செங்கலடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த 2ஆம் திகதி ஏறாவூர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் காவற்துறையினர் தெரிவித்திருந்தனர்.

2019 ஆண்டு முதல் கணபதிப்பிள்ளை மோகனின் பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களை ஆராய்ந்ததில் பெரும்பாலான பதிவுகள் மற்றும் பகிர்வுகள் வெளிநாட்டில் இருந்து டேக் செய்தவர்களின் பதிவுகள் எனவும் அவற்றில் அதிகமானவை தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தவையாக இருந்தமையால் அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும் காவற்துறையினர் மேலும் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, மோகனிடமிருந்து நவீன கணினி மற்றும் அலைபேசி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளை மோகன் பதிவேற்றியுள்ளார் எனவும் சந்தேகநபருக்கு சொந்தமான இணையவழி கணக்குகளை சோதனைக்குட்படுத்திய போது அவர் அத்தகைய கருத்துகளை பதிவேற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மோகனது கைது தொடர்பில் காவற்துறைப் பேச்சாளர் பிரதிப் காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

மோகன் 74 மணித்தியாலங்கள் ஏறாவூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் அவருக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி ஏ.இளங்கோவனினால் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நேற்று முன்தினம் (05.05.21) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் மோகன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவ்வேளையில், சந்தேகநபரான மோகனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிவான் கறுப்பையா ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.