யாழ் மாவட்டத்தில் வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கிற்கான பிறீமா மா விநியோகஸ்தருடன் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதில் யாழில் வெதுப்பக உற்பத்தி விநியோகத்திற்கான மாவின் அளவை குறைப்பதாக தெரிவித்திருந்தார்கள்
அதன் போது, நாம் எமக்கு வழங்கப்படும் மாவின் அளவினை குறைக்க வேண்டாம் என கோரியிருந்தோம். ஆனாலும் அவர்கள் எதிர்வரும் நாட்களில் யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்ற மாவின் அளவினை உடனடியாக குறைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக யாழ் மாவட்டத்தில் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் உற்பத்தி அளவினை குறைக்கவுள்ளோம்.
யாழ் மாவட்ட செயலர் மற்றும் கூட்டுறவு ஆணையாளரின் வழிகாட்டுதலின்படி நாம் செயற்படுகிறோம். அவர்களுடன் கலந்துரையாடி எமக்கு வழங்கப்படும் மாவின் அளவை தொடர்ந்து பெற்று தருமாறு கோரவுள்ளோம். இந்த விடயங்கள் தொடர்பில் மாவட்ட செயலருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்திருக்கின்றோம்
அதன் பின்னரும் மா வழங்கப்படாவிட்டால் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலைமை ஏற்படும் அத்தோடு எரிபொருள் பிரச்சனையும் தற்போது காணப்படுகின்றது. எனவே வெதுப்பகங்கள் தொடர்ச்சியாக இயங்குவதற்கு மாவட்ட செயலர் மற்றும் கூட்டுறவு ஆணையாளர் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.யுத்த காலத்தில் கூட நாம் தொடர்ச்சியாக பொது மக்களுக்கான வெதுப்பக உற்பத்தி பொருட்களை வழங்கி இருந்தோம் ஆனால் தற்போதுள்ள நிலையில் அவ்வாறு செயற்பட முடியாது நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்