ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று காலை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த பதவிப் பிரமாண நிகழ்வை தேசிய தொலைக்காட்சி வலையமைப்புடன் இணைந்து ஏனைய தொலைக்காட்சி சேவைகள் ஒளிபரப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுத்திருந்தன. எனினும், ஜனாதிபதி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததையடுத்து நேரடி ஒளிபரப்பு தடைபட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்படும் போது, மின்பிறப்பாக்கிகள் இரண்டு முதல் மூன்று வினாடிகளுக்குள் இயக்கப்படும்.
ஆயினும், புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வின் போது குறைந்தது 10 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வினை நேரலையில் ஒளிபரப்ப தேசிய தொலைக்காட்சி வலையமைப்பினால் முடியாது போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.