விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று காலை சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது சாட்சியம் வாக்குமூலம், தமிழில் இருந்து சிங்கள மொழிக்கும், சிங்களத்தில் இருந்து தமிழ் மொழிக்கும் உரை பெயர்ப்பு செய்யப்பட்டாலும், இறுதியில் தான் கையெழுத்திடுவதாயின், அந்த ஆவணம் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என ஆணைக்குழு விசாரணையாளர்களுக்கு அறிவித்ததால், விசாரணை இடை நடுவில் நிறுத்தப்பட்டு, பிறிதொரு உசிதமான தினத்தில் நடத்த முடிவாகியது.
“கடந்த அரசுக்கு முந்தைய அரசின் அமைச்சர்களின் மீது எப்படி ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுத்தீர்கள்” என்று விசாரிக்கும் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு மனோ அழைக்கப்பட்டார். கடந்த வருட இறுதியில், மனோவின் வசிப்பிட வலய காவல் நிலையம் மூலமாக அவருக்கு சிங்கள மொழியில் அழைப்பாணை அனுப்பட்ட போது, தமிழில் அனுப்பும்படி அந்த அழைப்பாணையை அவர் திருப்பி அனுப்பி இருந்தார். தற்போது தமிழ் மொழிபெயர்ப்புடன் அழைப்பாணை அனுப்ப பட்டபோது, அதை ஏற்றுக்கொண்டு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று காலை சென்ற போது மீண்டும் ஒரு சட்டசிக்கலை அவர் சுட்டிக்காட்டி கையெழுத்திட மறுத்துள்ளார்.
இது பற்றி மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியதாவது,
நாட்டின் மொழிச்சட்டம், மொழிக்கொள்கை ஆகியவற்றுக்கும் ம் பொறுப்பு கூறும் அமைச்சரவை அமைச்சராக நான் இருந்தேன். என்னிடமே மொழிச்சட்ட மீறலா? விசாரணை இடைநடுவில் நிறுத்தப்பட்டு, பிறிதொரு உசிதமான தினத்தில் நடத்த முடிவானபோது, “நாங்கள் மீண்டும் மிகப்பலமாக வெகு சீக்கிரம் வரப்போகிறோம். ஆகவே இந்த விசாரணை கோமாளித்தனங்களை எல்லாம் சீக்கிரம் நடத்தி முடியுங்கள்”, என்றும் கூறிவிட்டு வந்தேன்.
இலங்கை அரசியலமைப்பில் 4ம் அத்தியாயம் 22 ம் பிரிவில், ஒவ்வொரு பிரஜைக்கும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய ஏதாவது ஒரு தேசிய மொழிகளில் தாம் விரும்பியவாறு வாய்மொழி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் பதில்களை பெற உரிமை இருக்கிறது. நான் இன்று விசாரனைகளுக்கு சென்ற போது, பாராளுமன்ற வாய்மொழி உரைபெயர்ப்பாளரை அங்கே அழைத்து வைத்திருந்தார்கள்.
நான் சிங்கள அழைப்பாணையை திருப்பி அனுப்பி இருந்தமையால் அதை செய்து இருந்தார்கள். அவர் எனக்கும், விசாரணையாளர்களுக்கும் இடையில் உரை பெயர்ப்பு செய்தார். எனது வாக்குமூலம் சிங்கள மொழியில் தட்டச்சு செய்யப்பட்டது.
ஆனால், விசாரணையின் இடையில், “எனது வாக்குமூலத்தில் நான் கையெழுத்திட வேண்டுமா?” எனக்கேட்டேன். “ஆம்” என்றார்கள். “அப்படியானால், தமிழில் ஆவணத்தை தயார் செய்யுங்கள்” என்றேன். அந்த இடத்தில் தமிழில் கணிப்பொறி தட்டச்சு செய்ய அலுவலர் அங்கே இல்லை என்பதால், விசாரணையை இடை நிறுத்துவிட்டு வெளியேறினேன்.
“குற்றவியல் கோவையின் படி, சிங்களத்தில் ஆவணம் தயார் செய்ய முடியும், அதை உரைபெயர்ப்பாளர் எனக்கு எடுத்து சொன்னால் போதும்” என எனக்கு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் வகுப்பு எடுக்க முற்பட்டார். அவரிடம் குற்றவியல் சட்டம் உட்பட எந்தவொரு சட்டமும், நாட்டின் அரசமைப்புக்கு கீழேயே கணிக்கப்பட வேண்டும். உரைபெயர்ப்பு வேறு, மொழிபெயர்ப்பு வேறு. இரண்டையும் எனது தாய்மொழியில் பெற எனக்கு நாட்டின் அரசமைப்பின் 4ம் அத்தியாயம் 22 ம் பிரிவின்படி உரிமை உள்ளது என்றும் நான் கூறியவுடன் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைதியானது.
மேலும் இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவே, இதை நியமித்தவரை போன்று நகைச்சுவையாக இருக்கிறது. உலகில் எங்கும் ஊழல் திருட்டைதான் விசாரிப்பார்கள். அதில் ஒரு தர்க்க நியாயம் உண்டு. இங்கே “ஊழல் திருட்டை ஏன் எப்படி விசாரித்தீர்கள்” என கேட்டு இவர்கள் விசாரிக்கிறார்கள். இது இந்நாட்டிற்கே சிறுமை.
கடந்த அரசுக்கு முந்தைய அரசின் அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளை இந்த நாட்டு பொலிஸ் திணைக்களம்தான் முன்னெடுத்து, வழக்குகளை இந்த நாட்டின் சட்டமாதிபர்தான் தொடர்ந்தது. இன்று இதுபோன்ற இன்னொரு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்து, அவற்றை அரசியல் பழிவாங்கல் என சொல்லி, அதே சட்டமாதிபருக்கு வழக்குகளை வாபஸ் வாங்க அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு, அதன் வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டு, குற்றசாட்டபட்டவர்கள் வெளியே வந்து விட்டார்கள்.
இப்போது, அது போதாது என்று, “உங்கள் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து எப்படி ஊழல் திருட்டை விசாரித்தீர்கள்” என இவர்கள் என்னை கேட்கிறார்கள். “நாம் சீக்கிரம் மீண்டும் மிகப்பலமாக வரப்போகிறோம். ஆகவே இந்த விசாரணை கோமாளித்தனங்களை எல்லாம் சீக்கிரம் நடத்தி முடியுங்கள்”, என்று இவர்களுக்கு நான் கூறிவிட்டு வந்தேன் எனத் தொிவித்தாா்