கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்கள் மீட்கப்பட்ட வீடு அதனை அண்டிய சூழலில் சோதனை நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டுள்ளனர். இத்தேடுதல் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர் காவல்துறை தடயவியல் பிரிவு இராணுவத்தினர் என பலரும் மோப்பநாய் சகிதம் பங்கேற்றுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட காரைதீவு கொம்புச்சந்தி பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை காவல்துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை (14)மாலை மீட்டிருந்தனர்.
இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 9 எம்.எம். கைத்துப்பாக்கியே இவ்வாறு மீட்கப்பட்டது.
காரைதீவு கொம்புச்சந்திக்கருகாமையில் உள்ள வீடொன்றில் காவல்துறைக் குழுவினர் தேடுதலை மேற்கொண்டு இந்த கைத்தூப்பாக்கி மற்றும் மகசின்களை மீட்டிருந்தனர்.குறித்த வீட்டினுள் குறித்த துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் 44 வயது மதிக்கதக்க சந்தேகநபா் ஒருவா் கைதாகியுள்ளதுடன் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் மகசின்கள் சம்மாந்துறை காவல்துறையினா் எடுத்து சென்றுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினா் மற்றும் இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.கைதாகிய சந்தேக நபர் சிறிது காலம் தாதிய உத்தியோகத்தராகவும் கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளுடனும் நெருங்கி செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை குறித்த சந்தேக நபர் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை ரூபா 5 இலட்சத்திற்கு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.