இலங்கை பிரதான செய்திகள்

மே.18 நினைவேந்தலை செப நாளாக அனுசரிக்க அழைப்பு

போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு-கிழக்கு ஆயர்களாகிய
நாம் மே 18ம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்கும்படியாக தமிழ் மக்கள் அனைவரையும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம் என  வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அழைப்புவிடுத்துள்ளது.


இதுதொடர்பில் போரில் கொல்லப்பட்டோரை நினைவுகூரும் தினம் என்ற தலைப்பில் மன்றம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;


மே மாதம் 18ஆம் திகதி இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் பன்னிரண்டாவது ஆண்டு நிறைவாகும். இறுதிப் போரின் போது கொல்லப்பட்டவர்களுக்கு இறுதிக் கிரிகைகள்கூட செய்யமுடியாது புதைத்துவிட்டு தப்பிப் பிழைத்து வந்தவர்களும், அதற்கு சாட்சிகளாக இருக்கும் ஏனையவர்களும் உயிரிழந்தவர்களை கண்ணீரோடு நினைவுகூரும் நாளாகும்.


இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையுடைய நாளாகவும் அந்நாள் இருக்கின்றது. படுகொலை செய்யப்பட்டவர்கள் அனுபவித்த வேதனைகளும் துன்பங்களும் விடுதலை வாழ்வுக்கு தொடர்ந்து பங்களிப்புச் செய்கின்றன.


இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு-கிழக்கு ஆயர்களாகிய நாம் மே 18ம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்கும்படியாக வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம்.


அத்துடன் இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக நடைபெற்ற போரிலும் குழப்பங்களிலும் தமது உயிர்களை இழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து செபிக்கும்படியாகவும் கேட்டுநிற்கின்றோம்.


அனைத்துப் பங்குத் தந்தையர்களையும், துறவறக் குழுமங்களையும், மத நிறுவனங்களுக்குப் பொறுப்பானவர்களையும் பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திகதி: மே 18 2021 செவ்வாய்க்கிழமை
மாலை 6 மணி – ஆலயங்களில் மூவேளை செப மணியோசை எழுப்புதல்
மக்களை செபிக்க அழைத்தல்.
ஈகைச் சுடர் ஏற்றுதல்
இரண்டு நிமிட அக வணக்கம்
இறந்தோர், பாதிக்கப்பட்டோர், துன்புறுவோரை நினைத்து மௌன செபம்.

மாலை 6.15  இறந்தோரை நினைவுகூர்ந்து துக்க மணி ஓலித்தல் (கோவிட் 19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும்)
இவ்வேளையில் மக்கள் தங்கள் இல்லங்களில் இருந்தவாறு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செய்யவும் செபிக்கவும் அறிவுறுத்தவும்.

(கையொப்பங்கள்)
பேரருட்திரு கி. நோயல் இம்மானுவெல்
திருகோணமலை மறைமாவட்ட ஆயர்.

பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்.

பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ –
மன்னார் மறைமாவட்ட ஆயர்.

பேரருட்திரு யோசப் பொன்னையா –
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.