முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கான வெளிநாட்டு பயணத் தடை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இலங்கை வணிக சபையின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்ட சில தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மீளவும் இலங்கைக்கு திரும்பாமல், சிங்கபூரில் இருந்து தாய்லாந்து செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ரொய்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஸ இலங்கை திரும்புவதற்கு தற்போது உகந்த நேரம் அல்ல என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், அதனை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினரும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.