முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்க அரச புலனாய்வு சேவைகள் (SIS) தீர்மானித்துள்ளதாக வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நேற்று (25.11.22) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், எந்தவொரு தனிநபருக்கும் பாதுகாப்பை வழங்குவது குறித்து SIS தீர்மானிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எம்.பியாக இல்லாத போது அவருக்கும் இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது, இது SIS எடுத்த தீர்மானம் என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார சுட்டிக்காட்டினார்.
பசில் ராஜபக்ச தற்போதைய அரசாங்கத்தின் ஆளும் கட்சியின் தேசிய அமைப்பாளர். எனவே, அத்தகைய நபருக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவது பாதுகாப்பு பிரிவினரின் பொறுப்பாகும்.
இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜகக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரின் சகோதரர் பசில், ஒரு அரசியல் கட்சியின் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர், மற்றும் அவருக்கு எதிராக பல்வேறு துறைகளில் கடுமையான எதிர்ப்பின் காரணமாக இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.