நீதி அமைச்சர் அலி சப்ரி அந்த பதவியில் உறுதியில்லாதவராக இருப்பதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அரசாங்கத்திலிருந்து கொண்டு, அவரது சமூகத்துக்கு எதிராகச் செயற்பட முடியாது என்பதால், நீதி அமைச்சுப் பதவியை துறந்து வர வேண்டும் என தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நீதி அமைச்சர் அலி சப்ரி அந்த பதவியில் உறுதியில்லாத நிலையிலேயே இருக்கிறார்.
நீதி அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகப்போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அலி சப்ரி நினைத்தால் பதவியிலிருந்து விலக முடியும். ஆனால் அதனை எவ்வாறு செய்வதென்று அவருக்கு தெரியவில்லை என்றார். 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டப்பட்ட சந்தேகநபரான கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கர்ன்னகொட வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாவதாகவும் கூறினார்.
நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்த, இன்னொரு வழக்கில் சந்தேகநபராக உள்ள ஞானசார தேரரை ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு நீதி அமைச்சர் எதிர்ப்பை தெரிவித்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றார். சுயமரியாதைய விரும்பும் எந்தவொரு தமிழரும் இந்த ஜனாதிபதி செலயணியில் இருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்த சுமந்திரன், அதிகார பரவலாக்கலை வழங்குவதாக ஐ.நாவுக்கும் இந்தியாவுக்கும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இருக்கும் போது வழங்கிய வாக்குறுதிகளையும் சுட்டிக்காட்டியதோடு, இவ்வாறான நிலையில் ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி அநீதியானது எனவும் சாடினார். நீதி அமைச்சர் அலி சப்ரி இது தொடர்பில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அரசாங்கத்திலிருந்து கொண்டு உங்கள் சமூகத்துக்கு எதிராக செயற்பட முடியாது. எனவே, நீதி அமைச்சுப் பதவியை துறந்து வர வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்திரன் குறிப்பிட்டுள்ளார்.