சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற சிறுவர்கள் உட்பட 8 பேர் கடற்படையினரால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(13) இரவு பேசாலை -தலைமன்னார் கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரின் விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 3 இளைஞர்களும், பெண்களும்,18 வயதிற்கு குறைவான 3 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனா். கைதுசெய்யபட்டவர்கள் வவுனியா,திருகோணமலை மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் கடற்படை ஊடாக பேசாலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகளின் பின்னர் அவா்கள் நேற்று புதன்கிழமை(14) மாலை மன்னார் நீதிமன்றத்தில்முன்னிலைப் படுத்தப்பட்டனர்.
-இதன் போது மன்னார் நீதவான் 18 வயதிற்கு மேற்பட்ட 5 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையிலும்,ஏனைய 18 வயதுக்கு குறைந்த 3 பேரையும் நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்தார்.
-மீண்டும் குறித்த விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி (14-12-2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.