யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர்களின் விநியோகம் தொடர்பாக பாவனையாளர் அதிகார சபையினால் விசேட அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தியோகத்தர்களால் மாவட்ட இணைப்பதிகாரியின் தலைமையில் இன்று திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டு லிட்ரோ மற்றும் லாப்ஸ் எரிவாயு சிலிண்டர் முகவர்களினை சந்தித்து சில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளனர்.
அதன்படி, எரிவாயு விநியோகத்தில் விநியோகத்தின் விபரங்களை அதிகாரசபையினால் வழங்கப்பட்ட படிவத்தினை நிரப்புவதன் மூலம் பெறவேண்டும், பிரதேசரீதியாக தங்களிடம் இருப்பிலுள்ள எரிவாயுக்களை பிரித்து முகவர்களே பங்கீட்டு அட்டைமுறையில் வழங்குதல் வேண்டும்,இயன்றவரை வியாபார நிலையங்களுக்கு இருப்பிலுள்ள மூன்றில் ஒரு பகுதியையேனும் வழங்க முன்வரவேண்டும்,பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவகையில் விநியோக இடத்தில் விநியோகிக்க வேண்டும்,எரிவாயு விநியோகம் தொடர்பான அறிவுறுத்தல் பலகை காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் பரிசோதிக்கப்பட்டதுடன், முறைகேடான வியாபார நிலையங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் எரிபொருள் நிலையங்கள் பரிசோதனை செய்யப்பட்டு இருப்புக்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.