எக்கணமும் போர் வெடிக்கும் என்ற மேற்குலக பிரசாரங்களுக்கு பதிலடி உக்ரைன் எல்லையில் குவித்த படையினரில் ஒரு பிரிவினரைத் தளங்களுக்குத் திருப்பி அழைப்பதாக ரஷ்யா நேற்று தெரிவித்திருக்கிறது. கடந்த பல நாட்களாக நீடிக்கின்ற போர் பதற்றத்துக்குமத்தியில் முதல் முறையாக இவ்வாறு படைக்குறைப்பு அறிவிப்பை கிரெம்ளின்வெளியிட்டிருக்கிறது.
அதேசமயம் அதிபர் புடின் ஜேர்மனிய அதிபர் ஒலப் சோல்ஸுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போது, ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் ஐரோப்பாவுடன் தொடர்ந்து பேச்சு நடத்த விரும்புகிறார்என்று தெரிவித்திருக்கிறார்
ரஷ்யா உக்ரைனை இன்று புதன் கிழமைஆக்கிரமிக்கும் என்று அமெரிக்கத் தலைவர்களும், அடுத்த 48 மணிநேரத்தில் போர் வெடிக்கலாம் என்று பிாித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அடித்துக் கூறியிருந்த நிலையில் அதற்கு மாறாகப்பதற்றத்தைத் தணிக்கின்ற நடவடிக்கையில் ரஷ்யா இறங்கியிருப்பது அவதானிகளை ஆச்சரியத்துக்குள்ளாக்கி இருக்கிறது.
“இதில் புதிதாக ஒன்றும் இல்லை.போர்ப்பயிற்சி ஒத்திகை முடிவடைந்தவுடன் படைகளைத் தளங்களுக்குத் திருப்பி அழைப்போம் என்று நாங்கள் ஏற்கனவே கூறிவந்தோம். இது ஒரு வழமையானநடவடிக்கை” – என்று கிரெம்ளின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov)செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
ரஷ்யாவின் அறிவிப்பை எச்சரிக்கையுடன் அவதானிப்பதாக நேட்டோ தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் படைக் குறைப்பு அறிவிப்பு வெளியாகிய சிறிது நேரத்தில், உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சின் இணையத். தளங்கள் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
எல்லையில் இருந்து படைகள் திருப்பிஅழைக்கப்படுவது களத்தில் ஆதாரபூர் வமாகத் தெரியவரும்வரை ரஷ்யாவின் பேச்சை நம்பத்தயாரில்லை என்று நேட்டோ அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். ரஷ்யாவின் இந்த அறிவிப்புக்குப்பிறகு பேசிய அமெரிக்க அதிபர் ஜோபைடன், உக்ரைன் தாக்கப்படுவதற்கு இன்னமும் வாய்ப்பு இருக்கிறது என்றுகூறியிருக்கிறார். படைகளைத் திருப்பிஅழைப்பது நல்ல விடயம். ஆனால் களத்தில் இன்னமும் நாங்கள் அதனை உறுதிசெய்யவேண்டி உள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆதாரபூர்வமான தகவல்களுக்காகக் காத்திருப்பதாக பிரான்ஸும் தெரிவித்திருக்கிறது. போர் மூளும் என்ற அச்சத்தில் பிரான்ஸைத் தவிர அமெரிக்கா பிாித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் அநேகமான ஐரோப்பிய நாடுகளும் தத்தமது குடிமக்களை உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு கேட்டிருந்தன. இந்தியா அதன் பிரஜைகளை வெளியேறக் கோரும் அறிவிப்பை நேற்று விடுத்திருந்தது.
——————————————————————
குமாரதாஸன். பாரிஸ்.16-02-2022