(க.கிஷாந்தன்)
மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் இன்று மதியம் (08) திறக்கப்பட்டுள்ளது என பிரதான பொறியியலாளர் ஆர்.எம். வத்சல தெரிவித்தார்.
நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் தலா 15 செ.மீற்றர் வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக வினாடிக்கு 69 கனமீற்றர் வீதம் நீர் வெளியேறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயரும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.