சட்டவிரோதமாக எல்லை மீறி மீன் பிடித்த தமிழக மீனவர்கள் மூவருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து , அதனை 10 வருடங்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று ஒத்தி வைத்துள்ளது.
கடந்த 20ஆம் திகதி நெடுந்தீவு கடற்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் மறுநாள் நீரியல் வளத்துறை அதிகாரிகளால் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து நேற்றைய தினம் புதன்கிழமை வரையில் அவர்களை விளக்க மறியலில் தடுத்து வைக்க மன்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , மூவருக்கும் 18 மாத சிறைத்தண்டனை விதித்து , அதனை 10 ஆண்டு காலத்திற்கு ஒத்தி வைத்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அதேவேளை மீனவர்களின் படகு தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக குறித்த வழக்கு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.