யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் ஊரடங்கு வேளையில் திருமண நிகழ்வை நடத்திய நிலையில் திருமணத்தில் கலந்து கொண்ட 13 சிறுவர்கள் உள்ளிட்ட 35 பேருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.
காரைநகர் பகுதியில் கடந்த 1ஆம் திகதி , ஊரடங்கு அமுலில் உள்ள வேளை பந்தல் அமைந்தது திருமண நிகழ்வு நடைபெற்றது. குறித்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் சுகாதார விதிமுறைகளை பேணாது நடந்து கொண்டுள்ளனர்.
அதேவேளை திருமணத்தில் எடுத்துக்கொண்ட குழு புகைப்படங்கள் உள்ளிட்ட படங்களையும் முகநூலில் அன்றைய தினமே திருமணத்தில் கலந்து கொண்ட ஒரு சிலர் பகிர்ந்து கொண்டனர்.
அதில் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காது பலர் திருமணத்தில் கலந்து கொண்டமை உறுதியானதை அடுத்து சுகாதார பிரிவினர் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் திருமணத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தினர்.
அதேவேளை ஊரடங்கு அமுலில் உள்ள வேளை சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் நடாத்தப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சுகாதார பிரிவினர் வழக்கு தாக்கல் செய்தனர்,
அதன் அடிப்படையில் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக கடந்த செவ்வாய்க்கிழமை திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் 5 வயது தொடக்கம் 15 வயதுக்கு உட்பட 13 சிறுவர்கள் உள்ளடங்கலாக 35 பேருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க முயன்ற போது . சுகாதார வைத்திய அதிகாரி , பொது சுகாதார பரிசோதகர் ஆகியோரை தாக்க முற்பட்டு அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் 03 பேர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.