இலங்கை கடன் நெருக்கடி: சீன வெளியுறவு அமைச்சரிடம் கோட்டபய வைத்த முக்கியக் கோரிக்கை!
இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக இலங்கைக்குசென்றுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கையுடனான உறவை மேம்படுத்தும் நோக்கிலான பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியதுடன், சில திட்டங்களையும் திறந்து வைத்தார்.
இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவு தொடங்கி, 65 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில், சீன வெளிவிவகார அமைச்சர், நேற்றிரவு இலங்கை வந்தடைந்தார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட சீன வெளிவிவகார அமைச்சரை, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ விமான நிலையத்தில் வரவேற்றிருந்தார்.
இவ்வாறான நிலையில், இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு 65 ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், கொழும்பு துறைமுக நகரில் சில திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன.
சீனாவின் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகர் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி நடைபாதை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
500 மீட்டர் நீளத்தை கொண்ட, கடலுக்கு நடுவில் இந்த உடற்பயிற்சி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இது இன்று முதல் மக்கள் பார்வைக்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், துறைமுக நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறு படகு பிரிவும் நேற்றைய தினம் (09.01.22) திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளின் பின்னர், சீன வெளிவிவகார அமைச்சர், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
பிரதமருடனான சந்திப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யிற்கும் இடையிலான சந்திப்பு, அலரிமாளிகையில் இன்று இடம்பெற்றது.
சீனாவில் மருத்துவ கல்வி பயின்று வந்த இலங்கை மாணவர்கள், மீண்டும் அங்கு செல்வதறான வசதிகளை செய்து தருமாறு பிரதமர், சீன வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமது கல்வியை நிறைவு செய்வதற்காக இந்த மாணவர்கள் காத்திருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை பூர்த்தி செய்து தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, இந்த விடயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி, அதற்கான நடவடிக்கைகளை பூர்த்தி செய்யுமாறு, சீன வெளிவிவகார அமைச்சர், கொழும்பிலுள்ள சீன தூதுவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சீனாவில் இறுதி ஆண்டு மருத்துவ கல்வியை தொடரும் 400 மாணவர்கள் உள்ளடங்களாக 1,200 மருத்துவ மாணவர்கள் சீனாவிற்கு செல்ல காத்திருக்கின்றனர்.
கோவிட் பரவல் காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால், இந்த மாணவர்கள் சீனா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், கோவிட் தடுப்பூசி திட்டத்திற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குகின்றமை, துறைமுக நகர் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான முதலீடுகளை செய்கின்றமை, சீனா – இலங்கை நாடுகளுக்கு இடையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்திக் கொள்கின்றமை, இலங்கையின் ஏற்றுமதியை அதிகரிக்கின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில், பௌத்த மற்றும் கலாசார தொடர்புகளை மேம்படுத்திக் கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நான்கு உடன்படிக்கைகள் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளன.
- பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கை
- கொழும்பில் குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கான நிவாரண வீட்டுத் திட்டம் தொடர்பிலான பரிமாற்றுக் கடிதம்.
- பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டத்தை ஒப்படைக்கும் சான்றிதழ்.
- சிறுநீரக நோய்க்கான நடமாடும் பரிசோதனை அம்பியுலன்ஸ்களுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான திட்டத்தை ஒப்படைக்கும் சான்றிதழ்.
இலங்கைக்கு தேவையான உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்க சீனா தொடர்ந்து செயற்படும் என சீன வெளிவிவகார அமைச்சர், பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யிற்கும் இடையிலான சந்திப்பு, ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
கோவிட் தொற்றிலிருந்து இலங்கை மக்களை காப்பாற்றுவதற்காக சீனாவினால், பொருட்கள் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டமைக்கு ஜனாதிபதி, சீன வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சீனாவின் நெருங்கிய நட்பு நாடு இலங்கை என நினைவுப்படுத்தி சீன வெளிவிவகார அமைச்சர், இலங்கைக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் உதவி வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
சுற்றுலாத்துறைக்காக இலங்கை திறக்கப்பட்டுள்ளதாக கூறிய ஜனாதிபதி, சீன சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவிட் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு, கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பது குறித்து அவதானம் செலுத்த இயலுமானால், அது நாட்டிற்கு பாரிய பங்களிப்பாக இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.
அத்துடன், சீனாவினால் முன்னெடுக்கப்படும் இறக்குமதி நடவடிக்கைகளின் போது, நிவாரண அடிப்படையிலான வர்த்தக கடன் நடைமுறையொன்றை பெற்றுக்கொள்ள முடியுமாயின், தடையின்றி தொழிற்சாலைகளை நடத்திச் செல்ல அது உதவியாக இருக்கும் என ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
- ரஞ்சன் அருண் பிரசாத்
- பிபிசி தமிழ்