Home இலங்கை நல்லூர் மகோற்சவ காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விதிகள்

நல்லூர் மகோற்சவ காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விதிகள்

by admin

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளநிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால் விளக்கமளிக்கப்பட்டது.

மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் மாநகர சபையில் இடம்பெற்றது.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெற்ற நல்லூர் மஹோற்சவம் வழமைபோன்று அதாவது 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு எவ்வாறு உற்சவம் நடந்ததோ அதேபோல இம்முறை இடம்பெறுமென யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கு பின்னர் நல்லூர் ஆலயப் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

ஓகஸ்ட் 1ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஓகஸ்ட் 29 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும்.

ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது. அதேபோல வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவு செய்ய முடியாது.

காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது. ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக்  நிறைவேற்ற வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும்.

 அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும்.

முகக்கவசங்களை அணிவது சட்டமாக்கப்படவில்லை. இருந்த போதும் கொரோனா எச்சரிக்கை காணப்படுவதால் முகக்கவசங்களை அணிந்து தன்னெழுச்சியாக சுகாதார விதிமுறைகளை பக்தர்கள் பின்பற்றவேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது சுகாதாரத்தில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும்.

திருட்டுச் சம்பவங்களை தவிர்க்க நல்லூர் ஆலயச்சூழலில் யாழ் மாநகர சபையினால் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர்,மாநகர அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More