அமெரிக்க புலனாய்வு நிறுவனமான FBI சேர்வர்களில் ஒன்றுக்குள் ஊடுருவி ஆயிரக்கணக்கானோருக்கு, சைபர் தாக்குதல் நடப்பதற்கான சாத்தியம் குறித்து எச்சரிக்கை மின்னஞ்சல்களை அனுப்பிய ஹேக்கர்கள் பற்றிய விசாரணையை புலனாய்வாளர்கள் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை காலையில் இது குறித்து கருத்து வெளியிட்ட FBI, இது தங்களுடைய விசாரணையின் அங்கம் என்று கூறியது. ஆனால், மேற்கொண்டு எந்த தகவலையும் அதன் அதிகாரிகள் வெளியிடவில்லை. அமெரிக்காவின் உள்துறை பெயரில் இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. “அவசரம்: கணினி அமைப்பில் அச்சுறுத்தல்” என்ற தலைப்பில் இந்த அச்சுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், ஸ்பாம்ஸ் என்ற லாபநோக்கமற்ற ஸ்பாம் மின்னஞ்சல்களின் செயல்பாட்டை கண்காணிக்கும் அமைப்பின் கூற்றுப்படி, “டார்க் ஓவர்லார்ட் என்ற, மிரட்டிப் பணம் பறிக்கும் குழுவின் நவீன சங்கித்தொடர் சைபர் தாக்குதலுக்கு நீங்கள் இலக்கு என்று மின்னஞ்சல்களில் எச்சரிக்கப்பட்டிருந்தது.”
“இந்த மின்னஞ்சல்கள் FBI ஐயின் உள்கட்டமைப்பில் நிறுவப்பட்ட சேர்வர்களில் ஒன்றில் இருந்து நேரடியாக சென்றதால் இந்த மின்னஞ்சல் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த மின்னஞ்சல்களின் தலைப்பகுதியில் FBI மின்னஞ்சல் டொமைன் குறியீடு இருந்ததாகவும் அதை அனுப்பியவர் யார் அல்லது தொடர்பு விவரம் எதுவும் மின்னஞ்சலில் இல்லை,” என்றும் ஸ்பாம்ஸ் அமைப்பு கூறியுள்ளது.
அமெரிக்க ஊடகங்கள், இத்தகைய எச்சரிக்கை மின்னஞ்சல்கள் ஒரு லட்சம் பேருக்காவது அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், FBI அமைப்பு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “@ic.fbi.gov என்ற முகவரியில் இருந்து காலையில் அனுப்பப்பட்ட போலி மின்னஞ்சல்கள் பற்றி அறிந்துள்ளோம்,” என்று கூறியுள்ளது.
மேலும், “மின்னஞ்சல்கள் பற்றி தெரிய வந்ததுமே, அது செல்வதற்கு காரணமான வன்பொருளின் இணைப்பு இணையத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு, அறியப்படாத அனுப்புநர்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறும் சந்தேக செயல்பாடு பற்றி ic3.gov or cisa.gov என்ற இணையதளத்தில் தொடர்பு கொண்டு தகவல் தரவும் பொதுமக்களை ஊக்குவிக்கிறோம்,,” என்று FBI கூறியுள்ளது.
சலசலப்புக்கு காரணமான மின்னஞ்சல்கள், FBI சேர்வருக்குள் எளிதாக நுழைந்து தனி நபர் அனுப்பினாரா அல்லது இதில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டியுள்ளார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
ஏற்கெனவே சைபர் தாக்குதலுக்கு இலக்கான அரசுத்துறைகள்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அமெரிக்க அரசுத்துறைகளில் மிகப்பெரிய அளவில் சைபர் தாக்குதல் நடந்து கொண்டிருந்ததை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த தாக்குதலால், அமெரிக்காவின் அரசு முகமைகள், முக்கிய அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆபத்தில் இருப்பதாக, அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்தனர்.
அமெரிக்க நிதித்துறை மற்றும் வணிகத் துறையும் அந்த சைபர் தாக்குதலுக்கு இலக்காயின. அப்போது, இதுபோன்ற சைபர் தாக்குதலைத் தடுப்பது மிகவும் சிக்கலானது என, அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்புப் பாதுகாப்பு முகமை (சி.ஐ.எஸ்.ஏ) கூறியிருந்தது.
ஆரம்பத்தில் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அமெரிக்காவில் பலரும் சந்தேகம் எழுப்பினர். ஆனால் ரஷ்யா அதை திட்டவட்டமாக மறுத்தது.
முன்னதாக, சிஐஎஸ்ஏ செய்திக்குறிப்பில் இத்தகைய தாக்குதல், குறைந்தபட்சமாக 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கி இருக்கலாம் என கூறியிருந்தது.
ஆனால், இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? எந்த முகமைகள் மற்றும் அமைப்புகள் மீது இந்த தாக்குதல் நடந்தது, என்ன மாதிரியான விவரங்கள் திருடப்பட்டன அல்லது வெளிப்பட்டன என எதையும் சி.ஐ.எஸ்.ஏ அமைப்பு கண்டுபிடிக்கவில்லை.
இத்தகைய சூழலில் தற்போது அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ பெயரிலேயே லட்சக்கணக்கில் மின்னஞ்சல்கள் அனுப்பியிருப்பது பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.
BBC